தவக்காலம் மனமாற்றத்தின் காலம்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் -முதல் புதன்  
I: யோனா:  3:1-10
II:  தி.பா: 51: 1-2. 10-11. 16-17
III: லூக்: 11: 29-32

தவக்காலம் நம் வாழ்வின் முக்கியமான காலம். இத்தவக்காலத்தில் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் ஆற்றலையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ள திருஅவை அழைப்பு விடுக்கின்றது. கடவுளின் அருளை முழுமையாகப் பெற்று முழு மனித கிறிஸ்தவ வாழ்வுக்குச் சான்று பகர அடிப்படையாக இருப்பது மனமாற்ற வாழ்வு. தவக்காலத்தில் மனமாற்றம் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது. கடவுளின் அருளை நிறைவாகப் பெறுவதற்கு தடையாக இருப்பது நம்முடைய தீய வாழ்வாகும். தீமையை விட்டுவிட்டு முழுமையாக கடவுளை நம்பும் பொழுது நம் வாழ்வு அருளின் வாழ்வாக மாறும்.

மனமாற்றம் என்றால் என்ன? மனமாற்றம் என்பது  உடைகளையும் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றுவது அல்ல ; மாறாக,   நம் உள்ளத்தை மாற்றுவது. கல்லான இதயத்தை கனி உள்ள இதயமாக மாற்றுவது . தீமை நிறைந்த வாழ்வைத் தூய்மை நிறைந்த வாழ்வாக மாற்றுவது . சுயநல வாழ்வை பொதுநல வாழ்வாக மாற்றுவது . இவ்வாறு தவக்காலத்தில் மனமாற்றம் என்பது முக்கியமான ஒன்றாகக் வலியுறுத்தப்படுகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் நினிவே மக்கள் மனமாற்ற வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். நினிவே மக்கள் கடவுளுக்கு எதிராக பாவங்கள் பல செய்தனர். கடவுள் அவர்களை அழிக்க முதலில் துணியாமல் யோனா இறைவாக்கினர் வழியாக மனமாற ஒரு வாய்ப்பினைக் கொடுத்தார். அந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திய நினிவே மக்கள் கடவுளின் தண்டனையிலிருந்து தப்பித்தனர். இதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் உள்ளார்ந்த மனமாற்ற வாழ்வாகும். 

இன்றைய  நற்செய்தியில்  அடையாளம் கேட்ட மக்கள் கூட்டத்தினருக்கு இயேசு சவுக்கடி கொடுக்கும் விதமாக பதிலளித்தார். "இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது" என்று இயேசு கூறினார்.  இயேசுவிடம் யூத மக்கள் அடையாளம் கேட்டது இயேசுவை நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல ; மாறாக,  அவரிடம் எதையாவது குற்றம் காண வேண்டும் என்பதற்காகவே . இதை அறிந்து கொண்ட இயேசு அவர்களைத் தீய தலைமுறையினர் என அழைத்தார். இயேசுவின் பற்பல போதனைகளையும் வல்ல செயல்களையும் கண்டும், அவரை நம்ப மனமில்லாமல் அடையாளம் கேட்டனர். யூதர்கள் மெசியாவின் வருகைக்காக அடையாளம் ஒன்றை எதிர்பார்த்தனர். எனவேதான் இயேசுவிடம் யூதர்கள் அடையாளம் கேட்டனர் என்று விவாதம் வைத்தாலும் இயேசு தன்னைப் பலவழிகளில் மெசியாவாக அடையாளப்படுத்தினார். ஆனால் இயேசுவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் இயேசுவின் மீது கொண்ட பொறாமை உணர்வு.

