நம்மில் இறையாட்சியா! | குழந்தைஇயேசு பாபு


Kingdom of God

பொதுக்காலத்தின் 32 ஆம் வியாழன் - I. பில: 1:7-20; II. திபா: 146:7.8-9.9-10; III. லூக்: 17:20-25

ஓர் ஊரில்  தந்தையும்,இரண்டு மகன்களும் வாழ்ந்து வந்தனர். இருவரும்  பொறுப்பில்லாமல் சோம்பேறியாக இருந்தனர். அவர்களை எப்படியாவது சுறுசுறுப்பு உள்ளவராக மாற்ற வேண்டும் என்று தந்தைக் கருதினார். எனவே  இரண்டு மகன்களையும் அழைத்து, அவர்களிடம் "புதையல் ஒன்று இருக்கின்றது. அது நம்மிடம் உள்ள 100 ஏக்கர் நிலத்தில் தான் இருக்கின்றது. எனவே ஆளுக்கு 50 ஏக்கரை பிரித்துக்கொண்டு குழி தோண்டிப் பாருங்கள். புதையல் கிடைத்தால் நீங்கள் செல்வந்தர்களாக  மாறலாம்" என்று கூறினார். அதைக் கேட்டவுடன் மகன்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். உடனே வேலையாட்களின் உதவியோடு ஆளுக்கு 50 ஏக்கர்களைப் பிரித்துக்கொண்டு குழி தோண்ட ஆரம்பித்தனர். வயல்கள் முழுவதும் குழிதோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. எனவே தந்தையிடம் கோபத்தோடு சென்று "புதையல் எங்கே?" என்று கேட்டனர். அதற்குத் தந்தை, "புதையலுக்காக இன்னும் ஆழமாக தோண்ட வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் குழிதோண்டியதால் நிலம்  பண்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்நிலத்தில் வீட்டில் உள்ள விதை நெல்லை எடுத்து விதையுங்கள். அடுத்த ஆண்டு மீண்டும் புதையலைத் தேடலாம்" என்று கூறினார்.  உடனே இரு மகன்களும் வேலையாட்களின் துணையோடு விதைத்தனர். அந்த ஆண்டு நல்ல மழை பெய்து மிகுந்த விளைச்சலைப் பெற்றனர். அதன் வழியாக செல்வந்தர்களாக மாறினார். அப்போது தந்தை இரு மகன்களையும் அழைத்து "நீங்கள் தேடிய புதையல் நிலத்தில் புதைந்து கிடக்கவில்லை; மாறாக, உங்கள் உழைப்பில் தான் புதைந்து கிடக்கின்றது" என்று கூறினார்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் இறையாட்சி என்னும் புதையலை வெளியில் அங்குமிங்குமாக தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவோ "இறையாட்சி உங்கள் நடுவே  செயல்படுகிறது" என்று கூறியுள்ளார். இறையாட்சிப் பற்றிய உண்மை நம் வாழ்வில் தான் உள்ளது. நம் ஆண்டவர் இயேசு, தான் செய்த மூன்று ஆண்டு பணிக்காலங்களில்  இறையாட்சிப் பற்றிய போதனைகளை அதிகமாக வழங்கியுள்ளார். பல்வேறு உவமைகள் வழியாக இறையாட்சிப் பற்றி உண்மையை எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் போதித்துள்ளார். இறையாட்சி என்பது  மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்தது என்ற உண்மையை ஆண்டவர் இயேசு பலமுறை எடுத்துரைத்துள்ளார். உண்மையான இறையாட்சி என்பது அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, மனிதநேயம் போன்ற நற்பண்புகளை வாழ்வாக்குவதே ஆகும்.

இயேசுவின் பார்வையில் இறையாட்சி என்பது அன்பும் ,சமத்துவமும், சகோதரத்துவமும் , மனித நேயமும், சமூக நீதியும் கலந்த ஒரு அறநெறி வாழ்வியல் ஆகும். ஆனால் பரிசேயர்களின் பார்வையில் இறையாட்சி என்பது மெசியாவின் அரசாட்சியாகும் .யூத மக்களின் வரலாற்றில் யூதர்கள் பெரும்பாலும் பல நாடுகளுக்கு அடிமைகளாக இருந்தனர். அடிமை நிலையை அதிகமாக அனுபவித்தனர். இயேசுவின் காலகட்டத்திலும் யூதர்கள் உரோமைக்கு  அடிமைகளாக இருந்தனர். மெசியா வந்து விரைவில் தங்களை அடிமைப்படுத்தும் உரோமை அரசாங்கத்தை வென்று, தங்களுக்கு விடுதலை அளிப்பார் என்று நம்பினார். அதுதான் உண்மையான இறையாட்சி என்று கருதினர்.

