நம்பிக்கையில் நலமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


திருக்காட்சி பெருவிழாக்கு பின் வரும் வெள்ளி - I. 1யோவா: 5:5-13; II. திபா: 147:12-13,14-15,19-20; III. ந.வா: லூக்: 5:12-16

நான் திருத்தொண்டர் பணி செய்து கொண்டிருந்த பங்குத்தளத்தில் குடும்ப சந்திப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். அவ்வாறாக சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பக்தியான குடும்பத்தைச் சந்தித்தேன். அந்தக் குடும்பத்தில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மூத்த மகளுக்கு தீவிரமான நோய் தாக்கியிருந்தது. அவர் இறக்கும் தருவாயில் கூட இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர்கள் முழுமையாகக் கடவுள் தங்களைக் காப்பாற்றுவார் என நம்பினர். நானும் பங்குத்தந்தையும் வாய்ப்பு கிடைக்கும் நேரமெல்லாம் அந்த வீட்டிலே சிறப்பு ஜெபம் செய்தோம். இறை நம்பிக்கையோடு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற அனுப்பி வைத்தோம். கடவுள் தன் மகளை காப்பாற்றுவார் என குடும்ப உறுப்பினர்களும் நம்பிக்கையோடு இருந்தனர். இறுதியில் அற்புதமாக அந்த பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவி கடவுளின் இரக்கத்தால் குணம் பெற்றார். அந்த  குடும்பத்தின் மூத்த மகள் குணம் பெற்ற பிறகு நானும் பங்குத் தந்தையும் அவர்களை சந்திக்கச் சென்றோம். அவர்கள் இது கடவுளால் நிகழ்ந்தது என்று பதிலளித்தனர். இன்னும் அவர்கள் இறைநம்பிக்கையில் வலுப்பெற்றுள்ளனர்.

நம்பிக்கைதான் கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாக இருக்கின்றது. நம்பிக்கை  இல்லை என்றால் கிறிஸ்தவமே இல்லை. ஏனெனில் கிறிஸ்தவம் நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைய முதல் வாசகத்தில் "இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்பவர் யார்?" (1யோ: 5:5) என யோவான் எழுதிய முதல் திருமடலில்  வாசிக்கின்றோம். ஆண்டவர் இயேசுவை முழுமையாக நம்புகின்ற பொழுது நிச்சயமாக இந்த உலகை நாம் வென்று காட்ட முடியும்.  புனித அகுஸ்தினார் ஆண்டவர் இயேசுவை நம்புவதற்கு முன்பாக  பாவத்திலிருந்து வெளிவர முடியாமல் இருள் வாழ்வில் அடிமையாக இருந்தார். ஆனால் தனது தாய் புனித  மோனிகாவின் செபத்தால் மனமாற்றம் அடைந்த பிறகு இறைமகன் இயேசுவை முழுமையாக ஏற்று நம்பினார். அதன் பிறகு அவர் புது வாழ்வைப் பெற்று மிகச் சிறந்த  இறை பணியாளராகவும், ஆயராகவும்  இறையியல் வல்லுநராகவும் மாறி அனைவரையும் இறைநம்பிக்கையில் வளர்க்கும் மிகச் சிறந்த கருவியாக மாறினார். புனித அகுஸ்தினார்  வாழ்வு நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எவ்வளவு பாவங்களையும்  தீய செயல்பாடுகளையும் கடவுளுக்கு எதிராகச் செய்தாலும்  கடவுளை, இறைமகன் இயேசுவை முழுமையாக நம்புகின்ற பொழுது சோதனைகள் வந்தாலும் இடையூறுகள் வந்தாலும் இறுதியில் மீட்பையும் வெற்றியையும் சுவைக்க முடியும்.

இயேசு தான் செய்த மூன்றாண்டு இறையாட்சி பணியில் ஏராளமான வல்ல செயல்களைச் செய்தார். அதிலும் குறிப்பாக நம்பிக்கை உள்ள மனிதரிடத்தில் மட்டுமே அவரால் வல்ல செயல்களைச் செய்ய முடிந்தது. இன்றைய நற்செய்தியில் உடல் முழுவதும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு அவருடைய நம்பிக்கையின் பொருட்டு  நலமளிக்கின்றார். இந்த வல்ல செயல் நடைபெற தொழுநோயாளரின் நம்பிக்கை ஆழமானதாக இருந்தது. இயேசுவை கண்டவுடன் அவர் காலில் விழுந்து  "ஆண்டவரே!  நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" (லூக்: 5:13) என மன்றாடினார். இது அந்த தொழுநோயாளரின் நம்பிக்கையை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. அதோடு இயேசுவின் விருப்பத்திற்கும் அவர் இணங்கினார் என்பதையும் காட்டுகிறது .அவர் இயேசுவை கட்டாயப்படுத்தவில்லை; மாறாக, விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என கூறுகிறார். இப்படிப்பட்ட ஆழமான நம்பிக்கை கொண்டிருக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம். 

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் தொழுநோயாளர்கள் மக்கள் நடமாடும் பகுதிக்கு வரக்கூடாது. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர். ஆனாலும் கூட பல்வேறு தடைகளையும் இடையூறுகளையும் தாண்டி நம்பிக்கையோடு இயேசுவிடம் மன்றாடினார். இறுதியிலே அவர் நலம் பெற்று புது வாழ்வைப் பெற்றார். அதன்பிறகு ஆண்டவர் இயேசு "இதையாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர்  என்பதற்கு அது சான்றாகும்" என்று கட்டளையிட்டார். இதற்கு விவிலிய பின்னணி என்னவென்றால் இயேசு குணம் பெற்ற தொழுநோயாளருக்கு சமூக அங்கீகாரம் கொடுக்கிறார். ஏனென்றால் ஒரு தொழுநோயாளர் குணம் பெற்று விட்டார் என்றால் அதற்கு அங்கீகாரம் கொடுக்க அதிகாரம் குருவுக்கே உண்டு. இந்த வழிகாட்டுதலின் வழியாக இயேசுவின் மனிதநேயம் வெளிப்படுகின்றது. எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் நம்பிக்கையோடு நம்மிடம் உதவி என்று வருகின்றவர்களைக் கைவிட்டு விடாமல் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்கின்ற பொழுது நாமும் மறு கிறிஸ்துவாக முடிகிறது.

எனவே இன்றைய நாளில் நம்முடைய இறைநம்பிக்கையை ஆழப்படுத்துவோம். கடவுளால் அனைத்தும் இயலும் என்று ஆழமாக நம்புவோம். இறை நம்பிக்கையை நம்முடைய செபத்தின் வழியாகவும் இறைவார்த்தையை வாழ்வாக்குவதன் வழியாகவும் நற்செயல்களை செய்வதன் வழியாகவும் ஆழப்படுத்திக் கொள்வோம். அத்தகைய இறைநம்பிக்கையின் வழியாகப் புது வாழ்வையும் புது மாற்றத்தையும் காணத் தேவையான அருளை வேண்டுவோம். நம் நம்பிக்கை மட்டுமே நமக்கு நலமான வாழ்வை வழங்கும்.

இறைவேண்டல்
நம்பிக்கை நாயகனே எம்  இறைவா!  எங்களுடைய அன்றாட வாழ்வில்  வருகின்ற சோதனைகளுக்கு மத்தியில் இறை நம்பிக்கையில் உறுதியாய் இருந்து எந்நாளும் உமது நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர தேவையான அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

9 + 10 =