Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கோவில் இறைவேண்டலின் வீடா! | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 33 ஆம் வெள்ளி - I. தி.வெ: 10:8-11; II. திபா: 119:14,24.72,103.111,131; III. லூக்: 19:45-48
வயது முதிர்ந்த மூதாட்டிகள் இருவர் கோவில் வாசலிலே அமர்ந்து கொண்டு கோவிலுக்கு உள்ளே போகிறவர்களையும் வெளியே வருபவர்களையும் பார்த்த வண்ணமாய் நெடுநேரம் வீற்றிருந்தார்கள். பலர் காலில் அணிந்திருந்த காலணிகளைக்கூட கழற்றவில்லை. கோவிலுக்குள் அமைதி காக்கவில்லை. ஒருசிலர் தொலைப்பேசியில் மிகச் சப்தமாக பேசிக்கொண்டிருந்ததைக்கண்டு தங்கள் உரையாடலைத் தொடங்கினர். முன்பெல்லாம் கோவிலுக்கு செல்லும் போது வீட்டிலிருந்தே காலணி அணியாமல் செல்வது நம் வழக்கம். கோவிலில் அமைதி காத்து செபம் செய்வோம். செபம் செய்யும் மற்றவரை எவ்விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால் இன்றைய நாட்களில் கோவில் சந்தைக்கடை போல மாறிவிட்டது; அமைதியில்லை. கோவிலில் கூட சண்டைகளும் இரைச்சல்களும் மிகுந்துவிட்டன. கடவுளுக்குரிய இடத்திற்குரிய பண்புகளைக் கடைபிடிப்பதில்லை என்று தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.
இன்றைய நற்செய்தியில் இயேசு கோவிலைத் தூய்மையாக்கிய நிகழ்வானது நம் சிந்தனைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. "கோ" என்றால் அரசன் அல்லது தெய்வம் என்பது பொருள். "இல்" என்றால் இல்லம் அல்லது வீடு என்பது பொருள். தெய்வம் உறையும் வீடு தான் கோயில். செபிக்கவும், இறைப்பிரசன்னத்தை உணரவும் அதன் மூலம் ஒருவர் தன்னை அறிந்து அவருடைய வாழ்வை இறைவழியில் மாற்றவும் உதவும் இடமே கோவில். வெறும் கடமைக்காகவும் பிறர் பார்க்கவேண்டுமென்பதற்காகவும் கோவிலுக்குச் சென்றோமானால் அது கோவிலில் உறையும் கடவுளுக்கு நாம் செய்யும் அவமரியாதை.
"என் தந்தையின் இல்லம் இறைவேண்டலின் வீடு" என்ற இயேசுவின் கூற்று கோவிலின் மதிப்பையும் நம் வாழ்வில் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறுவதாக அமைகிறது. இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பேழையில் அவருடைய உடனிருப்பை உணர்ந்தார்கள். ஏன் போருக்குச் செல்லும் போது கூடப் பேழையை சுமந்து சென்றார்கள். இறைஉடனிருப்பை நம்பி வெற்றிபெற்றார்கள் என நாம் பழைய ஏற்பாட்டு நூல்களில் வாசிக்கிறோம். கடவுளுடைய பேழை கூடாரத்திலும் தான் அரண்மனையிலும் வாழ்வதா என்று வேதனையுற்ற தாவீது கோவில் கட்டத் தீர்மானித்தார். ஆனால் அவ்வாய்ப்பு அருடைய மகன் சாலமோனுக்கு வழங்கப்பட்டது. கோவில் கட்டிமுடிக்கப்பட்டு புனிதப்படுத்தப்படும் போது கடவுளுடைய பிரசன்னத்தை அனைவரும் உணரக்கூடிய இடமாக இக்கோவில் மாறவேண்டுமென்று கடவுளை அதில் வாழ அழைக்கக்கூடிய சாலமோனின் உருக்கமான மன்றாட்டை அரசர்கள் நூலில் நாம் வாசிக்கின்றோம். அப்படிப்பட்ட உன்னத நோக்கத்தோடுக் கட்டப்பட்ட கோயில் அதற்குரிய உண்மையான மதிப்பை இழந்து விட்டதையும் வியாபாரம் செய்யப்படும் இடமாக மாற்றப்பட்டதையும் கண்டதாலேயே இயேசு கோவிலை கோபத்துடன் தூய்மையாக்கும் நிலை ஏற்பட்டது.
நாம் அனுதினமோ அல்லது வாய்ப்புகிடைக்கும் போதோ கோவிலுக்குச் செல்கிறோம். அப்பொழுதெல்லாம் நம்முடைய மனநிலை எவ்வாறு இருக்கிறது? நம்முடைய நோக்கம் எதுவாக இருக்கிறது? நம்முடைய தயாரிப்புகள் எந்நிலையில் உள்ளன? ஆன்மீகத்தேடலுக்காகவும் ஆண்டவரை உணரவும் இறைவேண்டல் மூலம் அவரோடு ஒன்றிருத்திருக்கவும் செல்கிறோமா? அல்லது கடமைக்காகவும், பொழுதுப்போக்கிற்காகவும் ஏனோதானோ என்ற மனநிலையுடனும் செல்கிறோமா? என நம்மை ஆய்வு செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நம் இதயத்திலுள்ளத் தேவையற்றவை அனைத்தையும் அகற்றி அதைக் கோவிலாக மாற்ற முயல வேண்டும். இதுவே நமக்கு இவ்வாசகம் கொடுக்கும் அழைப்பு.
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற நம் ஆன்றோர்களின் வார்த்தையை மனதில் இருத்தி ஆலயத்திற்குரிய மதிப்பை கொடுப்போம். கோவிலில் உறையும் இறைவனை உணர்வோம். இறைவேண்டல் செய்வோம். நம் உள்ளமெனும் கோவிலையும், ஆண்டவரை வணங்கும் ஆலயத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம். தேவையற்ற அனைத்தையும் அப்புறப்படுத்துவோம். அதற்கான அருளை இறைவனிடம் கேட்போம்.
இறைவேண்டல்
எங்களுக்காக கோவிலில் வீற்றிருந்து உமது உடனிருப்பை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் இறைவா! உம்முடைய இல்லத்திற்கு மதிப்பளிக்கவும், இறைவேண்டல் செய்து உம்மோடு உறையவும் எங்கள் உள்ளமெனும் ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்கவும் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment