உடல் என்னும் கோவில் | குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (09.11.2020)
பொதுக்காலத்தின் 32 ஆம் திங்கள்  புனித  லாத்ரன் பேராலய அற்பணிப்பு விழா 
I: எசே : 47:1-2,8-9,12
II: தி.பா:46: 1-2,3உ. 4-5. 7-8 
III: 1கொரி: 3: 9b-11, 16-17
IV: யோ:  2: 13-22

கடவுள் மனிதனைப் படைத்த பொழுது கடவுள் அவரை தனது உருவிலும் சாயலிலும் படைத்தார். தன்னுடைய மூச்சு காற்றை ஊதி உயிரைக் கொடுத்தார். இது எதைச் சுட்டிக் காட்டுகிறது என்றால் நாம் கடவுளின் சாயலிலும் உயிர் மூச்சிலும் படைக்கப்பட்டவர்கள் என்ற ஆழமான சிந்தனையையே.  இன்றைய நாளில் நம் தாய்த் திருஅவையோடு இணைந்து லாத்தரன் பேராலய அர்ப்பணிப்பு விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாள் விழாவானது நம்முடைய உடல் ஒரு கோவில் என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர்  இயேசு கோவிலைச் சுத்தம் செய்த நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசு தன் உடலை  கோவிலாக கருதினார். அதேபோல எருசலேம் ஆலயத்தை தன் தந்தையின் உறைவிடமாக கருதினார். இப்படிப்பட்ட தந்தையின் தூய ஆலயம் சந்தையாக மாற்றப்பட்டதை பார்த்து கோபம் கொண்டார். " கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ``இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார்.இந்த இயேசுவின் செயல்பாடு தந்தையின் இல்லத்தின் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பைச் சுட்டிக்காட்டுகின்றது.

இயேசுவின் இந்த செயல்பாடு "உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்'' என்ற வார்த்தையை உண்மையாக்குகின்றது 
 பல நேரங்களில் நமக்கு கேள்வி எழலாம். இறை மகனாகிய இயேசு கோபப்படலாமா? என்று. கோபம் என்பது ஒரு உன்னதமான உணர்வு. அது தகுந்த நேரத்தில், சரியான காரணத்திற்காக வெளிப்படுத்தப்படும் போது நல்ல மாற்றத்தையும், சரியான தீர்வையும் தருகின்றது. அன்று ஆலயத்தில் இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட கோபம் இன்றும் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொணர்வதை நாம் உணரலாம்.

குறிப்பாக நமது உடலாகிய ஆலயத்தை நாம் எவ்வாறு பேண வேண்டும் என சிந்திக்க வைக்கிறது. இங்கு நாம் உடல் எனக் குறிப்பிடுவது "உடல், மனம்,ஆன்மா" மூன்றையும் சேர்த்துத்தான். பல வேளைகளில் நமது உடல் மனம் ஆன்மைவை நாமும் தூய்மையற்ற சந்தைகளாக மாற்றிவிடுகிறோம். 

இயற்கை உணவுகளைத் தவிர்த்து
கேடான உணவுகளை உண்ணுதல், இயற்கையாக கடவுள் தந்த அழகை பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழகுபடுத்த பல செயற்கையான சாதனங்களை வாங்கிப் பயன்படுத்துதல் போன்றவை உடலை தூய்மையற்ற சந்தை ஆக்குகின்றன.

உலகம் சார்ந்த எண்ணங்கள்,
இச்சைகள், பிறரையும் நம்மையும் பற்றிய தாழ்வான, தவறான கருத்துக்கள், போட்டி மனப்பான்மை, பொறாமை போன்றவை நம் மனத்தை தூய்மையற்ற சந்தையாக்குகின்றன. 

இறைவனை நாடாமை,சோதனைக்கு உட்படுதல், பாவ வாழ்வு போன்றவை நம் ஆன்மைவை சந்தையாக்குகின்றன. 

இயேசுவின் அன்பு என்னும் சாட்டையால் இவற்றை அடித்துத் துரத்தும் போது நம் உடல் மனம் ஆன்மா முழுவதும் தூய்மையாகி கடவுள் வந்து தங்கும் இல்லமாக நாம் மாற முடியும்.
இவ்வாறு கடவுளின் ஆலயமாக நாம் மாறும் போது நற்சுகம் நம் உடலை நிரப்பும். நற்சிந்தனை நம் மனத்தை நிரப்பும். இறையருள் நம் ஆன்மாவை நிரப்பும். நம் வாழ்வும் கடலோடு  கலந்த ஆற்று நீர் பாயும் இடமெல்லாம் வளம் தருவது போல,கடவுளோடு கலக்கப்பட்டு பலன் தரும்.

கிறிஸ்துவே திருஅவையின் தலை. தலையாகிய கிறிஸ்துவோடு இணைக்கப்பட வேண்டிய உடல் நாமெல்லோருமே. இதனை உணர்ந்தவர்களாய் இறைவன் வாழும் கோவிலாக நம்மை மாற்ற நம்மிடம் இருக்கும் தேவையற்றவை அனைத்தையும் அகற்ற முயலுவோம். அதற்காக இறைவனிடம் வரம் கேட்போம்.

இறைவேண்டல்

எங்கள் ஒவ்வொருவரினுள்ளும் வாசம் செய்யும் இறைவா! தகுதியற்ற எங்களை உமது உறைவிடமாகத் தேர்ந்துள்ளீர். உமது அன்பினாலும் இரக்கத்தாலும் எங்களிடமுள்ள தேவையற்ற அனைத்தையும் அகற்றித் தூய்மையாக்கும். இதனால் நாங்கள் நீர் குடியிருக்கும் உயிருள்ள ஆலயங்களாகத் திகழ்வோமாக. ஆமென்.

 

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

2 + 0 =