Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைவனின் முகமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
திருவருகைக் காலத்தின் மூன்றாம் புதன் - I. எசா: 45:6-8,18,21-25; II. திபா: 85:8-9,10-11,12-13; III. லூக்: 7:18-23
நான் குருமடத்தில் படித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவரோடு சாலையில் நடந்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது வழியில் ஒரு வயதான முதியவர் போதிய உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இல்லாமல் இருந்து வந்தார். நானும் என்னுடைய நண்பரும் அருகிலுள்ள கடைக்குச் சென்று உணவு வாங்கி கொடுத்தோம். அந்த உணவை வாங்கி உடனே அதை மிக மகிழ்ச்சியோடு சாப்பிட்டார். அவரை அப்படியே விட்டு விட எங்களுக்கு மனமில்லை. எனவே எனக்கு தெரிந்த அருள்சகோதரியிடம் தொடர்புகொண்டு முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்தோம். அந்த அருள்சகோதரியும் தாங்கள் நடத்திவந்த காப்பகத்தில் அவரை அன்போடு ஏற்றுக் கொண்டார். அப்பொழுது அந்த முதியவர் என்னிடம் "நீங்க இயேசு சாமியை கும்பிறவங்களா?" எனக்கேட்டார். அதற்கு நான் "ஏன் இவ்வாறு கேட்கிறீர்கள்?" எனக் கேட்டேன். அதற்கு அவர் "இப்படிப்பட்ட நல்ல செயல்களை அவர்கள் தான் செய்வார்கள்" என பதிலளித்தார்.
இந்த அனுபவம் என்னை மிகுந்த சிந்தனைக்கு உள்ளாக்கியது. கிறிஸ்தவ வாழ்வே பிறருக்கு பணி செய்வது என்ற ஆழமான கருத்தை என்னால் உணர முடிந்தது. ஆண்டவர் இயேசுவும் தன் வாழ்நாள் முழுவதும் இந்த சமூகத்திலுள்ள எல்லா மக்களையும் முழுவதுமாக அன்பு செய்தார். எந்த ஒரு வேறுபாடும் அவர் பார்க்கவில்லை. அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களை சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட நோயாளிகளை, பாவிகளை, ஒடுக்கப்பட்டவர்களை அவர் அன்பு செய்து புதுவாழ்வு அளித்தார். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் இயல்பு எப்படிப்பட்டது என்பது பற்றியும் இயேசுவைப் பின்பற்றும் கிறிஸ்தவனின் இயல்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது.
நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் சிறையில் அடைக்கப்பட்ட போது தன்னுடைய மரணத்தைத் தழுவுமுன் மெசியாவை தன் சீடர்களுக்கு அறிமுகப்படுத்திட விரும்பினார். எனவேதான் தன் சீடர்களை இயேசுவிடம் அனுப்பி இயேசுவிடமிருந்து உண்மையை அறியும்படி செய்தார். திருமுழுக்கு யோவான் சீடர்களை அழைத்து "வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" என்று அறிந்து வர அனுப்பினார். சீடர்களும் இயேசுவிடம் "வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள். அதற்கு இயேசு மறுமொழியாக "நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்" என்றார்.
இதுதான் மெசியாவின் இயல்பு. இயேசுவின் காலத்தில் பார்வையற்றோர், ஊனமுற்றோர், தொழுநோயாளர், ஏழைகள் போன்றவர்களெல்லாம் கடவுளால் சபிக்கப்பட்டவர்களாக மக்கள் கருதினர். ஆனால் ஆண்டவர் இயேசு உண்மையான மெசியாவின் இயல்பை வெளிப்படுத்தி சமூகத்தில் புறந்தள்ளப்பட்டவர்களுக்கு புது வாழ்வை வழங்கினார். திருமுழுக்கு யோவானின் செயல்பாட்டின் வழியாக அவரின் சீடர்களும் மற்ற மக்களும் இயேசுவே மெசியா என்பதை அறிந்து கொண்டனர்.
