கடவுள் பார்வையில் நேர்மையானவர்களா நாம் | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


Honesty

திருவருகைக் காலத்தின் மூன்றாம் சனி - I. நீதி 13:2-7,24-25; II. தி.பா: 71:3-4.5-6.16-17; III. லூக்: 1:5-25

நேர்மை என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான பண்பாகும். ஒரு மனிதர் நேர்மையாக வாழும் பொழுது அவர் வாழ்கின்ற காலத்தில் துன்பப்படலாம். ஆனால் அவர் இந்த மண்ணுலகத்தில் விட்டுச் செல்கின்ற மதிப்பீடு மிகச் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். புது வாழ்வையும் புது மாற்றத்தையும் இந்த சமூகத்திற்கு கொடுக்கும். நான் ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது பயணச்சீட்டு எடுப்பதற்காக என்னுடைய பாக்கெட்டிலிருந்து 500 ரூபாய் தாளை எடுத்தேன். அதை எடுக்கும் பொழுது மற்றொரு 500 ரூபாய் தாள் கீழே விழுந்தது. பேருந்தில் யாசகம் பெற்று வந்த ஒரு வயதான முதியவர் அந்த 500 ரூபாய் தாளைக் கையில் எடுத்து "ஐயா! உங்களுடைய 500 தாள் கீழே விழுந்துவிட்டது என்று கொடுத்தார்".  இந்த நிகழ்வு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவர் நேர்மையை கண்டு மற்ற பயணிகளும் நானும் மகிழ்ந்தோம். எனவே அந்த முதியவருக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பைக் கொடுத்து உதவி முதியோர் இல்லம் செல்ல வழிகாட்டினேன். 

நம்முடைய வாழ்வு நேர்மையுள்ள வாழ்வாக கடவுளுக்கும் பிற மனிதருக்கும் முன்னால் இருக்கும் பொழுது நிச்சயமாக கடவுளின் ஆசீர்வாதம் நிறைவாக நமக்கு கிடைக்கும். இன்றைய நற்செய்தியில் சக்கரியா மற்றும் எலிசபெத் என்ற தம்பதியர்களை பற்றி வாசிக்கிறோம். இவர்கள் இருவரும் நேர்மையுள்ள வாழ்வுக்குச் சான்றாக வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஒரு தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவர்கள் கடவுளின் சாபத்தை பெற்றவர்களாக கடத்தப்பட்டனர். இவர்களும் பல்வேறு விமர்சனங்களுக்கும் துன்பங்களுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் உள்ளாகினர். ஆனால் கடவுள் அவர்களை கைவிடாமல் அவர்களின் நேர்மையான வாழ்விற்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக குழந்தை பாக்கியத்தை கொடுத்தார். அக்குழந்தையை இந்த உலகை மீட்க வந்த ஆண்டவர் இயேசுவினுடைய வழியை  ஆயத்தப்படுத்தும் குழந்தையாக கடவுள் பயன்படுத்தினார்.

நம்முடைய வாழ்வில் நேர்மைத் தன்மையோடு வாழும் பொழுது நிச்சயமாக கடவுளுடைய கைமாறு உண்டு. இதற்குச் சான்றாக பழைய ஏற்பாட்டில் நோவாவும் அவருடைய குடும்பத்தினரும் இருக்கின்றனர். நோவா வாழ்ந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் கடவுளுக்கு எதிராக தீச்செயல்களைச் செய்தனர். ஆனால் நோவா தீச்செயல்கள் செய்ய சூழல் இருந்தும் நேர்மையோடு வாழ்ந்து கடவுளுக்கு சான்று பகர்ந்தார். எனவே வெள்ளத்தால் மனிதர்களை அழிக்க நினைத்த கடவுள் நோவாவின் நேர்மைத்தனத்தை முன்னிட்டு அவரையும் அவரின் குடும்பத்தாரையும் மீட்டார். இது நோவாவிற்கு  நேர்மைக்கு கிடைத்தப் பரிசாக இருக்கின்றது.

