கிறிஸ்து நம் அரசர் | குழந்தைஇயேசு பாபு


Christ the King

பொதுக்காலத்தின் 34 ஆம் ஞாயிறு - கிறிஸ்து அரசர் பெருவிழா - I. எசே: 34:11-12,15-17; II. திபா: 23:1-2.3.5.6; III. 1 கொரி: 15:20-26,28; IV. மத்: 25:31-46

இன்றைய நாளில் நம் தாய்த்திருவையோடு இணைந்து கிறிஸ்து அரசர் பெருவிழாவினைக்  கொண்டாடி மகிழ்கின்றோம். அரசர் என்பவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு அரணாகவும் அடைக்கலமாகவும் அன்பாகவும் இருப்பவர். ஆண்டவர் இயேசு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த உலக மக்களை ஒரு அரசருக்குரிய மனநிலையோடு வழிகாட்டினார். இவ்வுலக அரசர்கள் அரசர்களின் பண்புகளை வாழ்வாக்காமல் சுயநலத்தோடு மக்களை அடக்கி அடிமைகளாக வைத்திருந்தனர்.எனவேதான் நம் ஆண்டவர் இயேசு ஒரு  அரசர் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆழமான வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளார்.

இன்றைய நாள் விழாவானது தீய வழியில் இந்த உலகை வழி நடத்திக்கொண்டிருந்த  அலகையை வென்று அன்பாலே இந்த உலகை ஆட்சி செய்த ஆண்டவர் இயேசுவை அரசராக கொண்டாட வழிகாட்டுகின்றது. இயேசு பிறந்தது முதல் இறந்தது வரை ஒரு அரசராகவே சுட்டிக் காட்டப்படுகிறார். 

ஆண்டவர் இயேசு  பிறந்தபோது மூன்று ஞானிகள் பாலன் இயேசுவை காண வந்தனர். அப்போது அவர்கள் ஏரோது அரசரிடம் "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக்கண்டோம்" (மத்: 2:2) எனக் கூறினர். இதைக்கேட்ட அவரது உள்ளம் கலங்கியது. ஏனென்றால் ஏரோது  அரசப்பதவி ஆசையிலே நிறைந்திருந்தான். எனவே தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி பல பச்சிளம் குழந்தைகளை கொல்லும் அளவுக்கு துணிந்தான். இது ஏரோதுவின் பதவி வெறியை சுட்டிக்காட்டுகின்றது.

மத்தேயு நற்செய்தியாளர் யூதக் கிறிஸ்தவர்களை மனதில்கொண்டு தனது நற்செய்தி எழுதியுள்ளார். எனவே தான் இயேசு தாவீது அரசரின் வழிமரபினர் என்று  சுட்டிக்காட்டியுள்ளார். இயேசு அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்றும் 'தாவீதின் மகன்' என்றும்  இயேசுவின் மூதாதையர் பட்டியல் வழியாக (மத்: 1:1,21:4-5,9) அறியமுடிகின்றது. இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்ற நல்ல கள்வனின் சான்று இயேசுவை ஒரு அரசராக சித்தரிக்கின்றது.  மேலும் விசாரணையின்போது இயேசுவிடம் பிலாத்து "நீர் அரசர்தானா?" என்று கேள்வி எழுப்பும் பொழுது எந்த ஒரு மறுப்பும் சொல்லவில்லை என நாம் வாசிக்கின்றோம்.

இயேசு ஒரு அரசர் என்பதை அறிய மேற்கண்ட விவிலியச் சான்றுகள் நமக்கு அடிப்படையாக இருக்கின்றன. பிலாத்து "நீ அரசர் தானா?" இந்தக் கேள்வி எழுப்பியபோது மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தாலும் தனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்ற பதில் மட்டும் தருகிறார். இயேசுவின் இந்த பதில் இயேசுவின் அரசாட்சியைப் பற்றிய தெளிவான உண்மையை வெளிப்படுத்துகின்றது.

