சொந்த செலவில் சூனியம்


நம்ம ஊர்ல சின்ன குழந்தைகள் கையில் காசு  எடுத்துக்கொண்டு போய்  கடையில் மிட்டாய் வாங்கற ஸ்டைல  பார்த்து இருக்கீங்களா?  குழந்தை போய் கடையில மிட்டாயை பார்த்துகிட்டே நிற்கும். உடனே கடைக்காரர் என்ன வேணும்னு  கேட்பார். குழந்தை   எல்லாவற்றையும் ஒரு நோட்டம்விட்டுவிட்டு கடைசியாக ஒரு மிட்டாயை செலக்ட் பண்ணி அந்த மிட்டாயை  நோக்கி கையை காட்டும். கடைக்காரர் அதை எடுத்து குழந்தை   கையில்  கொடுத்துவிட்டு, இன்னொரு கையில் இருக்கிற காசை எடுக்க போகும் போது காசை இறுக்கமா  பிடித்துக்கொள்ளும். கடைக்காரர் காசு கொடு என்று கேட்டு  அதன் கையிலிருந்து எடுக்கும் போது ஐயோ காசு போகுதேன்னு ஒரு ஏக்கப் பார்வை அந்த குழந்தையின் முகத்தில் தெரியும். அப்புறமாதான் அந்த குழந்தையோட பார்வையே கடைக்காரர் கொடுத்த மிட்டாய் மீது திரும்பும். இப்பதான் அந்த குழந்தைக்கு நான் அந்த காசு கொடுத்தா தான் இந்த மிட்டாய் கிடைக்கும் அப்படிங்கறது புரியும். ஒரு குழந்தைக்கு மட்டும் இல்லைங்க பிற்காலத்தில் பெரியவர்களான பிறகும்கூட நமக்கும் ரொம்ப லேட்டா தான் இதெல்லாம் புரியுது.

கிடைக்கிற எல்லாத்தையும் சேர்த்து வச்சுக்கணும் என்னுடைய குதிர்  நிறைந்தால் போதும், அடுத்தவன் எவ்வளவு இழந்தாலும் பரவாயில்லை,  நான் ஒரு துளி கூட இறக்க மாட்டேன் என்று வாழ்வதால் தான், உலகத்தில் 80 சதவீதம் சொத்து 2% பணக்கார மக்களிடமும்,  மீதம் 20 சதவீத சொத்து மட்டும்  மற்ற 98% மக்களிடமும்  இருக்கிறது. உலகமகா பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிற வாரன் பட்  என்கிற அமெரிக்க தொழிலதிபர் தன்னுடைய தொழில் வளர்ச்சி பற்றிய ரகசியத்தை  பற்றி சொல்லும்போது நான் ரெண்டு விதமான விதிமுறைகளை உறுதியாக  பின்பற்றுகிறேன். அதையே தினமும் நான் எனக்குள்ளே சொல்லி ஞாபகப் படுத்திக்  கொள்வேன்  என்கிறார். அந்த விதிமுறைகள் என்ன தெரியுமா 

விதிமுறை  ஒன்று: எந்த காரணத்தை கொண்டும் உன்னுடைய பணத்தை இழக்காதே. 

விதிமுறை 2: எந்தச் சூழ்நிலையிலும் விதிமுறை ஒன்றை மறந்து விடாதே என்பதுதான்.

 இது ஒருபுறமிருக்க அன்றாட வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கிற மக்களிடம் இருக்கிற குழப்பம், நான் எதை இழந்து, எதைப் பெற வேண்டும் என்பதுதான்.  இந்தக் குழப்பத்தில் தான் நம் ஆசைகள் எல்லாம் ஒரு சினிமா பாடல் வரிகள் போன்று, தூக்கத்தை  விற்று கட்டிலை வாங்கவும், தூண்டிலை  விற்று  மீன் வாங்கவும், நாக்கை  விற்று தேன் வாங்கவும், நீரை  விற்று தாகம் வாங்கவும், பூவை விற்று பாசம் வாங்கவும், தாயை விற்று பாசம் வாங்கவும், பூட்டு  விற்று சாவி வாங்கவும் கூடிய ஆசையாக, முடிவுகளாக அமைந்துவிடுகிறது. பல நேரங்களில்  இழப்பதிலும், பெறுவதிலும் நாம் எடுக்கின்ற முடிவு இப்படியாகத்தான் இருக்கிறது குழந்தைகளுடைய உயிரையும் விற்று கணவனை வாங்கும் பெண்களும், பெற்றோர்களை இழந்து மனைவிகளை வாங்கும் ஆண்களும், சொத்துக்களை எல்லாம் விற்று பள்ளி அறிவு வாங்குகிற குழந்தைகளும்,  குழந்தைகளின் சந்தோசத்தை விற்று சொத்துக்களை சேர்க்கிற பெற்றோர்களும் வாழ்கிற சமூகமாக இன்றைய சமூகம்  மாறி இருக்கிறது.  நம்முடைய மனநிலையை புரிந்து கொண்ட நம் தலைவர்களும் கூட நம்மை அதே பாதையில் கூட்டிக்கொண்டு போய்  அவர்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள நினைக்கிறார்கள்.

 இன்றைய தலைவர்கள் நமக்கு படம் போட்டு காட்டுகிற ஒரு விஷயம் வளர்ச்சி; இந்தியா வளர்கிறது, தமிழ்நாடு முன்னேறுகிறது. பல முறைகளில் நாம் வளர்ச்சி   அடைந்து கொண்டிருக்கிறோம், முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த வளர்ச்சிக்காக   நாம்  எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  நிலத்தை இழந்து தான் நாம் விஞ்ஞான, வியாபார வளர்ச்சி அடைய வேண்டுமா? சோலைகளை இழந்து தான் நாம் சாலைகளை பெற வேண்டுமா? நம் ஒழுக்கங்களை இழந்து தான் நாம் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமா? உண்மையில் நாம் பெறுகிற வளர்ச்சி நம் சுயநலத்தை இழந்து பெறுகிற வளர்ச்சியாக, தீமையை அழித்து பெறுகிற வளர்ச்சியாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஏற்கனவே நான் பெற்ற நன்மைகளை அழித்து பெறுகிற வளர்ச்சியாக இருக்க கூடாது. அப்படி பட்ட  வளர்ச்சி சொந்த செலவில் நமக்கு நாமே வைத்துக் கொள்கிற சூனியம் தான் என்பதில் ஐயமில்லை.

அருட்தந்தை மரிய  அந்தோணி ராஜன் sdc

உரோம்,இத்தாலி ...

 

Add new comment

1 + 4 =