மனமாற்றத்தில்  மீட்பா! | குழந்தைஇயேசு பாபு


Repentance

பொதுக்காலத்தின் 33 ஆம் செவ்வாய் - I. திவெ: 3:1-6,14-22; II. திபா: 15:2-3.4.5; III. லூக்: 19:1-10

ஒரு முறை ஒரு கிறிஸ்தவருக்கு "புனிதர்கள் சக மனிதர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றனர்?" என்ற சந்தேகம் எழுந்தது. எனவே தனது பங்குத்தந்தையை அணுகி "புனிதர்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டார். அதற்கு அந்த பங்குத்தந்தை "மனிதர்களாகப் பிறந்து புனிதர்களாக வாழ்ந்தவர்கள் தங்களின் செபத்தின் வழியாக கடவுளின் ஒளியில் வாழ்ந்ததால், தாங்கள் பாவத்தில் விழும் பொழுது அதை அடையாளம் கண்டு மனம் மாறி புனிதத்தில்  வளர்ந்தனர். ஆனால் சாதாரண மனிதர்களோ  கடவுளின் உடனிருப்பை உணராமல் கடவுளின் ஒளியை விட்டுவிலகி வாழ்வதால், தங்கள் பாவ வாழ்விலிருந்து மீளமுடியாமல் துன்பப்படுகின்றனர்.  புனிதர்களாக வாழ்வதும் பாவம் செய்யும் மனிதர்களாக வாழ்வதும் நமது கையில் தான் இருக்கின்றது" என்று பங்குத்தந்தை பதிலளித்தார்.  இதைக் கேட்ட அந்த கிறிஸ்தவர் புனிதத்தில் வாழ்வது என்பது கடவுளுடைய பிரசன்னத்தில் வாழ்வது என்ற ஆழமான உண்மையைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு புனிதத்தில் வளரத் தொடங்கினார்.

திருச்சபை வரலாற்றில் எண்ணற்ற புனிதர்கள் இத்தகைய வாழ்விற்கு சான்றாக இருக்கின்றனர். குறிப்பாக புனித அகுஸ்தினார் மனமாற்ற வாழ்விற்கு மிகச்சிறந்த உதாரணம். அவர் இளைஞராக இருந்த பொழுது இவ்வுலகம் சார்ந்தவற்றில் அதிகம் நாட்டம் கொண்டு கடவுளை விட்டு மனம் போன போக்கிலே தன் வாழ்வை வாழ்ந்தார். எண்ணற்ற பாவங்களை கடவுளுக்கு எதிராக செய்தார். இவரின் தாய் மோனிகா இவரின் மனமாற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செபித்தார். தாயின் செபத்தின் தூண்டுதலால் "ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வோமாக!" (உரோ: 13:12) என்ற இறைவார்த்தையை வாசித்தார். அவர் வாசித்த இறைவார்த்தை அவருக்கு மனமாற்றத்தைத்தந்தது. அன்று முதல் அவர் மிகச்சிறந்த ஒரு புனிதராக வாழ்ந்தார். திருஅவையில் ஆயராக மாறி பல்வேறு தத்துவங்களையும் இறையியல் கருத்துக்களையும் வழங்கி திருஅவை இறைநம்பிக்கையில் உறுதிபெற ஒரு கருவியாக மாறினார். ஆண்டவர் இயேசு இந்த உலகத்தில்  மனுவுரு எடுத்தது மனிதர்களாகிய நாம் புனிதர்களாக வாழவேண்டும் என்பதற்காகவே ஆகும். அத்தகைய அழைப்பை தான் இன்றைய நற்செய்தியின்  மூலமாக ஆண்டவர் இயேசு வழங்கியுள்ளார்.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில், யூதர்கள் வரிவசூல் செய்யும் பணியாளர்கள் அனைவரையும் பாவிகளாகக் கருதினர். ஏனென்றால் வரி வசூலிப்பவர்கள் மக்கள் மீது அநியாயமாக வரியைச் சுமத்தி வசூலித்தார்கள். எனவே அவர்களை ஒரு அருவருப்பானவர்களாகப் பார்த்தனர். சக்கேயு என்ற கதாபாத்திரத்தை இன்றைய நற்செய்தியில் நாம் காண்கிறோம். இவர் வரி வசூலிப்பவர்களின் தலைமை ஆயக்காரர். மக்களை வருத்தி அநியாயமாக வரி வசூலித்து செல்வந்தன் ஆனவர்.  நிச்சயமாக சக்கேயு இயேசுவைப் பற்றிய உண்மையை அறிந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்ணுவதையும் உரையாடுவதையும் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஒருவேளை இயேசு தனது வீட்டிற்கு வந்தால் ஒரு கௌரவம் என கூட நினைத்திருக்கலாம். இத்தகைய மனநிலையில் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தார். ஆனால்இயேசுவே நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று கூறிய வுடன்,  இயேசுவை தன் வீட்டில் வரவேற்று அவருடைய உடனிருப்பை உணர்ந்து முற்றிலுமாக தனது பாவத்தை நினைத்து மனம் வருந்தி தனது மனமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். அதிலும் "நேர்மையாளர்களை அல்ல; பாவிகளையே மனமாற அழைக்க  வந்தேன்" (லூக்: 5:32) என்ற இறைவார்த்தைக் கேற்ப இயேசுவுடைய உடனிருப்பும் அவருடைய வார்த்தைகளும் சக்கேயுவை மனமாற வைத்தது. சக்கேயு மனம் மாறிய நிகழ்ச்சி மனமாற்ற வாழ்விற்கு முன்னுதாரணமாக இருக்கின்றது.

