Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எப்பொழுதும் தயாராக இருப்போம்! | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 32 ஆம் வெள்ளி - I. 2 யோ: 1:4-9; II. திபா: 119:1,2.10,11.17,18; III. லூக்: 17:26-37
இயேசுவின் இரண்டாம் வருகையின் போது நடைபெறும் இறுதித் தீர்வைப் பற்றிய செய்தி இன்றைய நற்செய்தி மூலமாக நமக்கு தரப்படுகிறது. நாம் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக இந்த நற்செய்தி அமைகின்றது. தயாராக இருப்பது என்பது நம்முடைய கடமைகளைச் சரிவர செய்வதாகும். மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நம் கடமைகளைச் செய்யாமல், நம்முடைய மனச்சாட்சிக்குப் பயந்து நம்முடையக் கடமைகளைச் செய்யும் பொழுது நம் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். வாழ்வில் சாதனைகள் பல செய்து மனிதர்களாக வாழ்ந்த எண்ணற்ற நபர்கள் தங்களுடைய கடமைகளைச் சிறப்பாகச் செய்தனர். அப்படிப்பட்டக் கடமை உணர்வோடு நம்மை தயார்படுத்திக் கொள்ளவே நம் ஆண்டவர் இயேசு இந்நற்செய்தி மூலமாக நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
ஓர் ஊரில் நேர்மையான மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அந்த ஊரின் மீது மிகுந்த அக்கறைக் கொண்டிருந்தார். எந்தச் சூழலிலும் அவர் நேர்மை தவறாமல் தனது பணிகளைச் சிறப்பாக செய்து வந்தார். அவரைக் கண்ட ஏராளமான நபர்கள் அவரை விமர்சித்ததோடு, ஏளனமும் செய்தனர். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அம்மனிதர் நேர்மையோடு வாழ்ந்தார். தனது ஊரில் எண்ணற்ற மரக்கன்றுகளை நட்டு அந்த ஊரையே ஒரு சோலைவனமாக மாற்றினார். மக்கள் தண்ணீர் இல்லாமல் துன்பப்படக்கூடாது என்று அரசு அலுவலகங்களில் மனுக்களைக் கொடுத்து தண்ணீர் பெற வழிகாட்டினார். எல்லாக் குழந்தைகளும் தங்கள் ஊரிலேயே படிக்க வேண்டுமென்று பள்ளிக்கூடங்கள் கட்ட, அவர் ஏறி இறங்காத அரசு அலுவலகங்களே கிடையாது. இறுதியில் பள்ளிக்கூடமும் அந்த ஊரில் கட்டப்பட இவர் முக்கியமான மனிதரானார். இருந்தபோதிலும், சிலர் இவரை ஏளனமாகத்தான் பார்த்தார்கள். அவர் மனம் கலங்காமல் தன்னுடைய கடமைகளைச் செய்து மனிதநேய சிந்தனையோடு வாழ்ந்து வந்தார். இவரின் உண்மைத் தன்மையை அறிந்த ஒரு தனியார் தொலைக்காட்சி இவரின் நல்ல செயல்களை அங்கீகரிக்கும் விதமாக விருது ஒன்று கொடுத்துப் பெருமைப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் அந்த தனியார் தொலைக்காட்சியின் சார்பாக அந்த ஊருக்கு நலத்திட்டங்களும் செய்யப்பட்டது. இவர் வழியாக, அந்த ஊர் அனைவரும் அறிந்து கொள்ளும் ஊராக மாறியது.
இந்த நிகழ்வில் காண்பது போல நாம் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் நம்முடையக் கடமைகளைப் பல்வேறு எதிர்ப்புகளுக்கும், ஏளனங்களுக்கு மத்தியிலும் சிறப்பாகச் செய்யும் பொழுது, நிச்சயமாக நாமும் ஒருநாள் அங்கீகரிக்கப்படுவோம்.ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையும் இவ்வாறே அமையும். இரண்டாம் வருகை எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் எப்போது வந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என்ற மனநிலையை நம்மில் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் இறையாட்சியின் மதிப்பீட்டின்படி வாழும் பொழுது நாம் பிறரால் விமர்சிக்கப்படலாம், காயப்படுத்தப்படலாம், ஒதுக்கப்படலாம், ஆனால் அவற்றையெல்லாம் கண்டு மனம் தளராமல் துணிவோடு நம் பணிகளைச் செய்து, நற்செய்தி மதிப்பீட்டிற்குச் சான்று பகர்ந்து வாழும்பொழுது, மீட்பின் கனியைச் சுவைக்கமுடியும்.
மேலும் இன்றைய நற்செய்தி, ஆண்டவரின் இரண்டாம் வருகையை எதிர்கொள்ள, நம்மை நாமே எப்படித் தயாரிப்பது என்ற ஆழமான சிந்தனையையும் நமக்கு வழங்கியுள்ளது. இன்றைய நற்செய்தியில் நோவா, லோத், லோத்தின் மனைவி என்ற மூன்று நபர்களைக் காணமுடிகின்றது. ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தப்படுத்த நோவா மற்றும் லோத் எப்படி நம்மைத் தயாரிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். லோத்தின் மனைவி ஆண்டவரின் வருகையின்போது நம்மை எப்படி தயாரிக்கக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர்.