இயேசுவின் உண்மையான அரசாட்சி இறையாட்சியின் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகும். இவ்வுலகம் சார்ந்த பதவி, பணம், சொகுசான வாழ்வு, வசதிகள், பணிவிடைகள், அதிகாரம், ஆணவம், செருக்கு போன்ற பல்வேறு நிலையற்றவற்றைத் தாண்டியது தான் இயேசுவின் அரசாட்சி. இயேசுவின் அரசாட்சி இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அரசாட்சி போன்றதல்ல; மாறாக,  இறையாட்சி மதிப்பீடுகளை உள்ளடக்கிய அரசாட்சி. இவ்வுலகை ஆட்சி செய்த அரசர்கள் பதவி, பணம், சொகுசான வாழ்வு, வசதிகள், பணிவிடைகள், அதிகாரம், ஆணவம், செருக்கு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை அன்போடு வழி நடத்தாமல் அதிகாரத்தோடு வழிநடத்தி அவர்களை அடிமைப்படுத்தினர். இப்படிப்பட்ட மனநிலையோடு வாழ்ந்தவர்கள் தான் விவிலியத்தில் நாம் காண்கின்ற அரசர்கள் ஆவர். பழைய ஏற்பாட்டில் பார்வோன், சவுல் போன்ற அரசர்களெல்லாம் மக்களை அன்போடு வழிநடத்தாமல் அதிகாரத்தோடு வழிநடத்தி தங்களின் பதவியின்  வழியாக பிறரை அடிமைப்படுத்த நினைத்தனர்.

அதேபோல புதிய ஏற்பாட்டில் இயேசு காலத்தில் வாழ்ந்த அரசர்களான ஏரோது அரசரின் வழிவந்த அரசர்கள் மற்றும் உரோமையை ஆட்சி செய்த அரசர்கள்  மக்களை அடிமைப்படுத்தி பதவியிலே மகிழ்ச்சி கொண்டவர்களாக இருந்தனர். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட அரசர்கள் இயேசுவின் பார்வையில் இறையாட்சிக்கு எதிரானவர்கள். ஏனெனில் உண்மையான அரசர் என்பவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களிடத்தில் அன்பும் இரக்கமும் பகிர்வும்  பரிவும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவ்வுலகை ஆண்ட அரசர்கள் மற்றும் ஆளும் அரசுகள் தன்னுடைய சுயநலத்திற்காக மக்களை பயன்படுத்தி அடிமையின் பாதையில் வழி நடத்தி வருகின்றனர். இத்தகைய மனநிலை இறையாட்சி மதிப்பீட்டிற்கு எதிரானது. ஒரு அரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நம் ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக வாழ்ந்து காட்டி சென்றுள்ளார்.  பணிவிடை ஏற்பவர்கள் அரசர்கள் அல்ல; மாறாக, பணிவிடை செய்பவர்களே உண்மையான அரசர்கள் என்ற வாழ்வியல் பாடத்தை இம்மண்ணுலகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார். தான் பாடுபட்டு இறப்பதற்கு முன்பாக இறுதி இராவுணவின் போது தனது சீடர்களுடைய கால்களை கழுவி ஒரு அரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். பிறரைத் தாழ்த்துபவர்களாக அல்லாமல் தாழ்ச்சியோடு பணி செய்வதே உண்மையான அரசருக்கு அடையாளம். இதை புரிந்து கொண்டு மக்களை ஆட்சி செய்வதுதான் உண்மையான இறையாட்சி மதிப்பீடுகளுக்கு உகந்த அரசாட்சி. எனவே தான் ஆண்டவர் இயேசு பிலாத்துவிடம் 'என்னுடைய ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்று கூறியுள்ளார். எனவே உண்மையான அரசாட்சிக்கு இயேசு தன் வாழ்வின் வழியாக சான்று பகிர்ந்துள்ளார். அரசராகிய இயேசு இவ்வுலகிற்கு வழங்கிய இறையாட்சியை  நாமும் அனுபவிக்க அந்த இறையாட்சி மதிப்பீடுகளை அறிந்து புரிந்து கொள்வது அவசியமாகும். அந்த மதிப்பீடுகளைப் பற்றி பின்வருமாறு இந்த நாளில்  சிந்திப்பது சிறந்ததாகும்.

