நாம் யாருக்கு அஞ்சுகிறோம்..? | குழந்தைஇயேசு பாபு


Credit: Pixabay

பொதுக்காலத்தின்  28 ஆம் வெள்ளி - I. எபே: 1:11-14; II. திபா: 33:1-2.4-5.12-13; III. லூக்: 12:1-7

தந்தை ஒருவர் செல்லமாய், பொத்திப்பொத்தி வளர்த்த, அன்புக்குரிய தன் ஒரே மகளை முதன்முதலாய் தன்னுடைய ஊரிலிருந்து மேற்படிப்பிற்காக வெளியூர் அனுப்புகிறார். அப்பெண்ணுக்கு நல்ல அறிவும், திறமையும் இருந்தும், மனதெல்லாம் பயமும் கலக்கமும் நிறைந்து இருந்தது. புதிய இடம்,புதிய நபர்கள், புதிய சூழ்நிலை அனைத்தோடும் ஒன்றித்து, 'தன் படிப்பை நன்முறையில் முடிப்போமா' என்ற அச்சம் அவரை மிகவும் வாட்டியது. இந்த அச்சத்தினாலேயே யாருடனும் சரியாகப் பேசாமலும், பழகாமலும் இருந்தார் அந்தப் பெண். சில சமயங்களில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருப்பார். இதைக்கண்ட அவருடைய வகுப்புத்தோழி, ஒருநாள் அவரிடம் சென்று மெதுவாகப் பேச்சுக்கொடுத்து அவரின் தனிமையின் காரணத்தை வினவ, அப்பெண் தன் மனதில் இருந்த அச்சத்தை அவரிடம்  பகிர்ந்து கொண்டார்.

அதைக்கேட்ட வகுப்புத் தோழியானவள், அப்பெண்ணின் திறமைகளைச் சுட்டிக்காட்டி, அனைவரும் அவருடைய திறமைகளைப் பார்த்து வியப்பதாகவும், அனைவருக்கும் அவருடன் பேசிப் பழக விருப்பமிருப்பதாகவும் கூறித் தன்னம்பிக்கை ஊட்டினார். அப்பெண்ணும் தன்னுடைய அச்சங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவந்து அனைவருடனும் திறந்த மனநிலையோடு பழக ஆரம்பித்தார். படிப்பையும் நன்முறையில் முடித்தாள்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில், நாமும் பல்வேறு  சூழல்களில் பலமுறை பயத்தால் ஆட்கொள்ளப்படுகிறோம். சகமனிதர்களைப் பார்த்தால் பயம், பயணம் செய்ய பயம், யாரிடமும் எதையும் பகிர்ந்துகொள்ள பயம்,உறவுகளிடையே பயம், வேலைக்குச் செல்ல பயம், நோய்களைக் கண்டு பயம், தேர்வு பயம் என அடுக்கிக்கொண்டே போகலாம். பயம் அல்லது அச்சம் என்பது நம்முடைய நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு. இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இணையாத நிலை, தன்னிலை உணராத நிலை. தன்னைப் பற்றிய தேவையான அறிவுத்தெளிவு இல்லாமையே பயத்திற்கான முதன்மையானக் காரணம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவராகிய இயேசு, "அஞ்சாதீர்கள்" என்று கூறுகிறார். 'அப்படியே அஞ்சினாலும் ஆன்மாவை அழிக்க வல்ல கடவுளுக்கு மட்டுமே அஞ்சுங்கள்' என்று கூறுகிறார். இத்தகைய இறையச்சம் என்னவென்றால் இறைவனின் அன்பை முழுமையாக உணர்ந்து அவர் திருவுளப்படி வாழ்வதே. 

கடவுள் நம்மேல் கொண்டிருக்கும் அன்பு விவரிக்க முடியாதது. "உங்கள் தலைமுடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன" , "என் பார்வையில் நீங்கள் விலையேறப்பெற்றவர்கள்" (எசா 43:3) "ஆண்டவரே நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்" ( தி.பா 139:1)  "இதோ என் உள்ளங்கைகளில் உன்னைப் பொறித்து வைத்துள்ளேன்" (எசா 49:16) போன்ற இறை வார்த்தைகள் கடவுளின் அன்பைப் பிரதிபலித்து, அவர் நம்மை எந்த அளவிற்கு அன்பு செய்கிறார் என்பதையும் எடுத்தியம்புகின்றன. 

இவ்வாறு, நம்மை அன்பு செய்யும் கடவுள் நம் அச்சங்கள், கவலைகள், கலக்கங்களை எல்லாம் நீக்கி, நாம் தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுக்கிறார். எனவே நாம் தேவையற்ற சூழலில் எவருக்கும், எதற்கும் அச்சப்படத் தேவையில்லை என்பதே இயேசு நமக்குக் கூறும் நற்செய்தி. 

புனித பவுலும் முதல் வாசகத்தில், கடவுளின் திருவுளத்தால் நாம் முத்திரையிடப்பட்டவர்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார். கடவுள் தம்முடைய தூய ஆவியைத் தந்து நம்மை வலுப்படுத்துகிறார் என்பதைக் கூறி, இயேசு கூறியதைப் போல நாம் யாருக்கும் அச்சப்படத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்துகிறார். சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள் நாம், கடவுளின் பார்வையில் மதிப்பு மிக்கவர்கள் நாம் என்பதை உணர்ந்து அன்பு செய்யும் நம் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்சி, தேவையற்ற பயங்களை நீக்கி வாழ, வேண்டிய வரத்தை இறைவனிடம் இறைஞ்சுவோம்.

இறைவேண்டல்

அன்பின் அருட்கடலே..! நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா... எல்லையற்ற அன்பினால் எங்களை ஆளும் உமக்கு மட்டுமே அஞ்சி வாழவும், எங்கள் மனதில் எழும் தேவையற்ற அச்சங்களையும், கலக்கங்களையும், கவலைகளையும் நீக்கி உமது தூய ஆவியாரின் துணையுடன் திடமாய் வாழவும் எமக்கருள் செய்யும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

4 + 0 =