Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைவன் என்றும் நம்மோடிருக்கிறார் | பணி. திலக ராஜா. சி | Daily Reflection
இயேசுவின் அன்புப் பிள்ளைகளே!
தவக்காலத்தின் முதல் ஞாயிறில் இருக்கிறோம். தவக்காலம் அருளின் காலம். புனிதமான காலம். ஏன்? அது, நம்மோடு என்றும் உள்ள கடவுளின் அன்பை உணர்ந்து தேடிவர அழைக்கும் காலம். எனவேதான் அது புனிதமான காலம். இந்தப் புனிதமானக் காலத்தை சரியாகப் பயன்படுத்தி ஆண்டவரிடம் இன்னும் நெருங்கி வர முயலுவோம்.
இன்று நாம் பல நிலைகளில் நம் தேவைகளின் பொருட்டு புலம் பெயர்கிறோம். யாருமே தெரியாத இடத்தில் ஆண்டவரே துணை என்று நம்பி வாழ ஆரம்பிக்கிறோம். காலப்போக்கில் அவ்விடங்களில் உறவுகளை சம்பாதித்தப்பின் ஆண்டவரை மறந்து விடுகிறோம். ஆனால் நமது வளர்ச்சியில் ஏதேனும் சுணக்கத்தையோ அல்லது எதிரிகளால் நாம் வீழ்த்தப்படும் சூழலில் இருந்தால் மீண்டும் ஆண்டவரையும், அவரின் பாதுகாப்பையும் தேடுவோம்.
பல நேரங்களில் எனக்குத் துணை யார்? எனக்காக யார் இருக்கிறார்? என எண்ணி தவறானப் பாதையைத் தேர்ந்தெடுத்துவிடுகிறோம். வாழ்வைத் தொலைத்து விடுகிறோம். ஆனால், இன்றைய நாளின் வழி இறைவன் நமக்கு சொல்வது, உலகமே உதறினாலும் நான் என்றும் உங்களுடனே இருக்கிறேன் என நம்பிக்கையூட்டும் வாழ்வுச் சொல் தருகின்றார்.
இதனையே நாம் விவிலியத்திலும் வாசிக்கிறோம். இறைவன் எவ்வாறு தன் மக்களோடு இருக்கிறார்? என்றும் அதிலும் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட மக்களோடு அவர் எவ்வாறு இருக்கிறார் என்பதை நமக்கு விவிலியம் சொல்லுகிறது.
முதலாவதாக, சாமுவேல் முதல் புத்தகத்தில் காணலாம். சாமுவேலை இறைவன் அழைக்கும்போது விவிலியம் சொல்கிறது, வளர்ந்த சாமுவேல் எப்போதும் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தார். எனவே சாமுவேலுடன் இறைவன் இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை (1சாமு3:19). எனவேதான் சாமுவேல் அம்மக்களுக்கு தன்னிகரற்ற தலைவனாக இருக்க முடிந்தது. அவர் தலைமையில் சென்ற அனைத்து போர்களிலும் வெற்றி பெற முடிந்தது. அவர்களுக்கு அரசர்களை ஏற்படுத்த முடிந்தது. சவுலை அரச பதவியில் இருந்து நீக்கும் போதும் தைரியமாக செயல்பட காரணம் ஆண்டவர் அவரோடு இருந்தார். இவரும் ஆண்டவரோடு தன் சொல்லாலும், செயலாலும் இணைந்து இருந்தார். நாமும் சாமுவேலாக இருந்தால் கடவுளும் நம்மோடு பயணிக்க மாட்டாரா!
இரண்டாவதாக சாமுவேல் முதல் புத்தகம் 17-ம் அதிகாரத்தில் வரும் நிகழ்வு. சவுல் அரசராக இருந்த காலத்தில், பெலிஸ்திய படை கோலியாத்து தலைமையில் எருசலேமை முற்றுகையிடும் போது சவுல் போரிட பாளையத்திற்குள் இறங்கும் சொல்லும் வார்த்தைகள். “ இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்: நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்” எனச் சொல்லும் அளவுக்கு வீரமும் துணிவும் கிடைத்தது என்றால் அதற்கு அவரோடு ஆண்டவர் இருந்தார். அவரும் இறைவனுக்கு என்றும் பிரமாணிக்கமுள்ளவாராக இருந்தார். நாமும் இறைவனுக்கு நம் வாழ்வால் பிரமாணிக்கமுள்ளவராக இருந்தால் இறைவனும் நம்முடன் இருப்பாரே!
இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் எல்லா உயிர்களையும் நேசிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளும் விதம், அன்பின் சான்றாக வானவில்லை அமைத்து நமக்கு தன் அன்பை உணர்த்திக் கொண்டு இருக்கிறார் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு உணர்ததுகிறது. இந்த உடன்படிக்கை அன்பு இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்பதை உணர்த்தும் இந்த உடன்படிக்கையினை என்றைக்காவது நினைத்துப் பார்த்துதுண்டா?
இயேசு திருமுழுக்கு அனுபவத்திற்குப்பின் இயேசு பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கே அவர் சோதிக்கப்பட்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கிறது. அவர் அங்கு சோதிக்கப்பட்டாலும் அவர் தந்தையோடு இருந்தார். எனவேதான் தூய ஆவியாரும் அவருடன் உடனிருந்தார். இயேசுவின் இந்த பாலைவன அனுபவம் நமக்குச் சொல்வது என்ன? இயேசுவின் வாழ்வைப் போன்று நமது வாழ்விலும் இன்பமும் துன்பமும் விரவி உள்ளது. சோதனைகள், துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் சோதனைகள் எனும் பாலை வனத்தில் தான் இறைவன் நம் அருகிலே இருக்கிறார். ஒசேயா இறைவாக்கினர் 2:14-ல் கூட பாலை நிலத்துக்கு கூட்டிப் போய் அவள் நெஞ்சோடு பேசுவோம் என்பது போல் பாலைநிலமாகிய துன்பவேளைகளில் இன்னும் அதிகம் நம்மோடிக்கிருக்கிறார். எபி 2:18-ல் சொல்வதுபோல தாமே சோதனைக்குள்ளாகி துன்பப்பட்டதனாலேயே சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர் வல்லவர் என்பதற்கு ஏற்ப அவர் என்றும் நம்மோடே இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம். எனவே நமது சோதனை, வேதனைக் காலங்களில் இறைவனை விட்டு அகன்ற நேரங்களை எண்ணிப் பார்ப்போம். இந்த தவக்காலத்தை சரியாகப் பயன்படுத்தி நாம் நமது இறைவனை நோக்கி வர முயற்சிப்போம்.
அவ்வாறு இறைவன் அன்பை புரிந்து அவர்பக்கம் திரும்பினால் தவக்காலம் நம் வாழ்வையே மாற்றி விட்டது எனலாம்.
Add new comment