முதலாவதாக, இயேசுவின் அரசாட்சியில்  அதிகாரம் என்பது  இருக்காது ; மாறாக, அன்புக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே  நம்முடைய அன்றாட வாழ்விலும் அன்பால் பிறரை ஆட்சி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். உதாரணமாக ஒவ்வொரு குடும்பத்தின் தலைவர் அரசராக கருதப்படுகிறார். குடும்பத்தலைவர் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை அடிமைப்படுத்த நினைக்காமல் அன்போடு அவர்களை ஆட்சி செய்யும் பொழுது அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கும். ஆனால் அன்பு இல்லாமல் ஆணவத்தோடு ஒரு குடும்பத்தலைவர் தனது குடும்ப உறுப்பினர்களை அணுகினார் என்றால் அங்கு பிரச்சினைகளும் மகிழ்ச்சியற்ற நிலையும் தான் இருக்கும். அதேபோல  எந்தவொரு பணியிலும் தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் அன்போடும் அக்கறையோடும் தனக்கு கீழ் பணிசெய்யும் பணியாளர்களை வழிநடத்தும் பொழுது அங்கு சிறப்பான கனிகளை அவர்கள் கொடுப்பார்கள். ஏனெனில் அன்பாலே உலகை வெல்லலாம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நம் அரசர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

இரண்டாவதாக, இயேசுவின் அரசாட்சியில் சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உலகத்தில் பிறந்த எல்லா மனிதரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவருமே இறைவனின் பிள்ளைகள் என்ற ஆழமான உண்மையை ஆண்டவர் இயேசு அனைவரையும் ஏற்றுக் கொள்வதன் வழியாக நமக்குக் காட்டியுள்ளார். இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள் தங்களுக்கு மட்டும்தான் மெசியா என்றும்  தங்களுக்கு மட்டும்தான் மீட்பு என்று மதையில் வாழ்ந்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு அனைவரையும் அன்பு செய்தார்.அனைவரையும் தன்னுடைய சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்டு பல்வேறு நலன்களையும் வல்ல செயல்களையும் செய்தார். எனவே ஆண்டவர் அரசாட்சியில் இணைந்து இருக்கின்ற நாமும் ஜாதி, மதம், மொழி , இனம் போன்ற பாகுபாடுகளைக் களைந்து சமத்துவ பாதையில் அனைவரையும்  ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற அழைக்கப்பட்டுள்ளோம். 

மூன்றாவதாக, சமூக நீதிக்காக போராடுவது இயேசுவின் அரசாட்சியில் முக்கியமானதாகும். இயேசு தன்னுடைய வாழ்வு முழுவதும்  சமயத்தின் பெயரால் செய்யப்பட்ட சமூக அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் கடுமையாகச் சாடினார். சமயத்தின் பெயராலும் திருச்சட்ட நூலின் பெயராலும் மக்களை அடிமைப்படுத்திய பரிசேயர்களையும் சதுசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் இயேசு கடுமையாகச் சாடினார்.எனவே இயேசுவின் அரசாட்சியில் இறையாட்சி மதிப்பீட்டை அனுபவிக்க நினைக்கும் நாமும் சமூகத்தை வாட்டி வதைக்கும் தீய சக்திகளாகிய சமூக அநீதிகளைக் கண்டும் காணாமல் இருக்காமல் அவற்றிற்காக குரல்கொடுத்து மண்ணும் மனிதமும் காக்கப்பட நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம்.

