மனித தேவைகள்! | அருட்பணி பால் தினகரன்


 

பொதுவாக மனிதனின் தேவைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம் 

1. உடல் சார்ந்த வகைகள் 

2. மதிப்பு சுயமரியாதை சார்ந்த வகைகள்

3. வாழ்க்கை தரம் சார்ந்த வகைகள் 

உடல் சார்ந்து தேவைகள் என்கிறபோது உண்ணும் உணவிலிருந்து பாலுணர்வு  சார்ந்த தேவைகள் வரை  குறிப்பிடலாம்.   அரிதாக கிடைக்கும் 

வாய்ப்பில் ஒரு பெரிய ஹோட்டலுக்கு சாப்பிட செல்கிறோம் என்றால் நம்மில் பலர் ஒரு சாப்பாடு வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்று எண்ணுவதை விட இங்கு இருக்கிற எல்லாவிதமான சாப்பாடுகளிலும் சுவை பார்த்துவிடவேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆனால் இறுதியில் நம் நேரம் முடிந்து வெளியே வரும்போது,  ஐயோ இந்த ஓட்டலில் ஒரு சாப்பாட்டையும் ஒழுங்காக சாப்பிட வில்லையே என நொந்து கொள்வோம். 

இது போன்றே நம்முடைய உடை இருப்பிடம் போன்ற காரியங்களிலும், இருப்பது போதும்  என்று நிறைவடைவது சற்று கடினமானதே.  இது போலவே நம்முடைய மதிப்பு மரியாதை சார்ந்த காரியங்களிலும்,  எனக்கு இருக்குற வேலையை விட இன்னும் கொஞ்சம் பெரிய வேலை கிடைக்க வேண்டும் அல்லது பதவி உயர்வு பெற வேண்டும்.  இன்னும் நான்கு பேரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும், மரியாதை கிடைக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் நீங்காத  ஏக்கமாக இருந்து கொண்டே இருக்கும்.   வாழ்க்கை தரத்திலும் கிராமத்தில் வாழ்கிறவர்கள்  நகரத்தில் வாழ்வோரை போல சொகுசாக வாழ வேண்டும் என்றும் நகரத்தில் வாழ்கிறவர்கள் கிராமத்தில் வாழ்கிறவர்கள் போல நிம்மதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவரை மாற்றி ஒருவர்  நிறைவு இல்லாமல் மற்றவர்களைப் பார்த்து   ஏக்கம் கொள்வது  மிக சாதாரணம்.

  மனித வாழ்க்கையில் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த மூன்று தேவைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து   தன்னுடைய ஏக்கத்தை,  மனநிறைவு இல்லாத தன்மையை  நிறைவு படுத்திக் கொண்டால் நம்முடைய வாழ்க்கை துன்பமில்லாத, மகிழ்ச்சி மட்டும் நிறைந்த ஒன்றாக மாறிவிடும் என நினைத்து  ஒரு தேவையை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு அதற்காக மட்டும் உழைப்பது  உண்டு.   உதாரணமாக,  ஒருசிலர் என்னுடைய உடல் தேவைகள் பூர்த்தி ஆனால் போதும் என முடிவுசெய்து எவ்வளவு முயற்சி செய்ய முடியுமோ அவ்வளவு முயற்சி செய்து உணவு பழக்கவழக்கங்கள் உடற்பயிற்சிகள் என கடினப்பட்டு கடைசி வரை அதிலும் நிறைவு பெறாமல் வாழ்ந்து செல்வது உண்டு. இதுபோலவே மதிப்பும் மரியாதையும் தேடி தேடி  அலைந்து கடைசிவரை நிறைவு பெறாமல் மனநிலை பாதிக்கப்பட்டு  வாழ்வோரும் உண்டு. இதேபோல், பணம், பொருட்கள் என வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக அல்லல்பட்டு கனவுகண்டு, கனவுகளை நிறைவேற்றி, மீண்டும் மிகப்பெரிய கனவுகள் கண்டு கடைசியில் உள்ளதையும் விட்டுவிட்டு கடை நிலையில் வாழ்கிற மக்களும் இருக்கிறார்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எந்த நிலையில்  இருக்கிறீர்கள்?

 இந்தத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு ஒரு நாளும் நாம் நிறைவுபெற போவதில்லை. ஆனால்  அனைத்து தேவைகளின் மீதும் கவனம் வைத்து அவற்றை சரியான அளவில் நிறைவு செய்து கொள்ளும்போது,  நம்  ஏக்கங்கள்  குறைகிறது,  நிறைவு அதிகமாகிறது.

 

அருட்பணி பால் தினகரன்,அன்பின் பணியாளர் சபை

 

Add new comment

12 + 7 =