சகேயுவின் மனமாற்றம் நமக்கு இரண்டு வகையான மனநிலையை சுட்டிக்காட்டுகின்றது. முதலாவதாக இயேசுவைப்  பார்க்கவேண்டும் என்ற ஆவல். இயேசு பாவிகளை தான் தேடி வந்தார். நிச்சயமாக என்னை கருணையோடு நோக்குவார். என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து எனக்கு புது வாழ்வை தருவார் என்ற ஆழமான நம்பிக்கை சக்கேயுவுக்கு  இருந்திருக்கலாம். சக்கேயு குள்ளமானவர் என்று சித்தரிக்கப்படுகிறார். குள்ளமானவர் என்பது உடல் சார்ந்ததல்ல; மாறாக அகம் சார்ந்தது. தன்னுடைய பாவத்தால் அவர் குள்ளமாக இருந்தார். எனவேதான் இயேசுவை காண அது தடையாக இருந்தது. அந்தத் தடையைத் தாண்டி அவர் அத்திமரத்தில் ஏறி இயேசுவை காண முயற்சி செய்தார். மனம் மாறுவதற்கு அவர் எடுத்த முயற்சியை இது சுட்டிக்காட்டுகிறது. இயேசுவைக் காணவேண்டும் என்று சக்கேயு  முயற்சி செய்ததால், இயேசு சக்கேயு ஏறியிருந்த  அத்தி மரத்தின் கீழ் நின்று "சகேயுவே விரைவாய்  இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும்" (லூக்: 19:6) எனக்கூறி அன்போடும் கருணையோடும் சக்கேயுவின் கண்களை கண்டார். சக்கேயு விரும்பியது இயேசுவை கண்டு அவரோடு தன்னுடைய மனச்சுமைகளை பகிர வேண்டும் என்பதாகும். ஆனால் இயேசு தனது வீட்டில் தங்க வேண்டும் என்று சொன்ன போது மிகுந்த மகிழ்ச்சியோடு இயேசுவை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதனைக் கண்ட  மற்றவர்கள் சக்கேயுவை  நோக்கி முணுமுணுக்காமல் இயேசுவை நோக்கி முணுமுணுத்தார்கள்.

சக்கேயு எவரது எதிர்ப்பையும்  பொருட்படுத்தாமல் இயேசுவை பெரும் மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு வரவேற்றார். இயேசுவை தன் வீட்டிற்கு அழைத்தவுடன் இறைவனின் மகனே தனது வீட்டிற்கு வந்துள்ளார் என்று நம்பி தனது பாவ வாழ்வை விட்டுவிட முடிவெடுத்தார். அதன் வெளிப்பாடாகத்தான் தான் செய்த அநீதிக்கும் பாவத்திற்கும் பரிகாரம்? செய்ய விரும்பினார். எனவேதான் சக்கேயு ஆண்டவர் இயேசுவை நோக்கி "ஆண்டவரே, இதோ என் உடமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால்  நான்கு  மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" (லூக்: 19:8) என்று கூறி தான் மனமாறியுள்ளதை வெளிப்படுத்தினார். எனவே சக்கேயுவைப் போல நாமும் ஆண்டவர் இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள தயார்படுத்தும் பொழுது, நிச்சயமாக நாம் எதிர்பார்ப்பதற்கு மேலாக ஆண்டவர் நம்மை நோக்கி வருவார். நான் நம்முடைய பாவ வாழ்வை விட்டுவிட்டு மனமனமாற்றத்தில் நிலைத்திருந்து புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்ள உதவி செய்வார். சக்கேயுவைப் போல மனமாற நாம் தயாரா?