இயேசு தான் மெசியா என்பதை தன்னுடைய செயல்பாட்டின் வழியாக வெளிப்படுத்தினார். தான் வந்த நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றினார். யூதர்கள் மெசியா என்பவர் தங்களை ஆண்ட அரசர்களை வென்று அவர் ஒரு ஆட்சி அமைப்பார் என்று நினைத்தனர். ஆனால் இயேசு மெசியாவின் இயல்பு இவ்வுலக அரசாட்சியைச் சார்ந்ததல்ல; மாறாக, இறையாட்சியின் மதிப்பீடுகளைச் சார்ந்தது என்பதை தனது வாழ்வின் வழியாக எடுத்துரைத்துள்ளார். பிறருக்கு உதவி செய்வதும் மனிதநேய செயல்பாடுகளைச் செய்வதும் சமூக அநீதிகளை கண்டும் காணாமல் இருந்துவிடாமல் நீதிக்காக குரல் கொடுக்கவும் இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
எனவே நாம் கிறிஸ்தவ வாழ்வு வாழ்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். ஆனால் அந்தக் கிறிஸ்து பிறப்பு விழா ஒரு முழு அர்த்தம் நிறைந்ததாக உள்ளதா? என்று ஆய்வுசெய்ய அழைக்கப்பட்டுள்ளோம். நாம் இயேசுவின் வருகையை எதிர்நோக்கி இருக்கிறோம். எந்த அளவுக்கு அவருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்தியுள்ளோம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்படுத்த நமக்கு மிகச் சிறந்த முன்னோடியாக இருப்பவர் திருமுழுக்கு யோவான். அவர் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு தன்னையே இயேசுவின் வருகைக்காக ஆயத்தப்படுத்தினார். அவர் வந்த பிறகு இயேசுவை மெசியா என மற்றவருக்குச் சுட்டிக்காட்டினார்.
உலக மக்கள் அனைவரும் இயேசுவை மெசியா என அறிந்து கொள்ளும் வகையில் அவர் இயேசுவின் உண்மையான இயல்பை சுட்டிக்காட்டினார். இப்படிப்பட்ட மனநிலையை கொண்டிருக்கத் தான் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம்மையே ஆயத்தப்படுத்தி இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்று அவரிடம் நம்மையே அர்ப்பணித்துவாழ்வே வாழும் பொழுது நம்முடைய வாழ்வு பொருள் நிறைந்த வாழ்வாக மாறும்.நாம் அனுபவித்த இயேசுவினுடைய அன்பை பிறருக்கும் கொடுக்கின்ற பொழுது நாம் மிகச் சிறந்த இறை ஊழியராக மாறுகிறோம். எனவே இயேசுவின் இயல்பை கொண்டிருக்க நாம் ஏழை எளிய மக்களை அன்பு செய்து அவர்களுக்கு வாழ்வு கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம். மக்களைப் பிரித்து வன்முறைக்கு தூண்டுகின்ற ஜாதி மதம் மொழி இனம் போன்றவற்றை விட்டுவிட்டு அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற மனநிலையில் நாம் பிறரை அன்பு செய்கின்ற பொழுது வாழ்வு திருமுழுக்கு யோவானை போல நமது வாழ்வும் உண்மையின் வாழ்வாக மாறும். இந்த சாட்சிய வாழ்வின் வழியாக அனைத்து மக்களும் வாழ்வு பெறுவர். கிறிஸ்துவ இயல்பு என்பது பிறருக்கு நன்மை செய்வதும் பிறரை ஏற்றுக்கொள்வதும் பிறரை மன்னிப்பதும் ஆகும். நம் ஆண்டவர் இயேசு இவற்றைச் செய்து நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். எனவே இயேசுவின் வழியில் ஏழை எளிய மக்களை அன்பு செய்ய இனிதே புறப்பட இறையருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இயேசுவே! உமது வருகையை ஆயத்த ப்படுத்திய புனித திருமுழுக்கு யோவானைப் போலவும் உம்மைப் போலவும் எந்நாளும் உண்மைக்கு சான்று பகர்ந்து நன்மைகள் பல செய்து, ஏழை எளிய மக்களுக்கு உம்மை நாங்கள் வெளிப்படுத்தத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
Add new comment