Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மன்னித்து மறக்கும் மாந்தர்களா நாம்!
இன்றைய வாசகங்கள் (13.09.2020)பொதுக்காலத்தின் 24 ஆம் ஞாயிறு-I: சீராக்: 27:30-28:7; II. திபா: 103: 1-2,3-4,9-10,11-12; III.உரோ 14:7-9;IV. மத் 18:21-35
மன்னித்து மறக்கும் மாந்தர்களா நாம்!
அண்ணன் பிரபுவும் தங்கை சாந்தியும் தங்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக வயது முதிர்ந்த தங்களின் பாட்டி தாத்தாவிடம் சென்றனர்.பாட்டி வீட்டில் அழகிய தோட்டம் இருந்ததால் இருவரும் அங்கு சென்று விளையாடுவது வழக்கம். விளையாடும் போது இருவரும் சண்டையிட்டுக்கொள்வார்கள். ஒருமுறை பிரபு கற்களை பொறுக்கிக் கொண்டு குறிபார்த்து வீசி குறிப்பிட்ட இலக்கை அடையுமாறு எறிந்தான். அன்று ஏனோ அவனால் இலக்கை அடைய முடியவில்லை. கோபமடைந்தான். அச்சமயம் பாட்டி உணவருந்த அவர்களை அழைக்கவே விரக்தியோடு சென்றான். அப்போது அவன் கண் முன்னே தன் பாட்டி ஆசையாய் வளர்த்த முயல்குட்டி குறுக்கிடவே தன் கையில் உள்ள கல்லை குறிபார்த்து அதன் மீது எறிய தலையிலே காயமடைந்து அந்த முயல் குட்டி இறந்தது.இதை சற்றும் எதிர்பாராத பிரபு அதிர்ந்து போனான். பாட்டி பார்ப்பதற்குள் அதை எப்படியாவது மறைத்துவிட வேண்டும் என்று எண்ணிய பிரபு இறந்த முயல் குட்டியை ஒரு புதருக்குள் மறைத்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி தன்னிடம் சண்டையிடும் அண்ணனை பழிவாங்க சரியான தருணம் என்று எண்ணினாள். எனவே பாட்டியிடம் சொல்லிக்கொடுத்துவிடுதாக மிரட்டி தனக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் பிரபுவை செய்யச் சொன்னாள். ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடந்ததை பாட்டியிடம் சொன்னான் பிரபு. அதைக்கேட்ட பாட்டி அவனை அன்போடு அணைத்து முத்தமிட்டு "நடந்ததெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். நீயாக எப்போது வந்து கூறுவாய் எனக் காத்திருந்தேன். நான் உன்னை மன்னித்துவிட்டேன் "என்று கூறியதோடு " "நான் உன்னை மன்னித்தது போல உன் தங்கை உன்னை பழிவாங்க நினைத்து உன்னை வேலை வாங்கியதையும் நீ மன்னிக்க வேண்டும்" என்று கூறினார். மன அமைதியுடன் மீதமுள்ள விடுமுறை நாட்களும் மகிழ்வானது.
மன்னிப்பு என்பது அன்பின் மற்றொரு பரிமாணம். இரக்கத்தின் வெளிப்பாடு. மன்னிக்கும் குணம் நம்மில் குடி கொண்டால் மனஅமைதியும் மகிழ்வும் நம்வாழ்வில் நிறைந்திருக்கும். பகைவரின் எண்ணிக்கை குறைந்து நட்பு வட்டாரம் பெரிதாகும். இத்தகைய மன்னிப்பு என்ற அரிய பண்புக்கு சொந்தக்காரர்களாக வாழவே நம்மை இயேசு அழைக்கிறார்.
மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம். சேர்ந்து வாழ்கிறோம். ஆயினும் ஒவ்வொருவருமே தனித்துவம் மிக்கவர்கள். ஒருவருடைய எண்ணங்களும் சொல்லும் செயலும் மற்றவருக்கு முரண்பாடாகவும் ஏற்றுக்கொள்ள இயலாதவையாகவும் ஏன் காயப்படுத்துபவையாகக் கூட அமையலாம். அவற்றை எல்லாம் நாம் கருத்தில் எடுத்துக்கொண்டோமேயானால் பறிபோவது நம்முடைய மன நிம்மதியே. அது நம்மனதில் அவர்பால் நாம் கொண்டுள்ள நல்ல எண்ணங்களை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல் கோபத்தையும் நாளடைவில் பகையையும் உண்டாக்கும். இதைத்தவிர்க்க பல சமயங்களில் நாம் கண்டும் காணாமல் இருக்கக் கூடிய மனநிலை பெற்றவர்களாய் இருக்க வேண்டும்.ஆங்கிலத்தில் இதை "over look"என்று கூறுவர். சீராக் ஞானநூலின் ஆசிரியர் இதைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் "பிறர் குற்றங்களை பொருட்படுத்தாதே" என்று கூறுகிறார்.
இத்தைகைய பண்புதான் மன்னிக்கும் மனநிலைக்கு முதற்படி. இன்றைய நற்செய்தியில் இயேசு நம் அனைவரையும் நமக்கெதராக குற்றம் செய்தவரை பெருந்தன்மையுடன் மன்னிக்க அழைக்கிறார். ஒருவர் நம்மிடம் மன்னிப்பு கேட்கும் போது, நாம் கடவுளிடமிருந்தும் பிறரிடமிருந்தும் பெற்று மகிழ்ந்த மன்னிப்பை நன்றியுடன் உணர்ந்து அதை பகிரக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தை "தான் பெற்ற மன்னிப்பை பகிர மறுத்த பணியாளர் "உவமை மூலமாக தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.
"ஆண்டவரே நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால் யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? " (தி.பா 130:3) என்று திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து நாமும் பல முறை ஜெபிக்கிறோம். நம்முடைய தவறுகளை கணக்கில் வைத்துக்கொள்ளாதபடி கடவுளிடம் மன்றாடும் நாம் பல சமயங்களில் பிறருடைய குற்றங்களை கணக்கில் வைத்துக்கொண்டு வாழ்கிறோம் . நாம் இந்த மனநிலையை முற்றிலுமாக தூக்கி எறிய வேண்டும். அதற்கு இயேசு கொடுத்த சிறந்த வழிதான் "எழுபது தடவை ஏழு முறை " என்ற எண்ணிக்கை. கணக்ககு பார்க்காமல் மன்னிக்க வேண்டும். மன்னிப்பதோடு அக்குற்றத்தை மறந்தும் விட வேண்டும் என்பதே அதன் ஆழமான கருத்து.
இரக்கமும் அருளும் பேரன்பும் பொறுமையும் கொண்டவர் ஆண்டவர் என்பதை இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் தியானிக்கிறோம். அந்த கடவுளின் சாயலாய் படைக்கப்பட்ட நாம் அனைவரும் அவரைப்போல மன்னிக்கும் மக்களாய் வாழ்வோம். மன்னிப்பதே கிறிஸ்தவத்தின் அடையாளம். கிறிஸ்து நமக்கு மன்னிக்க கற்றுத்தந்திருக்கிறார். அதை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். அவரைப் பின்பற்றி நாம் மன்னிப்போம். மறப்போம்.வாழ்ந்தாலும் இறந்தாலும் கிறிஸ்துவுக்கு உரியவர்களாவோம்.
இறைவேண்டல்
இரக்கமும் அருளும் பேரன்பும் பொறுமையும் கொண்ட ஆண்டவரே! நீர் எங்கள் பலவீனங்களைப் பொருட்படுத்துவதில்லை. எங்கள் குற்றங்களை கணக்குப் பார்ப்பதில்லை என அறிவோம். உம்மைப் போல நாங்களும் எமக்கு எதிராய் தவறு செய்பவர்களை மன்னிக்கவும் அக்குற்றங்களை நினைவில் கொள்ளாமல் மறக்கவும் வரம் தாரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment