கடவுளின் அழைப்பு ஒரு கொடையா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் முதலாம் திங்கள் - I. எபி: 1:1-6; II. திபா: 97:1-2,6-9; III. மாற்: 1:14-20

ஒரு கிராமத்தில் ஒரு மாணவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் சிறுவயதில் இருக்கின்ற பொழுது அதிகமாக ஆலய வழிபாட்டிற்கு செல்லாதவர். எப்போதாவது தான் அவர் கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு இஸ்ஸாமிய அமைப்பினர் நடத்திய பள்ளியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் படித்தார் . வெள்ளி மற்றும் சனிக்கிழமை மட்டும் தான் வார விடுமுறையாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை பள்ளி வேலையாக இருந்தது. எனவே ஞாயிறு வழிபாட்டிற்கு தொடர்ந்து அந்த மாணவரால் செல்ல முடியவில்லை. ஆன்மீகத்தின் மீதுஅதிகமான நாட்டம் இல்லாதவராய் இருந்தார்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த பிறகு அவர் சார்ந்த பங்கு ஆலயத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாணவரின் நண்பர்கள் நவநாள் திருப்பலிக்கு மாலை வேளைகளில் அழைத்து சென்றனர்.

அப்போது அந்த மாணவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து திருப்பலிக்கு  செல்வதால்  மிகுந்த ஆர்வத்தோடு பீட பணி செய்தார். இதைக் கண்ட அந்த பங்கின் இணைப்பணியாளர் இந்த மாணவரை தனியாக அழைத்து "உனக்கு இறையழைத்தல் இருக்கின்றது" எனக் கூறினார். அந்த மாணவரும் அந்தப் பங்கின்  இணைப்பணியாளர்  சொன்னதை விளையாட்டாக எடுத்து விட்டு சிரித்துக்கொண்டே சென்று விட்டார். அதன் பிறகு அந்த மாணவர் வீட்டில் சென்று ஆழ்ந்து யோசித்தார். இறுதியில் செபிக்கத் தொடங்கினார். செபித்து முடித்தபிறகு கோவிலுக்கு அதிகம் செல்லாத அந்த மாணவர் கடவுளின் அழைப்பை உணர்ந்து "நான் ஏன் ஒரு அருட்பணியாளராக மாறி இறைப்பணி செய்யக்கூடாது?" என்ற கேள்வியை தன்னுள் எழுப்பி பத்தாம் வகுப்பு முடித்த பிறகு இறையழைத்தல் முகாமிற்கு சென்றார். அப்படி இறைவனின் அழைப்பை உணர்ந்த அந்த மாணவர் இப்பொழுது குரு மடத்தில் சேர்ந்து 12 ஆண்டுகள் பயிற்சி பெற்று தற்போது சிவகங்கை மறைமாவட்டத்திற்கு திருத்தொண்டராக அருள்பொழிவு செய்யப்பட்டு பயிற்சியின் இறுதி கட்டத்திலேயே இருக்கின்றார். அவர் வேறு யாருமல்ல. அது திருத்தொண்டர் குழந்தை இயேசு பாபுவாகிய நான்தான்.

கடவுளின் அழைப்பு என்பது உன்னதமான கொடையாகும். கடவுள் அந்தக் கொடையை நம்முடைய திறமையை பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ கொடுப்பதில்லை. நமது உள்ளத்தைப் பார்த்து வழங்குகின்றார். நான் ஆலயத்திற்கு செல்லாவிட்டாலும் எனது உள்ளம் கடவுளை நோக்கி இருந்தது. கடவுளின் அளப்பரிய அன்பு என் உள்ளத்தை ஊடுருவி அவரின் அழைப்பை உணர வைத்தது. கடவுள் தகுதியுள்ளவரை அழைப்பவர் அல்ல; மாறாக, தகுதியற்றவரையும் அழைத்து தகுதிப்படுத்துபவர். என் வாழ்வின் அனுபவத்திலிருந்து கடவுளின் அழைத்தலை உணர்கின்ற போது அது உன்னதமான கொடையாகும். அப்படிப்பட்ட உன்னதமான அழைப்பை எனக்கு கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன். என்னுடைய வாழ்வில் அவருக்கு உகந்த இறையாட்சி பணியினை  நிச்சயமாக செய்வேன். அதற்காகவே இயேசு என்னை அழைத்துள்ளார் என்பதை உறுதியாக நம்புகின்றேன்.

