முள் - முத்துமீனாள் | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review


Muzhl

இது ஒரு சுயசரிதை என்றுதான் சொல்லவேண்டும். முத்துமீனாள் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைந்தான் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். சிறு வயதில் அவருக்கு தொழுநோய் இருக்கிறது கண்டுபிடிக்கப்படுகிறது. அதிலிருந்து அவரது வாழ்க்கையே பெரும் போராட்டமாகிறது. 

முதலில் அவரின் பள்ளி வாழ்க்கை தடைபடுகிறது. தோழிகளை விட்டு பிரிகிறாள். அப்பாவோடு அருகில் இருக்கும் ஊருக்குச் சென்று மருந்து சாப்பிடுகிறாள். அதுவும் அந்த பாம்பு கறி கலந்த உணவு படிக்கும் நமக்கே ஒரு மாதிரி வருகிறது. நோய் முற்றவும் ஒரு கிறிஸ்துவ தொழுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். விடுதியில் கடுமையான விதிகள் மற்றும் புழு நெளியும் களி சாப்பாடு. பல்வேறு மனிதர்களை சந்திக்கிறாள். இப்படியாக ஐந்து வருடங்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வெளியே வருகிறாள். 

அவளை யாரும் திருமணம் செய்ய வரவில்லை அனைவரும் நோயைச் சொல்லி மறுக்கிறார்கள். இவளும் சிலரை நிராகரிக்கிறாள். ஆனால் அவள் அதற்கெல்லாம் கவலைப்படாமல் தனது வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்கிறாள். அவள் தோழிகளில் பலரின் திருமணவாழ்வு துன்பமாகவே, முடிந்தது. நெருங்கிய தோழி மல்லிகா தற்கொலை செய்து கொள்கிறாள். யாருமே இவளைப்போல வாழ்க்கையை எதிர்கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையை அடுத்தவரிடம் ஒப்படைத்தவர்கள். 

மருத்துவ விடுதியின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் முத்துமீனாள். அங்கு ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் தென்னிந்திய திருச்சபை என இருசாராரும் வருகிறார்கள். ஆண்கள் பெண்கள் மற்றும் குடும்பம் என தனித் தனியாக வாழுகிறார்கள். பல காதல் கதைகள் வருகின்றன தோழி மல்லிகாவின் காதல் ,ராதா காதலித்தவனால் கொடுமைப் படுத்தப்படுகிறாள். பல கொடுமைகளுக்குப் பிறகு கணவனை பிரிந்து அம்மாவிடமே செல்கிறாள். மற்றொருன்று பீட்டர் மற்றும் செரின் அக்காவின் காதல் கதை. இரு ஓரின சேர்க்கை கதைகளும் வருகிறது.சுமதி மற்றும் கீதாவின் கதையோ காமத்தின் வேட்கையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கதையில் வரும் பெரும்பாலான பெண்கள் தங்களை தாங்களே அழித்துக்கொள்கிறார்கள்.  

மற்றொரு பக்கம் இத்தாலியில் இருந்து வந்த சேவைக்காகவே தன்னைப் அர்பணித்துக் கொண்ட கன்னியாஸ்திரீ இவளைப் படிக்க வைகிறாள். இவள் அவரை அம்மா என்றுதான் அழைக்கிறாள். அவரும் இவளை தனது மகள் போல பார்த்துக் கொள்கிறார். அந்த அன்பையும் சிலர் பொறாமையாக பார்க்கிறார்கள். மத மாற சொல்லி இவள் மதம் மாறவில்லை அம்மாவும் அவளை கட்டாயப்படுத்தவில்லை. பெண்பார்க்க வந்த போது எழுந்து நின்று வணக்கம் செய்தவரை திருமணம் செய்கிறாள். முதலிரவில் எந்த ஒரு பயமும் இன்றி எதிர்பார்த்து காத்திருப்பதோடு நாவல் முடிகிறது.

"பெண் குழந்தை பிறக்கவில்லையே என்று அம்மா கவலையாயிருந்தாள்" என்று இந்த கதை தொடங்குகிறது. நோய் குணமாகியும் நம் சமூகம் எப்படி ஒருத்தரை நடத்துகிறது என்பதை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது. முத்துமீனாள் போலியாக எதையும் சித்தரிக்கவில்லை என்றே தோன்றுகிறது ஏனென்றால் அவர் நமது அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை மிகவும் வெளிப்படையாக சுட்டிக் காட்டிக் கொண்டே செல்கிறார். இந்த அணுகுமுறைதான் இந்த நாவலின் வெற்றி. 

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

இந்த புத்தக விமர்சனத்தைப் படித்தவுடன் புத்தகமே படித்த ஒரு உணர்வு என்று சொல்லும் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவர் சசிதரன். இவர் எளிமையாகவும் ஆழமுடனும் அர்த்ததோடும் பாங்குடனும் எடுத்துக்கூறும் உணர்திறன் கொண்டவர்.

எழுத்தாளர் சசிதரன்

(www.sasitharan.blogspot.com)

Comments

Thank You for your book review.

Add new comment

9 + 6 =