இரண்டாவதாக, ஆண்டவர் இயேசுவின் மீட்பைச் சுவைக்க நம்முடைய உள்ள கதவைத் திறக்கத் தயாராக இருக்க வேண்டும். இவ்வுலகம் சார்ந்த பணம், பட்டம் பொருள் போன்றவற்றை பெரிதாக நினைக்காமல் அனைத்தையும் பிறர் வாழ பகிர்ந்து கொடுக்கும் பொழுது நாம்  முழுமையான மீட்பைச் சுவைக்க முடியும். ஏனெனில் இறையாட்சியின் மீட்பைச் சுவைக்க இயேசு இறையாட்சியை அடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட வாலிபனிடம் "உமக்குள்ள  யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும்" (லூக்: 18:22) என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் தெளிந்த பார்வையை வழங்கியுள்ளது. எனவே இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ்ந்து மீட்பைச் சுவைக்க எவ்வகை பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாய் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் உடனிருப்பை உணர்ந்த சக்கேயுவும்  தான் குறுக்கு வழியில் சம்பாதித்த அனைத்தையும் நான்கு மடங்கு திருப்பிக் கொடுத்து விடுவதாக இயேசுவிடம் அறிவித்தார். சக்கேயுவின் இந்த மனமாற்ற வாழ்வு அவருக்கு மீட்பை கொடுத்தது. இயேசுவைப் காண பலதடைகள் சக்கேயுவுக்கு இருந்தபோதிலும் இயேசுவை நம்பிக்கையோடு கண்டார். அவரைத் தனது வீட்டில் வரவேற்றார். இயேசுவின் உடனிருப்பை உணர்ந்தார். இயேசு உடனிருப்பு அவரின் மனதை மாற்றியது. இறுதியில் இறையாட்சியின் மதிப்பீட்டிற்காக அனைத்தையும் இழக்க தயாராகினார். அதற்கு கிடைத்த இயேசுவின் பரிசினை,  "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!" என்ற வார்த்தைகள் விளக்குகின்றன.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே தாவீதைப் போலவும் திருத்தூதர் பவுலைப் போலவும் சக்கேயுவைப் போலவும் சிலுவையில் தொங்கிய நல்ல கள்வனை போலவும்  பாவத்துக்காக மனம் வருந்துபவர்களாகவும் அதற்கான பரிகாரத்தைத் தேடுபவர்களாகவும் வாழ முயற்சி செய்யும்பொழுது, நிச்சயமாக நம்மைப் படைத்த கடவுள் திருமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாக நம் பாவங்களை எல்லாம் மன்னித்து மீட்பைச் சுவைக்க அருள் புரிவார். எனவே நாமும் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து நம் உள்ளத்தில் ஆண்டவரை  வரவேற்கும் பொழுது  நாமும் மன மாற்றத்தை அடைய முடியும். சக்கேயுவின்  மனநிலையில் இயேசுவை ஏற்றுக் கொள்ளத் தயாரா? என நம்மை சோதித்துப் பார்ப்போம். மனமாற்றத்தின் வழியாக மீட்பைச் சுவைக்க தேவையான அருளை வேண்டுவோம். 

இறைவேண்டல்
மன்னிக்கும் மாபரனே இறைவா! எங்களுடைய அன்றாட வாழ்விலேயே மனித பலவீனத்தின் வழியாக நாங்கள் செய்யும் பாவத்திலே மூழ்கி கிடைக்காமல், அவற்றிலிருந்து விடுபட உம்முடைய உடனிருப்பை உணரவும் அதன் வழியாக மனமாற்றம் அடைந்து மீட்பைச் சுவைத்து புது வாழ்வைப் பெற்றுக் கொள்ள தேவையான அருளைத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 2 =