நோவாவின் காலத்தில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து அனைவரையும் அழித்தபோது, வாழ்க்கை உண்பதும், குடிப்பதும், பெண் கொள்வதும், கொடுப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். கடவுளை முற்றிலும் புறக்கணித்து உலகம் சார்ந்த வாழ்க்கையிலேயே மூழ்கி வாழ்ந்தனர் (தொநூ: 6:5-8). இருந்தபோதிலும் நோவா கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து நேர்மையோடு கடவுளின் விருப்பத்தின்படி செயல்பட்டார்.
அதேபோல லோத்தின் காலத்தில், சோதோம் கொமோரா நெருப்புத் தீயால் எரிந்து அழியக் காரணம் அவர்களின் பாவமே ஆகும். அவர்கள் உடலின்பம் ஒன்றே வாழ்வின் இலக்காகக் கொண்டு பாவத்திற்கு மேல் பாவம் செய்தனர். லோத்து அது பாவம் என்று உணர்ந்து கடவுள் பக்கம் திரும்பினார். எனவே கடவுள் லோத்தையும், அவரது மனைவியையும் மீட்க விரும்பிய போதும் லோத்தின் மனைவி கடவுளின் கட்டளைப்படி கீழ்படியாமல் திரும்பிப்பார்த்ததால் உப்புத் தூணாக மாறினார். கடவுளின் கட்டளையின்படி திரும்பிப் பார்க்காமல் ஓடிய லோத்து வாழ்வைப் பெற்றார்.
நமது அன்றாட வாழ்வில் நாம் செய்கின்ற எல்லாப் பாவங்களுக்கும் தண்டனை உண்டு என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அந்தப் பாவத்திற்கானத் தண்டனை உடனுக்குடனும் உண்டு, உலக முடிவில் மானிடமகன் அரசுரிமையோடு நடுவராக வரும்போதும் உண்டு. "மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்" (லூக்: 17:30) என வாசிக்கிறோம். எனவே இந்த தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள மனம்மாறி தங்களையே தயார்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும். நம்முடைய பாவத்திற்குரிய தண்டனையிலிருந்து நாம் தப்பிக்க அங்குமிங்கும் ஓடத் தேவையில்லை. மாறாக நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்முடைய ஆன்மாவைக் காத்துக் கொள்ளும் படி வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
பாவத்திலிருந்து விடுபட்டு நம்மையே எவ்வாறு ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக ஆயத்தப்படுத்துவது என்பது பற்றிச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். முதலாவதாக, நம்முடைய பாவத்தை தவிர்த்து, இறை உறவில் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு இறை உறவில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வது? ஒவ்வொரு நாளும் நாம் கடவுளுக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். இறைவேண்டலில் நிலைத்திருக்க வேண்டும். இறை உறவில் நிலைத்திருக்க தடையாயுள்ள பாவங்கள் ஒவ்வொன்றையும் நினைத்துப்பார்த்து, அதற்காக மனம் வருந்தி தூய வாழ்வு வாழ முயலவேண்டும். தூய வாழ்வு வாழும் பொழுது நாம் இறை உறவில் நிலைத்திருக்கமுடியும். நம்முடைய ஆன்மாவை காத்துக்கொள்ள முடியும். ஆனால் பாவம் செய்யும் பொழுது நம்முடைய ஆன்மாவின் உயிர் செத்து விடுகிறது. எனவே இறை உறவில் நிலைத்திருக்க இறைவேண்டலிலும், தூய வாழ்விலும் நிலைத்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக, ஆண்டவர் வருகை இப்பொழுது வரும், அப்பொழுது வரும் என்ற மனநிலையில் நம் கடமைகளைச் செய்யாமல், நமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளையும், இந்த அற்புதமான வாழ்வையும் கடவுளுக்குப் பயந்து இறையாட்சி மதிப்பின்படி வாழ்ந்து அதனைச் செயல்படுத்திட அழைக்கப்பட்டுள்ளோம். நம் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் விழிப்போடு இருந்து தயார் செய்வோம். பாவம் செய்வதற்குப் பயப்படுவோம். இறைவன் மட்டுமே நமக்கு நிறைவான வாழ்வை வழங்க முடியும் என்ற மனநிலையில் ஆண்டவர் இயேசு விட்டுச்சென்ற இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்க முயற்சி செய்வோம். அவர் இந்த சமூகத்தில் செய்த மனிதநேயப் பணிகளை நாமும் செய்து மனித சேவையில் புனிதம் காண முயற்சிசெய்வோம். நம்முடைய மனச்சாட்சிக்குப் பயந்து நம்முடைய எல்லா செயல்பாடுகளையும் செய்ய முயற்சி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக ஆண்டவரின் இரண்டாம் வருகை எப்போது வந்தாலும் நமக்கு பயம் தேவையில்லை. மீட்பின் கனியை எப்பொழுதும் சுவைக்க முடியும். அத்தகைய மனநிலையில் வாழ தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! கடந்ததை நினைத்து கண்ணீர் வடிக்காமல், இலட்சிய தெளிவோடு வாழ்வில் முன்னோக்கி நடைபயில தேவையான மனநிலையைத் தாரும். உமது மீட்பின் கனியை சுவைக்கத் தடையாயுள்ள பாவங்களையும், பலவீனங்களையும் விட்டொழித்து, என்றும் உமது நற்செய்தி மதிப்பீட்டுக்குச் சான்று பகர்ந்து,உமது வருகைக்காக எங்களையே தயார்படுத்திட உமது தெய்வீக வல்லமையைத் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment