இயேசுவின் சீடர்களாய் மீட்புக்காக உழைப்போமா? | குழந்தைஇயேசு பாபு


பொதுக்காலத்தின்  31 ஆம் புதன்   
I: பிலிப்பி: 2: 12-18
II: திபா: 27: 1,4,13-14
III: மத்: 14:25-33

இயேசுவின் சீடர்களாய்  மீட்புக்காக உழைப்போமா?

ஒரு அலுவலக மேளாளர் தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் இருவரை அழைத்து "நம் நிறுவனத்திற்கு ஒரு பெரிய வேலை கொடுக்கப்பட்டுள்ளது. அதை மிகச் சிறப்பாக நாம் செய்ய வேண்டும். நீங்கள் இருவரும் அதைச் சிறப்பாகச் செய்வீர்கள் . கலந்து ஆலோசித்து யார் பொறுப்பை ஏற்கப்போகிறீர்கள் எனச் சொல்லுங்கள் " என்று கூறி அவ்வேலையைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களைக் கொடுத்தார். இரண்டு நாட்கள் அவகாசமும் கொடுத்தார்.இரண்டு நாட்கள் கழித்து இருவருள் ஒருவர் மேலாளரிடம் தான் இந்தப்பணியை செய்யப் போவதில்லை என்றும்,இது மிகவும் சவாலான வேலையாக இருப்பதல் இதைச்செய்வது கடினம் எனவும் கூறினார். இரண்டாமவர் மேலாளரிடம் இப்பணி சற்று கடினமாக இருந்தாலும் தான் அதைச் பொறுப்பேற்று செய்ய தயார் எனவும் கூறினார். சரியான திட்டங்கள் தீட்டினால் நிச்சயம் வெற்றியடைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். சவாலான காரியத்தையும் செய்யத் துணிந்த அலுவலரை மேலாளர் பாராட்டினார்.

எந்த ஒரு காரியத்தையும் அது சிறியதாயிருந்தாலும்  அல்லது பெரியதாயிருந்தாலும்  சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தினால் தான் வெற்றி காணமுடியும். அவ்வாறு திட்டமிடும் போதே அக்காரியத்தால் விளையும் நன்மையென்ன, அதைச்செய்யும் போது எற்படும் இடையூறுகள் யாவை? என்பதைப் பற்றிய தெளிவான பார்வை வேண்டும்.அப்போதுதான் சவால்களை சமாளித்து இலக்கினை அடைய நமக்குத் தேவையான பாதை கிடைக்கும். பலமும் கிடைக்கும்.

இன்றைய வாசகங்கள் நமக்குக் கூறுவது இதுவே. "தன் சிலுவையைச் சுமக்காமல் என் பின்னே வருபவர் என் சீடராய் இருக்க முடியாது "என்று இயேசு கூறுவது நம்மை பயமுறுத்தவோ அல்லது தளர்ச்சியடையச் செய்யவோ அல்ல. மாறாக நம்மைத் தைரியத்தோடு தயார்செய்யவே.எல்லாவற்றையும் எளிதாகவும் நொடிப்பொழுதிலும் செய்து முடிக்க பல கண்டுபிடிப்புகளைக் கொடுத்துள்ளது அறிவியல் உலகம். இந்நிலையில் கடினமான காரியங்களை சிரமமெடுத்து நிறைவேற்றவேண்டிய நிலை நம்மை மலைப்படையச் செய்கிறது.  இயேசுவை பின்பற்ற நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு உன்னதமான அழைப்பு. ஆனால் எளிதான காரியமல்ல. நமக்குப் பல தடைகள் வரலாம். நம் பலவீனங்கள் நம்மைத் தடுக்கலாம். விருப்பங்களும் வெறுப்புகளும் நம்மைப் பின்னோக்கித் தள்ளலாம். உறவுகள் நம்மை திசைதிருப்பலாம். ஆனால் இவை அனைத்தையும் இயேசுவோடு எதிர்கொள்ளும் போது மீட்பு நமக்குச் சொந்தமாகிறது. நாம் இயேசுவின் சீடர்களாய் வாழ முடியும். அதற்கு நாம் முதலில் செய்யவேண்டியது என்னவென்றால் கடவுள் நமக்குத்தந்துள்ள பலம் என்ன என்பது பற்றியத் தெளிவான பார்வை கொண்டிருப்பதே.  இதைத் தெளிவுபடுத்தவே இயேசு திட்டமிட்டுப் போருக்கு செல்லும் அரசனையும், வீடு கட்ட திட்டமிடுபவரையும் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். மீட்புப் பணியில் கடவுள் நமக்குத் தந்துள்ள ஆற்றல்களை திறம்பட திட்டமிட்டு செயல்படுத்தும்போது அதற்கு நிச்சயம் பலமுண்டு என்பதை நாம் உணரவேண்டும். அப்போது நாம் சுமக்கின்ற சிலுவை எளிதாய் மாறிவிடும்.

இன்றைய முதல் வாசகத்திலும் புனித பவுல் இதையொட்டிய கருத்தையே நமக்குக் கூறுகிறார்.
அச்சத்தோடும் நடுக்த்தோடும் உங்கள் மீட்புக்காக உழையுங்கள்.அவ்வாறு கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு உழைக்கும் போது உலக மாயைக்கும்,அம்மாயையை விரும்பித்தேடும் மனிதருக்கும் நடுவே ஒளியின் மக்களாய்த் திகழ்வீர்கள். நீங்கள் உழைப்பதற்கான ஆற்றலை கடவுளே தருவார் என்று கூறி நமக்கெல்லாம் துணிச்சலூட்டுகிறார்.
 
எனவே நாமும் இயேசு தரும் அழைப்பை உணர்ந்து, அவருடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு மீட்புக்காக உழைப்போம். கடவுள் நமக்குத் தந்த பலன்களையும் ஆற்றலையும் கொண்டு திட்டமிட்டு செயல் படுவோம். சவால்களை சமாளித்து இலக்கை நோக்கிப் பயணிப்போம். அதற்கான வரம் கெட்போம்.

இறைவேண்டல்.

ஆற்றலின் உறைவிடமே இறைவா!
நீர் எங்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று, நீர் அளித்த ஆற்றலின் உதவியுடன் தெளிவாகத் திட்டமிட்டு உம்முடைய சீடராக வாழும் பணியை செவ்வனே செய்ய அருள் தாரும்.இடையூறுகளை துணிச்சலுடன் சந்தித்து மீட்புக்காக உழைக்க வரம் தாரும் ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

14 + 1 =