கடவுளின் இரக்கத்தையும் வாய்ப்புகளையும் உணர்ந்து பலன் தருவோம்!| குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம்  - இரண்டாம் வெள்ளி - I. தொநூ:  37:3-4,12-13,17b-28; II. தி.பா: 105:16-17.18-19.20-21; III. மத்: 21:33-43,45-46

அன்று கல்லூரித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. எல்லா மாணவர்களும் தேர்வு  முடிவுகளைக் கண்டு தாங்கள் தேர்ச்சி பெற்றதை எண்ணி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். அச்சமயத்தில் ஒரு பேராசிரியர் ஒரு மாணவரிடம் மிக வருத்தத்துடன் "இம்முறையும் நீ தேர்ச்சி பெறவில்லை. உன் பெற்றோரின் உழைப்பு, கிடைக்கப்பெற்ற நேரம், வாய்ப்புகளை தெரிந்தே உதாசீனப்படுத்துகிறாய். இதற்கு நீ கணக்குக் கொடுக்க வேண்டும்" என்று கூறிவிட்டுச் சென்றார். 

நமது தந்தையாம் கடவுள் வாய்ப்பளிக்கும் கடவுள். ஒரு முறை இரு முறைகள் அல்ல பல முறைகள் வாய்ப்புக்களைத் தருகிறார். அருளைத் தருகிறார். நேரத்தைத் தருகிறார். தோல்விகளைத் தழுவினாலும் மீண்டும் முன்னேற வாய்ப்புகளைத் தருகிறார். அவை எதற்காக? நாம் அவரின் இரக்கத்தை உணர்ந்து,வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதற்காக. மீட்பு அடைவதற்காக. 

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் திராட்சை தோட்ட உவமை நமக்குக் கூறுவது இச்செய்தியைத்தான். திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குலம். "நீங்கள் என் மக்கள் நானே உங்கள் கடவுள்" என்ற உடன்படிக்கையை நிறுவி தன்னுடைய கட்டளைகளையும் நியமங்களையும் வேலியாய் அமைத்து மற்ற மக்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தி அவருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் வாழப்பணித்தார் இறைவன். ஆனால் அவர்களோ அவருடைய உடன்படிக்கையை மீறினர். மீண்டும் மீண்டும் அவர்களை மீட்க நீதித் தலைவர்களையும், இறைவாக்கினர்களையும், அரசர்களையும் இறுதியில் தன் சொந்த மகனையும் அனுப்பினார். இது நமது கடவுள் மீண்டும் மீண்டும் இரக்கம் கொண்டு  வாய்ப்பளிக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இஸ்ரயேல் மக்களோ அதை உணராமல் தங்கள் வாழ்வை திருத்திக்கொள்ளாமல் பலஆண்டுகள் பாவ நிலையிலேயே வாழ்ந்தனர் என்ற வரலாற்றை இந்த உவமையில் இயேசு மிகத்தெளிவாகக் கூறியிருக்கிறார்.

இத்தகைய இறைவார்த்தைகள் நமக்கு மீண்டும் மீண்டும் தரப்படுவது நம்முடைய வாழ்க்கையை சீரமைக்கவே. இறைவேண்டல் செய்து அருளைப் பெற்று நம் வாழ்வை மாற்ற கடவுள் நமக்குத் தரும் வாய்ப்பை பயன்படுத்தி ஆன்மீக வாழ்வில் வளர்கிறோமா? கல்வி, தொழில் போன்ற துறைகளில் தவறி வீழ்ந்தாலும் அதிலிருந்து மீண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பலன் தருகிறோமா? இல்லை அனைத்தையும் வீணாக்கி விட்டு கடவுள் பலன் எதிர்பார்க்கும் வேளையில் வெறுங்கையராய் இருக்கிறோமா? பலன் தரும் வாழ்வையே கடவுள் எதிர்பார்க்கிறார். உலகமும் எதிர்பார்க்கிறது. நம்மை நம்பி வாய்ப்புகள் தரப்படுகிறது. எனவே நமது அசட்டைத்தனங்கள், சுயநலப் போக்குகள், வழிகாட்ட வருபவர்களை உதாசீனப்படுத்தும் தன்மைகளைக் களைந்து அனைத்தையும் கொடுத்தவருக்குத் தகுந்த பலனை அளிக்க உழைப்போம். மனம் மாறுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா! உமது இரக்கத்தையும், மீண்டும் மீண்டும் நீர் தரும் வாய்ப்பையும் பயன்படுத்தி பலன் தரும் வாழ்வு வாழ வரம் தாரும். ஆமென்.

Add new comment

11 + 0 =