Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உள்ளதில் நிறைவு காண!
இது எனது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த ஒரு அருமையான பாடம். என்னுடன் படித்துக்கொண்டிருந்த என்னுடைய சக தோழர் ராஜ்குமார் என்பவர் ஒரு அருமையான ஓட்டப்பந்தய வீரர். பள்ளியில் நடைபெறும் எந்தவிதமான ஓட்டப்பந்தய போட்டியிலும் அதுவும் குறிப்பாக 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவரே எல்லா ஆண்டுகளிலும் முதல் பரிசு பெற்று வந்தார்.
ஆனால் ஒரே ஒரு வருடத்தில் மட்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தில் அந்த ஆண்டு நடைபெற்ற 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை அந்த ஆண்டு மற்றொரு வகுப்பைச் சார்ந்த தாமஸ் என்கிற மாணவர் அதே பந்தயத்தில் முதலிடத்தை பெற்றார். இதுவரை 1500 மீட்டர் ஓட்டப் பந்தயம் என்றாலே ராஜ்குமார் தான் என்று இருந்த நிலை மாறி, பள்ளியில் எல்லோருடைய கவனமும் தாமஸின் பக்கம் திரும்பியிருந்தது. எனவே இந்த ஆண்டு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பரிசை யாருக்கும் விட்டு தரப்போவதில்லை, அதற்கும் மேலாக மிகக் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்து சாதனை படைத்து தன்னை விட்டுப்போன பெயரையும் புகழையும் அடைந்துவிட வேண்டும் என்கிற முனைப்போடு பல தயாரிப்புகளை செய்து ராஜ்குமார் தயாராக இருந்தான். அவனுக்கு நிகராக தாமசும் சரியான தயாரிப்போடு களம் இறங்கினான்.
அந்த ஆண்டிற்கான தடகளப் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. அனைவரும் எதிர்பார்த்தது போல் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்திற்கான நேரம் வந்தது. மாணவர்கள், ஆசிரியர்களின் ஆரவாரத்துடன் போட்டி தொடங்கியது நடுவர்களின் விசில் சத்தம் கேட்டவுடன் ராஜ்குமார் தனது முழு சக்தியோடு ஓட ஆரம்பித்தான் ஏறக்குறைய பாதி அளவிற்கு எல்லோரையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்த ராஜ்குமார், “விட்டதை பிடிக்க வேண்டும்” என்கிற தன்னுடைய குறிக்கோளை மனதில் கொண்டு இன்னும் வேகமாக ஓடி சாதனை படைத்து விட வேண்டும் என எண்ணி வேகத்தின் அளவை அதிகரித்தான். ராஜ்குமார் தான் வெற்றி பெறப் போகிறான் என நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இலக்கை அடைவதற்குச் சற்று தொலைவுக்கு முன்பு ராஜ்குமார் “ஐயோ அம்மா” என்று கத்தியவாறு தன் காலைப் பிடித்துக்கொண்டு கீழே சாய்ந்தான். மற்ற வீரர்கள் அவனை தாண்டிச் செல்ல, கீழே விழுந்த அவன் வலியால் துடிப்பதைக் கண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிச் சென்று அவனை தூக்கினார்கள். நடக்கக் கூட முடியாத நிலையில் இருந்த அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனை சோதித்த மருத்துவர், அவன் கொடுத்த அதிகமான அழுத்தத்தால் அவனுடைய மூட்டு சவ்வு கிழிந்து விட்டது எனவும், அவன் இன்னும் 6 மாதங்கள் சிகிச்சை பெறவேண்டியதோடு அதன் பின்பு அவன் 2, 3 வருடங்களுக்கு ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெறவும் முடியாது எனவும் சொன்னார். “விட்டதை பிடித்து விடவேண்டும்” என ராஜ்குமார் காட்டி அதிகப்படியான அழுத்தம் கடைசியில் அவன் மனதிற்கும் உடலுக்கும் பெரிய ஆபத்தாக முடிந்ததைக் கண்டு அவனும் வருந்தினான்.
ஐயோ இந்த நாட்களில், இவ்வளவு இழந்து விட்டோமே, நிறைய தவற விட்டுவிட்டோமே என “விட்டதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும்” என தேவையில்லாமல் துரத்தி ஓடி மனதையும் உடலையும் அழுத்தத்திற்கு உள்ளாக்க கூடாது, தேவையை நிறைவு செய்ய உள்ளதைக் கொண்டு உண்மை மகிழ்ச்சியோடு வாழ்ந்தாலே போதும் என்பதை மட்டும் தெளிவாய் கற்றுக்கொண்டேன் நான். இந்த படிப்பினை, இந்த காலகட்டத்தில், பலருக்கும் உதவும் என நம்புகிறேன்
அருட்தந்தை பால் தினகரன் sdc
Add new comment