Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உலகின் மிக நீண்ட கழிவறை - அகரமுதல்வன் | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review
ஐந்து குறுநாவல்களைக் கொண்ட இத்தொகுப்பு ஈழத்தின் போர் வாழ்க்கையின் ஆவணங்கள் என்றால் மிகையாகாது. நான் இதற்கு முன் இந்த மாதிரி ஈழக் கதைகளைப் படித்ததில்லை. ஒரு விதமான பரிதாபம் கோபம் மற்றும் பயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள்.
வெள்ளி விழுவதற்கெல்லாம் நீ கூச்சலிடாதே... எங்களுக்கு வானமே இல்லை. கொஞ்சநேரம் இந்த கடலையே பார்த்துக்கொண்டிரு.. இதுதான் உன் மூதாதையருக்கான கல்லறை.
இக்கதைகளில் வரும் போராளிகள் அனைவரும் தியாகத்தின் உருவமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இடிமுரசு என்னும் போராளியின் சித்தரிப்பு என்னை ஏதோ செய்ததென்றால் போராளியாக்காவின் செயல் கண்ணில் நீர் வர வைத்துவிட்டது. கடும் சண்டைக்கிடையில் நாய்க்குட்டியைக் காப்பாற்றும் போராளியாக்கா வேனை ஒட்டிச் சென்று எதிரியின் அர்ட்லெறியின் மேல் மோதி ஈழத்திற்காக உயிரை விடுகிறாள்.
சொல்லத்துடிக்கும் இத்துன்பமே இன்பம்.
"எனக்கு சொந்தமில்லாத பூமியின் கடல்" என்னும் கதையில் காதலும் காமமும் கடலைப் போல வருகிறது. அகதி என்பவன் ஓரிடமும் இல்லாதவனாகிறான். அதே கதையில் வரும் கிரேசி அக்காவின் வாழ்க்கை மற்றும் ஒரு பெரும்துன்பம். அதுவும் வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களால் தமிழ் நாட்டில் வாழும் ஈழத்துப் பெண்களுக்கு வரும் துன்பத்தை இக்கதையில்தான் முதன்முதலாக படித்தேன்.
நீ வாழ்க்கையின் உவகையை அடைய வேண்டுமெனில் சாவின் சமீபத்தையாவது தரிசிக்க வேண்டும்.
"சித்தப்பாவின் கதை" என்னும் கதையில் வரும் ஒசாமா சித்தப்பா கதாப்பாத்திரம் பல தமிழக அரசியல்வாதிகளை ஞாபகப் படுத்துகிறது. அவரும்தான் என்ன செய்வார்.அவரால் என்னதான் செய்ய முடியும் பணத்திற்காக இயக்கத்தினரை காட்டித்தான் கொடுக்க முடியும். இயக்கமும் தண்டனை விதிப்பதில் இராணுவத்திற்கு நிகரானதுதான். "அகல்" என்னும் கதையில் இயக்கத்தினரால் கட்டாயமாக சேர்க்கப்படும் வாலிபர்களை பற்றியது. இரண்டு பக்கமும் சாவுதான். எதிர்காலம் அற்ற வாழ்வு .ஒன்று வீரச்சாவு மற்றொருன்று தண்டனைச் சாவு.
எனக்கு போரும் பிடிப்பதில்லை.போர் செய்பவர்களையும் பிடிப்பதில்லை.
"உலகின் மிக நீண்ட கழிவறை " என்னும் கதையில் வரும் இன்பம் மற்றும் ஆமைக்குளம் மறக்க முடியாதது. காலங்காலமாக தாங்கள் குளித்து திரிந்த ஆமைக்குளம் ஆர்மிக்குளமாக மாறிய கதை. இறுதியில் அவர்கள் வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் இருந்த கடல் அவர்களுக்கு உலகின் நீண்ட கழிவறையாக மாறுகிறது.அகரமுதல்வன் என்ற கவிஞன் இந்த புத்தகம் முழுதும் எட்டிப் பார்க்கிறான். எல்லாவாற்றையும் வர்ணனையுடன் விவரிக்கிறார் . போர்ச்சுழலின் வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்திருக்கிறார் அகரமுதல்வன். இக்கதைகளை வாசகனால் எளிதில் தாண்டிச் செல்ல முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதம்தான் கொல்லப்பட்டது ஈழத்தில். போர் வாழ்க்கையைப் பற்றிய கதைகள் மேலும் எழுதப்பட வேண்டும். அப்போதுதான் அது நினைவில் இருந்து கொண்டே இருக்கும். யூதர்கள் அதை மிகச் சரியாக செய்து கொண்டிருக்கின்றனர்.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
இந்த புத்தக விமர்சனத்தைப் படித்தவுடன் புத்தகமே படித்த ஒரு உணர்வு என்று சொல்லும் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவர் சசிதரன். இவர் எளிமையாகவும் ஆழமுடனும் அர்த்ததோடும் பாங்குடனும் எடுத்துக்கூறும் உணர்திறன் கொண்டவர்.
எழுத்தாளர் சசிதரன்
Add new comment