நல் உள்ளம் கொண்டவர்களா நாம் !


பொதுக்காலத்தின் 24 ஆம் சனி -  I. 1 கொரி 15:35-37,42-49 - II. திபா 56:9,10-11,12-13 - III. லூக் 8:4-15

கடவுள் இந்த உலகத்தைப் படைக்கும் பொழுது ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு நோக்கத்தைக் கொடுத்திருக்கின்றார்.ஆகவேதான் மரம்,  செடி, கொடி,ஊர்வன,பறப்பன என  எல்லா உயிரினங்களும் அதனதன் பலன்களை தகுந்த நேரத்தில் கொடுக்கின்றன. நல்ல மரங்கள் அனைத்துமே நல்ல கனிகளைக் கொடுக்கின்றன.  கடவுள் படைத்த படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பாகவும்,  உயர்ந்த படைப்பாகவும் கருதப்படுவது மனித படைப்பாகும். ஏனெனில் கடவுள் மனிதனை மட்டும் தான் தன்னுடைய உருவிலும் சாயலிலும் படைத்தார். நல்லவர்களாக படைத்து  நற்கனி கொடுத்து,நல்வழி காட்டினார். ஆனால் மனிதர்களாகிய நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து நம்முடைய சுயநலம்,சூழ்ச்சி, வஞ்சகம், வாஞ்சையில்லா தன்மை,வீண் ஆடம்பரங்கள்,வெட்டிப்பேச்சுகள் இவைபோன்ற தீய கனிகளால், நற்கனிகளை நல்க நமை நாமே மறந்து வாழ்கிறோம். இந்த மனநிலையிலிருந்து மாறி நல்ல பயன் தரக்கூடிய கனிகளை நமக்கும் பிறருக்கும் கொடுத்திடவே இன்றைய நாளில் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

உண்மையான, உயிரூட்டமுள்ள கிறிஸ்தவர்களாக வாழ்வது என்பது நற் பலனைக் கொடுப்பதாகும். கிறிஸ்தவத்தின் இயல்பே நன்மை செய்வதுதான,நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து  விதைப்பவர் உவமையின்  வழியாக கூறுவதுபோல, மேலோட்டமான மனிதர்களாக இல்லாமல்,மேம்பட்ட மனிதர்களாக நமது உள்ளத்தை  நல்ல நிலமாக    மாற்ற முயற்சி செய்வோம்.அகல உழுவதைவிட ஆழ உழுவதே ஆகச்சிறந்தது. ஆகவே நமது உள்ளங்களை ஆழ உழுது, அதில் இறைவனுடைய  வார்த்தைகளை  விதைத்து, அது வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுக்கும்படியான வாழ்வை வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

தொடக்கத்தில் கடவுள் தான் படைத்தது  அனைத்தையுமே நல்லதெனக் கண்டார். நம்மை படைக்கும்  பொழுதும் நல்லதெனவே கண்டார் . இது எதை சுட்டிக்காட்டுகின்றது என்றால் நன்மை செய்வதே மனித இயல்பாகும். மானுட மகனும் கூட நம்மிடையே மனிதராக உதித்து உண்மையை உரக்கக் கூறி,நன்மைகள் பலபுரிந்து நம்மோடு வாழ்ந்தவர். வாழ்கிறவர்.  பழைய ஏற்பாட்டிலே நல்ல உள்ளத்தோடு நன்மை செய்தவர்கள் அனைவருமே கடவுளால் அங்கீகரிக்கப்பட்டார்கள்.  ஆபேல் ஆடு மேய்ப்பவராகவும், காயீன்  விவசாயம் செய்பவராகவும் வாழ்ந்தனர். தங்களின் உழைப்பின் பலனை இறைவனுக்குக் கொடுக்க முன்வந்தனர். ஆபேல் தன்னிடமிருந்த நல்ல கொழுத்த ஆட்டைக் கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார். ஆனால்  காயின்  நல்ல விளைபொருள்கள் இருந்தபோதிலும்,  தரமற்ற விளைபொருளைக் கொடுத்தார்.

