ஆண்டவரின் குடும்பப் பட்டியலில் உறுப்பினரா நாம்? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


Family of God

திருவருகைக் காலத்தின் மூன்றாம் வியாழன் - I. தொ.நூ:49:1-2,8-10; II. தி.பா: 72:1-2,3-4,7-8,17; III. மத்தேயு:1:1-17

நீண்ட நாட்கள் கழித்து ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்டார் ஒரு இளைஞன்.அவருக்கு அந்த விழாவில் கலந்து கொள்ள விருப்பமில்லாவிட்டாலும் தன் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் அவர் அவ்விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது.அவ்விழாவில் அவருக்கு பல உறவுகள் அறிமுகமாயினர். அவரும் தன்னைப் பலரிடம் தான் இன்னாருடைய மகன் எனவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவன் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அச்சமயத்தில் அவருடைய குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள், அவருடைய தந்தை, தாத்தா, பாட்டனார் என அனைவரைப் பற்றியும் தங்களுடைய அனுபவங்களையும், பெருமையான காரியங்களையும் பற்றி மிக மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். இதைக் கேட்ட அந்த இளைஞர் தன்னுடைய மரபையும், தன் குடும்பத்தாரின் பெருமைகளையும் எண்ணி வியப்படைந்தார். தன்னுடைய குடும்ப வரலாற்றை அறிந்தவராய் ,இத்தகைய குடும்பத்தின் வாரிசாய் இருக்க தான் பெருமைப்படுவதாய் தனக்குள் எண்ணிக்கொண்டார்.

குடும்ப மரபு என்பது மிகுந்த மதிப்பிற்குரிய ஒன்று. அது ஒரு பொக்கிஷம். கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குடும்ப மரபில் பிறக்க வைத்துள்ளார். அதன் பெருமைகளையும், அம்மரபின் வழி நாம் அனுபவிக்கும் ஆசிரையும் உணர்ந்து நன்றியுள்ளவர்களாய் நாம் வாழ வேண்டும். 

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் மூதாதையர் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வாசிக்கும் போது நமக்கு பயனுள்ள சிந்தனைகள் இல்லாதது போல் தோன்றினாலும் பல ஆழமான கருத்துக்களை நாம் காண முடியும். முதலாவதாக "கடவுளின் தேர்ந்தெடுப்பு" . கடவுள் தன்னை அன்பு செய்யவும், தன்னோடு உடன்படிக்கை உறவில் வாழவுமே  அபிரகாம் வழியாக இஸ்ரயேல் குலத்தைத் தேர்ந்தெடுத்து "ஆண்டவரின் மக்கள்" என்ற புதிய வழிமரபை உருவாக்கினார். இத்தேர்ந்தெடுப்பு மக்களுக்கு ஓர் அங்கீகாரத்தையும், கடவுளின் ஆசிரையும் நிறைவாகப் பெற்றுத்தந்தது.கிறிஸ்தவர்களாகிய நாமும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். திருமுழுக்கின் மூலம் ஆண்டவரின் வழிமரபாக மாறியவர்கள். அவர் தருகின்ற அந்த அங்கீகாரத்தையும், ஆசிரையும்  உணர்ந்தவர்களாய் நாம் இருக்கின்றோமா என சிந்திக்க வேண்டியது நமது கடமை.

இரண்டாவதாக இஸ்ரயேல் மக்களை வழிநடத்த ஆண்டவர் அழைத்த அரசர்களில் பலர் அவருக்குகந்த வாழ்க்கை வாழவில்லை. ஆண்டவரின் வழியில் நடக்காமல் பாவம் செய்தனர். ஏன் தாவீது கூட பாவம் செய்தார் என நாம் வாசிக்கிறோம். ஆனால் கடவுள் அவர்கள் மனம் மாறும் வேளைகளில் மனம் இறங்கி மன்னித்தார். அவர்களைத் தொடர்ந்து தன் பணிக்கென பயன்படுத்தினார். இது அவரின் இரக்கத்தைப் புலப்படுத்துகிறது. கடவுளின் வழிமரபில் வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் மனம் மாறி அவரிடம் சென்று அருடைய பிள்ளை என்ற நிலையைத் தக்க வைக்க முயல்கிறோமா என நம்மை ஆய்வு செய்ய வேண்டும்.

மூன்றாவதாக இப்பட்டியலில் சில பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் வாசிக்கிறோம். கடவுள் ஆண் பெண் எனப் பாகுபாடின்றி தன் மீட்புத்திட்டத்தில் அனைவரையும் பயன்படுத்தியுள்ளார் என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம். கடவுளின் குடும்பத்தில் உறுப்பினர்களாய் இருக்கின்ற நாம் யாரிடமெல்லாம் பாகுபாடு காட்டுகிறோம் என்பதை உணரவும் அத்தகைய மனநிலையை அறவே நீக்கிவிடவும் அழைக்கப்பட்டுள்ளோம்.

நான்காவாதாக இவ்வாசகம் உடன்படிக்கையின் இறைவனை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. உன் மரபிலிருந்து இஸ்ரயேலை ஆள்வதற்கு அரசன் இல்லாமல் போகமாட்டான் என்று தாவீதுக்கு அளித்த வாக்குறுதியை தன் ஒரே மகனை அம்மரபில் பிறக்க வைத்து நிறைவேற்றுகிறார் இறைவன். இறைவனோடுள்ள நமது உடன்படிக்கை உறவை நிலைநிறுத்துவதில் நமது நிலைப்பாடு என்னை என்பதை நாம் உணர இச்செய்தி நம்மைத் தூண்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் "அரசுரிமை உடையவர் வரும் வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவை விட்டுச் செங்கோல் நீங்காது" என்ற வார்த்தைகள் கடவுளின் உடன்படிக்கை அன்பை உறுதிப்படுத்துவதாய் அமைகிறது. இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில் நம் உள்ளத்தில் எழும் கருத்துக்கள் என்ன?

நாம்  அனைவரும் ஆண்டவரின் வழிமரபினர், தேர்ந்தெடுக்கப்படடவர்கள். வழி தவறினாலும் மன்னிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் படுபவர்கள். உடன்படிக்கையின் மக்கள் என்பவையே.நம்முடைய மண்ணகக் குடும்ப மரபில் பெருமை கொள்ளும் நாம், விண்ணகக் குடும்ப மரபை எண்ணி பெருமை கொள்வது நீதியானதே. இதை உணர வேண்டும் பெருமைப்பட வேண்டும். அதோடு நின்று விடாது தொடர்ந்து அவருடைய பிள்ளைகளாய், அவரின் குடும்ப உறுப்பினராய் வாழ முயல வேண்டும். இறைவனின் வழி நடக்க வேண்டும். அதற்கான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

எங்களை உமது பிள்ளைகளாக்கி, உடன்படிக்கையால் உமது வழிமரபில் இணைத்த இறைவா, உமது குடும்ப உறுப்பினர் என்ற நிலையை உமது விருப்பப்படி வாழ்கின்ற வாழ்க்கையால் தக்க வைத்துக் கொள்ள வரம் தாரும். ஆமென்.

Add new comment

9 + 0 =