பெரும்பாலான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து அவர் கற்பிப்பதை கேட்டு அவரின் பின்னால் சென்றதால், யூதத் தலைவர்கள் இயேசுவின்  போதனைகளை ஏற்றுக் கொள்ளச் சற்று தயங்கினார். அதற்கு முக்கியக் காரணம் தங்களுக்கு மரியாதை மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்ற பொறாமை உணர்வாகும்.எனவேதான் இயேசு ''யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் 
இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்'' (லூக்கா 11:30) என்று கூறினார். இயேசு தன்னையே அடையாளமாகக் கொடுத்தார். ஆனால் இயேசுவை ஏற்றுக் கொள்ளாமலும் மனமாற்றத்தை முழுமையாகச் சுவைக்காமலும் மக்கள் இருந்ததை கண்டு இயேசு கடுமையாகச் சாடினார்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் கடவுளை நம்புவதற்கும் கடவுளின் வழியில் பயணிப்பதற்கு கடவுள் பல்வேறு வாய்ப்புகளைக் கொடுத்துள்ளார். குறிப்பாக இந்த தவக்காலம் நாம் மனம்மாறி நற்செய்தியை நம்புவதற்கு கொடுக்கப்பட்ட உன்னதமான காலம். இந்த காலங்களில் சிலுவைப்பாதை, திருப்பலி, செபமாலை, திருப்புகழ்மாலை, இறை இரக்க செபமாலை, உண்ணா நோன்பு, மனிதநேய பிறரன்பு செயல்பாடுகள் போன்றவற்றின் வழியாக மனமாற்ற வாழ்வு பெறமுயற்சி செய்வோம். உலகம் சார்ந்த பாவங்களை விட்டு விட்டு முழுமையாக மனம்மாறும் பொழுது,  நம் வாழ்வில் நிறைவான அருளையும் இரக்கத்தையும் வழிநடத்துதலையும் பெறமுடியும். மனமாற்ற வாழ்வுதான் நமக்கு நிறைவைக் கொடுக்கும். மனமாற்ற வாழ்வுதான் மகிழ்ச்சியைக் கொடுக்கும். மனமாற்ற வாழ்வுதான் கடவுளின் திருவுள்ளத்தின் படி பயணிக்க வழிகாட்டும்.   

திருஅவை வரலாற்றில் மனமாற்ற வாழ்வில் நிலைத்து இருந்தவர்கள்தான் மிகப்பெரிய செயல்பாடுகளை செய்துள்ளனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் புனித அகுஸ்தினார். தன்னுடைய இளமைக் காலங்களில் கடவுளுக்கு எதிராகவும் சக மனிதர்களுக்கு எதிராகவும் பாவம் செய்தார். தன்னுடைய தாய் புனித மோனிக்கா தன்னுடைய மகன் அகுஸ்தினாரின்  மனமாற்ற வாழ்வுக்குச் செபித்தார் . கடவுளின் அருளால்  புனித அகுஸ்தீனார் மனமாற்றம் பெற்று,  மிகச்சிறந்த இறைப்பணி செய்ததை நாம் அறிவோம். அவர் மனம் மாறிய பிறகு முன்வைத்த காலை பின் வைக்காமல், புனித வாழ்வில் நிலைத்திருந்தது திருஅவைக்கு மிகச்சிறந்த ஒரு கருவியாகப் பயன்பட்டார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் மனமாற்ற வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். உடல் மற்றும் உள்ள மனமாற்றம் நாம் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கின்றது.  மனமாறுபவர்கள்   மட்டுமே  கடவுள் தரும் மீட்பை முழுமையாகச் சுவைக்க முடியும்.இதற்கு மிகச்சிறந்த மற்றொரு உதாரணம் சக்கேயு.

எனவே  இந்தத் தவக்காலத்தில் மனமாற்றம் பெற்று நற்செய்தியை முழுமையாக நம்பிட தேவையான அருளை வேண்டுவோம். யூத மக்கள் சிலர் இயேசுவிடம் அடையாளமும் அறிகுறிகளும் கேட்டு தங்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்த நினைத்ததைப் போல் இல்லாமல்,  அடையாளங்களையும் அறிகுறிகளையும்  தாண்டி இயேசுவை முழுமையாக ஏற்று அருள், இரக்கம், மீட்பு போன்ற வாழ்வுக்கு சான்று பகர தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :

வல்லமையுள்ள இயேசுவே!  இந்த தவக்காலத்திலும்  எங்கள் வாழ்நாள் முழுவதும் உம்மிடம் அடையாளங்களையும் அறிகுறிகளையும் வல்லச்செயல்களை  மட்டும் எதிர்பார்க்காமல்,  உம்மை முழுமையாக நம்பவும், மனமாற்ற வாழ்வில் நிலைத்திருக்கவும்   அருளைத் தாரும்.  ஆமென்.

Add new comment

2 + 9 =