இந்தப் பின்னணியில்தான் பரிசேயர் ஒருவர் இயேசுவைப் பார்த்து "இறையாட்சி எப்போது வரும்" என்று கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் ஆண்டவர் இயேசு மறுமொழியாக "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவிலேயே செயல்படுகிறது" என்று ஆண்டவர் இயேசு பதிலளித்தார். நாம் பல நேரங்களில் நம் அன்றாட வாழ்வில் பரிசேயர்களைப் போல இறையாட்சி விண்ணிலிருந்து வரப்போகிறது என்று கருதுகிறோம். ஆனால் உண்மையான இறையாட்சி என்பது நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் தான் இருக்கின்றது. நாம் அன்போடு பிறரோடு பேசுகின்ற பொழுதும் நமது அன்பைப் பிறருக்கு வெளிப்படுத்துகின்ற பொழுதும், இறையாட்சியை நம்மில் வாழ்வாக்குகின்றோம். நம் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பொழுது நாம் இறையாட்சியை நம்மில் வாழ்வாக்குகின்றோம்.

இந்த உலகத்தில் வாழ்கின்ற எல்லா மனிதர்களும் சகோதர சகோதரிகள் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் கடவுளின்  பிள்ளைகள் என ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டு சகோதரத்துவ மனநிலையோடு அன்பு செய்யும்பொழுது,  நம்மிலே இறையாட்சியை வாழ்வாக்குகின்றோம். நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் உண்மையோடு வாழ்ந்து உண்மைக்குச் சான்று பகரும்  பொழுது,  இறையாட்சியை நம்மில் வாழ்வாக்குகின்றோம். இறையாட்சி  வெளியிலிருந்து வராது. மாறாக, இறையாட்சி  நம்முடைய வாழ்விலிருந்து தொடங்கும் என்பதைப் புரிந்துகொண்ட மனநிலையோடு வாழத்தான் இன்றைய  நாளில் ஆண்டவர் இயேசு, நற்செய்தி மூலமாக அழைப்பு விடுக்கிறார்.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும் இறையாட்சிப் பற்றிய தவறான போதனைகளை வழங்கினர். இறையாட்சி அங்கே வந்துவிட்டது, இங்கே வந்து விட்டதென மக்களைக் குழப்பினர். அதேபோல் அன்றையக் காலகட்டத்தில்,  பணத்திற்காக இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி இறையாட்சி இங்கே வந்து விட்டது, அங்கே வந்து விட்டது என போலியாகப் பறைசாற்றும் போலி போதகர்களைக்  குறித்தும் எச்சரிக்கையாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எச்சரிக்கையோடு இறையாட்சியின் நற்பண்புகளை வாழ்வாக்கும்  பொழுது, ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது வந்தாலும் நமக்கு பயம் தேவையில்லை. இந்த மண்ணுலக வாழ்வு என்பது ஒரு நிலையற்ற வாழ்வு, நிலையான வாழ்வு வான் வீடாகிய விண்ணுலகத்தை நோக்கிய பயணம். அந்தப் பயணத்தில் இறையாட்சியின் நற்பண்புகளை வாழ்வதன் வழியாக நம்மையே கடவுளுக்கு உகந்த வகையில் தயார்படுத்தி விண்ணுலக வீட்டிலே புனிதர்களோடு  புனிதர்களாக இணைய அழைக்கப்பட்டுள்ளோம்.

இயேசுவின்  இறையாட்சிக் கனவை வாழ்வாக்குவது நமது கையில் தான் இருக்கின்றது. இறையாட்சிக் கனவை வாழ்வாக்குபவர்கள் நிறைவான வாழ்வைப் பெறுகின்றனர். இறையாட்சிக் கனவை வாழ்வாக்கத் தவறுபவர்கள்   நிறைவான வாழ்வை இழந்து விடுகின்றனர். எனவே இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்கும் நல்ல மனநிலையைக் கேட்டு இறைவனிடம் இறைவேண்டல் செய்வோம்.

இறைவேண்டல் 
வல்லமையுள்ள இறைவா! உம் திருமகன் இயேசு கண்ட இறையாட்சிக் கனவை, இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வதன் வழியாக செயல்படுத்திட தேவையான அருளைத் தாரும். இறையாட்சியின் மதிப்பீடுகளை எங்களுடைய சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், வாழ்வாக்கிட தேவையான தூய ஆவியின் கொடைகளையும்  கனிகளையும் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

10 + 8 =