Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எனது இருத்தலின் நோக்கத்தை அறிந்துள்ளேனா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
திருக்காட்சி பெருவிழாக்கு பின் வரும் வியாழன் - I. 1யோவா: 4:19-5:4; II. திபா: 72:1-2,14-15,17; III. லூக்: 4:14-22
தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அரசியல் வாதிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடித்தன. ஒவ்வொரு கட்சியைச் சார்ந்த அரசியல் வாதிகளும் தங்கள் கட்சிகளைப் பற்றிப் பெருமையாய் பேசிக் கொண்டிருந்தனர். ஒலிப்பெருக்கியின் சப்தத்தைக் கூட்டி தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என பிதற்றிக் கொண்டிருந்தனர். இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இளைஞர்கள் இருவர். "இவர்களுக்கு வேறு வேலை இல்லை. தேர்தலின் போது பட்டியலிடுவர். பின்பு அவற்றை பறக்கவிடுவர்" என விரக்தியாகக் கூறினார் ஒருவர். மற்றொருவர் அமைதியாக வந்தார். சிறிது நேர அமைதிக்குப் பின் அவர் "அவர்கள் தேர்தல் சமயத்திலாவது ஏதாவது செய்வேன் என வாக்களிக்கிறார்கள். நாமோ வாழ்நாள் முழுதும் எந்தத் திட்டமும், எவ்வித நோக்கமும் இல்லாமல் வீணாக செலவழித்துக் கொண்டிருக்கிறோமே. ஏதாவது ஒரு இலக்கையாவது நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்திப் பார்த்தால் என்ன?" என்ற கேள்வியை முன் வைத்து, அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே நடந்து சென்றார்.
வாழ்க்கையெனும் மாபெரும் கொடை நமக்கெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க நமக்கென்று ஒரு இலக்கினை உருவாக்கிக் கொள்வது அவசியம். ஒவ்வொருவரும் ஒரு வாழ்நாள் இலக்கினை (Long term Goal) ஏற்படுத்திக்கொண்டு அதை அடையப் பல சிறிய குறுகிய காலத் திட்டங்களையும் இலக்குகளையும் (Short term goals) உருவாக்கி செயல்படுத்த வேண்டுமென உளவியலாளர்கள் கூறுவார்கள். முயற்சிகள் வெற்றியடையும் போது என் இலக்கினை நான் அடைந்துவிட்டேன். என் நோக்கம் நிறைவேறிற்று என மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு நம் பாதையில் தெளிவோடு பயணிக்க வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தொழுகைக்கூடத்தில் எசாயாவின் ஏட்டுச்சுருளை வாசிக்கும் நிகழ்வு நமக்குத் தரப்பட்டுள்ளது. இவ்வார்த்தைகளின் மூலம் இயேசு தான் வந்ததன் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார். அவ்வார்த்தைகள் நிறைவேறிற்று என்று முழக்கமிடுகிறார். அவருடைய போதனைகளும், அருஞ்செயல்களும் அவ்வார்த்தைகளை நிறைவேற்றும் வண்ணம் ஏழையருக்கு நற்செய்தியாகவும் பாவச் சிறையிலிருப்போருக்கு விடுதலையாகவும் ஆண்டவரின் அருளை அறிவிப்பதாகவும் இருந்தது. நம்வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். நம்முடைய வாழ்வில் இலக்கு இருக்கிறதாதா?
நம் பாதையில் தெளிவு இருக்கிறதா? நம் இருத்தலுக்கான காரணத்தை உணர்ந்து இயங்குகிறோமா? இப்பொழுது கூட தாமதமல்ல. இயேசுவிடம் நம் வாழ்வின் நோக்கத்தைத் தெளிவுபடுத்த வரம் வேண்டுவோம். இலக்குத் தெளிவோடு செயல்படுவோம்.
திருமுழுக்குபெற்ற கிறிஸ்தவர்களாகிய நம்மெல்லோருக்குமே பொதுவான ஒரு இலக்கு உண்டு. அது கடவுளின் கட்டளையை கடைபிடிப்பது. அக்கட்டளை அன்பு செய்வதே. கடவுளின் பிள்ளைகளாகிய நாம் கண்களால் காணக்கூடிய சக மனிதரை அன்பு செய்வது கடவுளை அன்பு செய்வதற்கு சமம். எனவே அன்பு செய்யவும், நமது இலக்கினை நிறைவேற்றவும் வரம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
எங்கள் வாழ்விற்கு அர்த்தம் தருபவரே இறைவா! எங்கள் இருத்தலின் நோக்கத்தை உணர்ந்து அதை நோக்கி தெளிவான பாதையில் பயணிக்கவும், பிறரை அன்பு செய்து அதன்மூலம் உம்மை அன்பு செய்யவும் உமது ஆற்றலைத் தாரும். ஆமென்.
Add new comment