நான்காவதாக, இயேசுவின் அரசாட்சியில் மனிதநேய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இன்றைய நற்செய்தியில் கூட மனிதநேய செயல்பாடுகளை செய்பவர்கள் நீதி தீர்ப்பின் போது மிகுந்த கைமாறு பெறுவர் என்பதை அறியமுடிகின்றது. இயேசு ஒரு அரசராக இருந்து இறுதி நாட்களில் நல்லவர்களையும் தீயவர்களையும் பிரித்தெடுத்து, அவர்களுக்கு நீதித் தீர்ப்பு வழங்குவார். ஏழ்மையில் இறைவனை காணலாம் என்பது முதுமொழி. ஆனால் எல்லாரிலும் இறைவனை காணலாம் என்பது புதுமொழி. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தனது இரண்டாம் வருகையின் போது நடக்கவிருக்கும் நீதி தீர்ப்பைப் பற்றி எடுத்துரைக்கின்றார். எனவே நீதி தீர்ப்புக்கு முன்பாக அனைவரும் மனிதநேயச் செயல்பாடுகளோடு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திட அழைக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர்களாகவும் தாகமாய் இருப்பவர்களுக்கு தாகத்தை தணிப்பவர்களாகவும் அன்னியரை ஏற்றுக்கொள்பவர்களாகவும் நோயுற்றவர்களைக் கவனித்துக் கொள்பவர்களாகவும் சிறையில் இருப்பவர்களை தேடிவந்து சந்திப்பவர்களாகவும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இம்மண்ணுலகில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி  மதிப்பீடுகளின்படி வாழுகின்ற பொழுதுதான் இறுதித் தீர்ப்பின் போது மிகுந்த கைமாறு பெற்றுக்கொள்ளமுடியும். விண்ணுலகில் ஆண்டவர்  இயேசுவின் அரசாட்சியில் அகமகிழ முடியும்.

ஐந்தாவதாக, ஆயனுக்குரிய மனநிலையில் வாழ்வது இயேசுவின் அரசாட்சிக்கு முக்கியமாகும். நூறு ஆடுகளை மேய்க்கின்ற ஆயர் ஒருவர் தனது ஒரு ஆடு வழி தேடி செல்லும் பொழுது தொண்ணூற்று ஒன்பது ஆடுகளை விட்டுவிட்டு அந்த ஆட்டை  கரிசனையோடு தேடுவது ஒரு மிகச்சிறந்த உயரிய பண்பாகும். அதேபோல நல்ல ஆயனுக்கு தன்னுடைய மந்தையை பற்றிய அறிவு மிகத் தெளிவாக இருக்கும். அதேபோல திருஅவையை வழிநடத்துகின்ற  நடத்துகின்ற திருஅவை தலைவர்களும் நாட்டுத் தலைவர்களும் நல்ல ஆயனின் மனநிலையில் மக்களை வழிநடத்த அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு வழிநடத்தும் பொழுது ஆண்டவர் இயேசுவினுடைய அருளையும் ஆசீரியை நிறைவாக பெறமுடியும். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் மனநிலை அறிந்து செயல்படுபவரே, ஒரு மிகச் சிறந்த அரசர் ஆவார்.

இவ்வாறாக நல்லாயனாகிய நம் ஆண்டவர் இயேசுவின் அரசருக்குரிய மனநிலையை சிந்திக்க முடிகிறது. நம் தாய்த்திருஅவைக்கு நம் ஆண்டவர் இயேசு அரசராக இருந்து நம் அனைவரையும் அன்பாலும் பரிவாலும் பகிர்தலாலும் இரக்கத்தாலும் சமூகநீதியாலும் மனிதநேயத்தாலும் சகோதரத்துவதாலும் ஒவ்வொரு நாளும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அத்தகைய மதிப்பீடுகளை உள்வாங்கி அவற்றை அனுபவித்து அவற்றை நம் வாழ்வாக்கும் பொழுது ஆண்டவர் இயேசுவின் அரசாட்சியில் நாமும் ஒரு கருவியாக பயன்பட முடியும். அப்பொழுது நாமும் இறையாட்சியின் வழியாக மீட்பினை அனுபவித்து பிறரும் மீட்பினை அனுபவிக்க வழிகாட்ட முடியும். எனவே நம் அரசராகிய ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணிப்போம். அவர் வழங்கும் மீட்பினைச் சுவைப்போம். அதற்கான அருளை இறைவேண்டல் செய்வோம்.

இறைவேண்டல்
என்றும் அரசராகிய இறைவா!  உமது பிள்ளைகளாகிய நாங்கள் இம்மண்ணை சார்ந்த அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விண்ணைச் சார்ந்த அரசுக்கு இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்குவதன்  வழியாக முக்கியத்துவம் கொடுத்திட அருளைத் தாரும். அதன் வழியாக நாங்கள் நீர் வழங்கும் மீட்பினைப் பெற்று  பிறரும் பெற்றிட நாங்கள் ஒரு கருவியாகப் பயன்பட தேவையான ஞானத்தையும் அருளையும் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 4 =