இறுதியில் கடவுள் ஆபேலின் காணிக்கையை மட்டுமே ஏற்றுக்கொண்டார் என்று வாசிக்கிறோம். காயீனின் காணிக்கையைப் புறக்கணித்தார். இந்நிகழ்வு ஒன்றே நாம் நல் உள்ளத்தோடு வாழ நமக்கெல்லாம் ஒரு மிகச்சிறந்த பாடமாக இருக்கின்றது. நம்முடைய அன்றாட வாழ்விலே நன்மை செய்யக்கூடியவர்களாக வாழ்ந்து நம்முடைய நற்சொல்லாலும், செயலாலும்   பலன் கொடுத்து கடவுளுக்கு காணிக்கையாக நம்மையே கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் சிறைப் பணி செய்து கொண்டிருந்த பொழுது இப்பணிக்காக நிதித் திரட்ட ஒவ்வொரு பங்காகச் செல்வது வழக்கம். அவ்வாறு ஒரு பங்கிற்கு நான் சென்ற பொழுது ஒரு வயதான முதியவர் பெரும் தொகையைக் கொடுத்து "சிறைப்பணியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துங்கள்" என்று கூறினார். அப்பொழுது "நான் உங்களுடைய தாராள உள்ளத்திற்கு நன்றி" என்று கூறினேன். அதற்கு அவர் "என்னைப் படைத்த கடவுள்  எனக்கு எண்ணற்ற நன்மைகளை செய்திருக்கின்றார். நான் அவரிடம் பெற்ற நல்லதை இப்பொழுது பிறருக்கு கொடுக்கின்றேன் " என்று கூறினார்.

இத்தகைய மனநிலைதான் இயேசு நம்மிடம் விரும்பக்கூடிய மனநிலை. உண்மையான பலனைக் கொடுக்க வேண்டுமெனில் நம்முடைய உள்ளம் நல்ல நிலமாக இறைவார்த்தை எனும் விதையை விதைக்கப்படும் அளவுக்கு பக்குவப் பட்டதாக இருக்கவேண்டும். அப்பொழுது அது மண்ணில் மடிந்து முளைத்து பயிராக மாறி நாமும் பிறரும் பலன் பெறும் வகையில் நூறு மடங்கு பலன் கொடுக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் இறப்பின் மறைபொருளைப் பற்றி விளக்குகின்றார். கொரிந்தியர் மக்களிடையே "இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? இத்தகைய உடலோடு வருவார்கள்?" என்ற கேள்வியானது இருந்தது.இதற்குப் பதில் கொடுக்கும் விதமாக தான் திருத்தூதர் பவுல் "அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது. முளைத்தப் பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான்  விதைக்கிறாய். இறந்தோர் உயிர்த்தெழும்போதும்  இவ்வாறே இருக்கும்.  அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அறியாததாய் உயிர்பெற்று எழுகிறது" என்று கூறியுள்ளார்.   இது எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் நாம் நல்லவர்களாக விதைக்கப்படும் பொழுது இறப்பிற்குப் பின்பு மாட்சியோடு நல்லவர்களாய் உயிர்பெற்று எழுவோம் என்பதையே உணர்த்துகிறது. தீயவர்களாய்  விதைக்கப் படும்பொழுது நாம் தண்டனை பெறுகின்றோம்.  எனவே திருத்தூதர் பவுல் சுட்டிக்காட்டுவது போல "நாம் மண்ணைச் சார்ந்தவர்களின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின்  சாயலையும் கொண்டிருப்போம்" என்ற வார்த்தைகள் விண்ணைச் சார்ந்தவர்களைப் போல நல்லவர்களாக வாழ நாம்  அழைக்கப்பட்டுள்ளோம்.நல்ல வாழ்க்கையின் மூலமாகத்தான் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர முடியும். எனவே நல்லவர்களாக வாழ்ந்து நமக்கும் பிறருக்கும் இந்த உலக படைப்புகள் அனைத்திற்கும் பலன் கொடுக்க விண்ணைச் சார்ந்தவரின்  மனநிலையோடு நன்மைகளைச் செய்வோம். அந்நன்மைகளின்  வழியாக நூறு மடங்கு பலன் கொடுப்போம். அதற்கு தேவையான அருளையும் ஆசீரையும் வேண்டுவோம்.

இறைவேண்டல்:
நன்மையின் நாயகனே எம் இறைவா! நாங்கள் வாழுகின்ற இந்த உலகத்தில்நன்மை செய்பவர்களாக, நல்லுள்ளம் கொண்டவர்களாக வாழ்ந்து நூறு மடங்கு பலன் கொடுத்து எங்களோடு வாழக்கூடிய அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் வாழ்ந்திட தேவையான அருளைத் தாரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Comments

Excellent

Excellent

Excellent

Add new comment

2 + 0 =