அதேபோலதான் சக்கரியா மற்றும் எலிசபெத் இவர்களின் மகன் திருமுழுக்கு யோவான் நேர்மைக்கு சான்று பகர்பவராக இருந்தார். திருமுழுக்கு யோவானின் செயல்களின்  பொருட்டு அனைவரும் இவரை மெசியா எனக் கருதினார். இவர் நினைத்திருந்தால் தான்தான்  மெசியா என மக்களை ஏமாற்றி இருக்கலாம். ஆனால் அவர் உண்மையோடும் நேர்மையோடும் தன்னுடைய அழைப்பிற்கேற்ற பணியினை செய்தார். இயேசுவின் வழியை ஆயத்தப்படுத்தி இயேசு வந்த பிறகு உலகின் பாவங்களை மீட்கும் செம்மறி என  அவரை இவ்வுலகிற்கு  சுட்டிக்காட்டினார். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையோடு வாழ்ந்து உண்மையை உண்மை என உரக்கச் சொல்லி மிகப்பெரிய சான்று வாழ்வு வாழ்ந்தார். அவர் நேர்மையோடு உண்மைக்குச் சான்று பகர்ந்ததால் அவரின் தலை வெட்டப்பட்டாலும் அவரின் மதிப்பீடு இன்றளவும் உயிரோடு தான் இருக்கின்றது. எனவே நேர்மையோடு வாழ்பவர்களுக்கு எப்பொழுதும்  குறை இருக்காது. ஏனெனில் நம்மைப் படைத்த கடவுள் நேர்மையுள்ளவர் உண்மையானவர். 

நான் என்னுடைய பணித்தளத்திலே வீடுகளை சந்திக்கும் பொழுது குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளை பார்க்கும் சூழல் ஏற்படும். நான் அவர்களோடு பேசும்பொழுது "எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபித்துக் கொள்ளுங்கள்" எனக் கண்ணீரோடு  கூறுவர். நான் அவர்களுக்கு சொல்லும் செய்தி இதுதான் "சக்கரியா மற்றும் எலிசபெத் போன்று கடவுளுக்கும் பிற மனிதர்களுக்கும் நேர்மையோடும் உண்மையோடும் இருங்கள். அவர்கள் கொண்டிருந்த இறை நம்பிக்கையில் நிலைத்திருங்கள். நிச்சயம் கடவுள் உங்கள் மீது கருணை கொண்டு குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பார். உங்கள் வழியாக அவரே உண்மையான கடவுள் என்பதைச் சான்று பகர்வார்" எனக்கூறி அவர்களை சான்று உள்ள மக்களாக வாழ வழிகாட்டுவேன். இத்தகைய மனநிலை தான் ஒவ்வொரு கிறிஸ்தவர் இடத்திலும் இருக்க வேண்டும்.

கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட நம்மையே ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சக்கரியா மற்றும் எலிசபெத் கொண்டிருந்த அதே நம்பிக்கையையும் நேர்மையும் உண்மையும் நிறைந்த வாழ்வையும் வாழ்வாக்க அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழுகின்ற பொழுது பாலன் இயேசு நமக்கு நிறைவான மகிழ்ச்சியையும் அருளையும் கொடுப்பார். அவர் இரக்கத்தையும் பரிவையும் அன்பையும் நம்மால் முழுமையாகச் சுவைக்க முடியும். அத்தகைய நேர்மையுள்ள மனநிலையைப் பெற்றுக்கொள்ள தேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
நேர்மையின் இறைவனே! நீ கொடுத்த வாழ்விற்காக நன்றி செலுத்துகின்றோம். எங்களுடைய அன்றாட வாழ்வில் எந்நாளும் நேர்மைக்கும் உண்மைக்கும் சான்று பகரத் தேவையான அருளைத் தாரும். அதற்குத் திருமுழுக்கு யோவானிடம் இருந்த அந்த மனநிலையையும் நோவாவுக்கு இருந்த அந்த மனநிலையையும் சக்கரியா மற்றும் எலிசபெத்துக்கு இருந்த அந்த மனநிலையையும் உம் திருமகன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் இருந்த அந்த மனநிலையையும் தந்து எங்களை உமக்கேற்ற பிள்ளைகளாக உருமாற்றும். ஆமென்.

Add new comment

12 + 3 =