நம் ஆண்டவர் இயேசு தனது பணி வாழ்வை தொடங்குவதற்கு முன்பாகத் தான் செய்யக்கூடிய இறையாட்சி பணியை தனக்குப் பின்னும் செய்ய சீடர்களை அழைப்பதை இன்றைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது ; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்: 1:15) என்று  பறைசாற்றி இயேசு தனது இறையாட்சிப் பணியைத் தொடங்கினார். இயேசு வழங்கிய போதனைகளின் மையக்கருத்தை சுருக்கமாக நாம் ஆய்வு செய்தால் அது "இறையாட்சி" என்னும் ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம். இறையாட்சி என்பது மனமாற்ற வாழ்வில் நிலைத்திருந்து கடவுளின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்வதாகும். கடவுளின் ஆட்சியில் மன்னிப்பு, மனமாற்ற வாழ்வு, அன்பு, அமைதி, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், தூய்மை இருக்கும். இவை அனைத்தும் பாவம் என்னும் இருளில் வாழக்கூடிய மனிதர்களுக்கு புது வாழ்வைக் கொடுப்பதாகவும்  நிறைவைக் கொடுப்பதாகவும் இருக்கின்றன.

இப்படிப்பட்ட புது வாழ்வை வழங்கக்கூடிய  இறையாட்சிப் பணியைச் செய்யத் தான் இயேசு சீடர்களை அழைத்தார். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை மனமாற்ற வாழ்விற்கு ஒப்பிடுகிறார். மனமாற்றம் பெற்று இறைவனின் வார்த்தைகளை நம்பும் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீட்டிற்கு உகந்த  வாழ்க்கை வாழ்கின்றனர். அப்படிப்பட்ட வாழ்வை வாழ தனக்குப் பிறகும் இறையாட்சி பணியை செய்யத் தான் சீடர்களை அழைத்தார் இயேசு. இயேசு சீடர்களை அழைத்தவுடன் "உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்" (மாற்: 1:18) என்று வாசிக்கின்றோம். சீடர்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை இது சுட்டிக்காட்டுகின்றது. இயேசு உழைத்துக் கொண்டிருந்த மீனவர்களை தனது பணிக்கென  அழைத்தார்.  இவ்வுலகம் சார்ந்த செல்வமான மீன்களை பிடித்துக்கொண்டிருந்த சீடர்கள்,  இறையாட்சிக்கு உகந்த  மனிதர்களின் ஆன்மாவை மீட்கும் கருவிகளாக மாறினர்.

நம்முடைய வாழ்வு ஆண்டவர் இயேசுவின் இறையாட்சிக் கனவை நனவாக்க கூடிய வாழ்வாக இருக்க வேண்டுமென இன்றைய நற்செய்தியின் வழியாக ஆண்டவர் இயேசு விரும்புகிறார். திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவரையும் ஆண்டவர் இயேசு அவருடைய பணிக்கென சிறப்பான விதத்தில் அழைத்துள்ளார். இவ்வுலகம் சார்ந்த பொருட்கள் மீதும் பட்டங்கள் மீதும் அதிகம் நாட்டம் கொள்ளாமல், இறையாட்சியின் மதிப்பீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நாமும் பிறரும் மனமாற்றம் அடைந்து மீட்பின் கனியைச் சுவைக்கும் கருவிகளாக மாறிட இறை அழைப்பை உன்னதக் கொடையாக ஏற்றுக்கொள்வோம். கடவுள் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு வகையில் அவரின் இறையாட்சிப் பணி செய்ய அழைப்பு விடுக்கின்றார். கடவுளின் அழைப்பு உண்மையானது. கடவுளின் அழைப்பு மன மாற்றத்தையும் புது வாழ்வையும் தரவல்லது. கடவுளின் அழைப்பு மீட்பின் கனியைச் சுவைக்க வழிகாட்டுவது. கடவுளின் அழைப்பு விடுதலை வாழ்வையும் சமூக மாற்றத்தையும் தரவல்லது. இப்படிப்பட்ட தெய்வீகமான அழைப்பை கடவுளின் உன்னதமான கொடையாக ஏற்று சீடர்களைப் போல இவ்வுலகம்  சார்ந்த அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவின் இறையாட்சி பாதையில் நடந்து செல்ல தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்!  

தகுதியற்றவர்களை அழைத்து தகுதிப்படுத்தும் இறைவா! தகுதியற்ற உமது  சீடர்களையும் என்னையும்  அழைத்து இறையாட்சியின் மதிப்பீடு இம்மண்ணில் விதைக்கப்பட நீர் கொண்ட திருவுளத்திற்காக  நன்றி செலுத்துகின்றோம். உமது அழைப்பிற்கு ஏற்ற வாழ்வை எந்நாளும் நாங்கள் வாழ்ந்திடத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

2 + 2 =