Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பொறுமை | Dr. ஃபஜிலா ஆசாத்
இதற்கு மேல் ஒரு போதும் பொறுக்க முடியாது. நான் எவ்வளவு தான் பொறுத்து போவது. என்னை யார் என்று நினைத்துக் கொண்டாய் என்று ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அனேகமாய் அனைவருமே பொறுமை இழந்து சொல்லி இருப்பீர்கள்.
இந்த அவசர உலகத்தில் ரெடிமேடாக எல்லாமே உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்றே மனம் விரும்புகிறது. 3g, 4g அடுத்து 5g என வந்து இன்று எல்லாமே மின்னல் வேகத்தில் கிடைத்து விடுகிறது. முன்பெல்லாம் லைப்ரேரிக்குப் போய் புத்தகத்தை புரட்டி புரட்டிப் பார்த்து தெரிந்து கொண்ட விசயங்கள் எல்லாம் இன்று ஒரு டச் ஸ்க்ரீனில் விரல் அசைவில் மளமளவென்று வந்து விழுந்து விடுகின்றன.
செய்திகள் வரும் வேகத்திலேயே செயல்களும் நடைபெற வேண்டும் என்று நினைக்கும் போதுதான் வினையாகிறது.
பொறுமை என்றாலே பிறர் தரும் வலியை, சங்கடங்களை, நியாயமற்ற செயல்களை பொறுத்துக் கொள்வதே என்றே பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், பொறுமைக்கு அர்த்தம் பிரித்தால் அவசர கதியில் இயங்காதீர்கள். நிதானமாக செயல் படுங்கள், வேகம் வேண்டாம் என்பதை எத்தனை பேரால் உணர முடிகிறது.
பொறுமை என்பது பிறருடனான செயல்களில் மட்டுமல்லாமல் உங்கள் அன்றாட செயல்களிலும் அமல் படுத்துவதில்தான் உற்சாகமும் உண்மையான மகிழ்ச்சியும் இருக்கிறது.
வாழ்க்கையின் வெற்றிக்கு பொறுமை வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் எல்லோராலும் அப்படி பொறுமையாக இருக்க முடிவதில்லை. அதற்கு முக்கியமான காரணம், ‘தங்கள் பொறுமையை பிறர் பலவீனம் என்று நினைத்து விடுவார்களோ’ என அவர்களுக்குள் எழும் எண்ணம்தான் என்கிறது மனஇயல். உண்மையில் பொறுமை என்பது ஒரு பலம். அதனை உறுதியாக நம்புபவர்கள் மட்டுமே அதை சரியாக பயன் படுத்துவார்கள். அப்படி பக்குவப் பட்டவர்களுக்கு எந்த ஒரு விசயத்திலும் பொறுத்துப் போவது அவர்களுடைய தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கூட்டும். எந்த சூழலிலும் விடாமுயற்சியோடு வெற்றி பெற உதவும்.
பொதுவாக, யாரும் பொறுமையற்றவர்கள் இல்லை. ஒரு குழந்தை பெறுவதற்கு பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனத் தெரியும்போது யாரும் அதற்காக புலம்பிக் கொண்டிருப்பதில்லை. அதற்கான காலம் வரும் வரை நிச்சயமாக காத்திருக்கிறார்கள். அத்தனை காலமும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று ஒன்றுக்கு பத்து முறை யோசித்து மிகுந்த கவனத்துடனே ஒவ்வொரு செயலையும் செய்கிறார்கள்.
உங்களுக்கு தெரியும் ஒன்றைப் பற்றி தெளிவான பார்வை இருக்கும்போது அதன் நன்மை தீமைகள் புரியும்போது, அதன் கால வரையரையை சரியாக திட்டமிடும் போது மனம் அதற்காகத் தன்னை தயார் செய்து கொள்ளும். எந்த சூழலிலும் பொறுமையற்று தவிக்காமல் பொறுமையோடு விடா முயற்சியோடு வெற்றியைத் தட்டி செல்ல முனையும்.
சீன மூங்கில் பயிரிடுதல் பற்றி அறிவீர்களா? ஒரு விவசாயி சீன மூங்கில் விதைகளை விதைத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார். ஒரு வருடம் போகிறது, எந்த வளர்ச்சியும் இல்லை. இரண்டாவது வருடம் போகிறது, இப்போதும் பூமிக்கு மேல் எதுவும் மாற்றம் தெரியவில்லை. இப்படியே 3வது 4வது வருடங்களும் போகின்றன. அவரது நண்பர்கள் அவரை சந்தேகமாக பார்க்கத் துவங்குகின்றனர். அவரது பொறுமை, முயற்சி, அக்கரை அனைத்துமே கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகிறது. 5வது வருடம் தொடங்குகிறது. நிலத்தின் மேற்பரப்பில் சின்னஞ் சிறிதாக எட்டிப் பார்க்கும் மூங்கில் செடி ஆறே வாரத்தில் அசுர வளர்ச்சி கொண்டு வானளாவ எழுந்து நிற்கிறது. அதுவும் எப்பேர்ப்பட்ட வளர்ச்சி. ஒவ்வொரு மரமும் 80 அடி உயரம் வளர்ந்து கேள்வி கேட்டவர்களின் வாயை அடைக்கின்றன. ஆறு வாரத்தில் அசுர வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் 4 ஆண்டுகள் அந்த விதைகள் பூமிக்குள் தங்கள் வேர்களை நிலைப் படுத்தி இருக்க வேண்டுமென்பது அப்போது தான் மற்றவர்களுக்குப் புரிகிறது.
பல நேரங்களில் இப்படித்தான், எந்த ஒரு பலனும் தராமல் உங்களுடைய உழைப்பு எல்லாம் வீணாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றும். ஆனால் நிச்சயம் சீன மூங்கில் போல் மாற்றம் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டு தானிருக்கும். தொடர்ந்து பொறுமையோடும் விடாமுயற்சியோடும் செய்யும் போது அதன் பலன் மகிழ்ச்சி தரும்.
மூங்கில் விதை போட்ட அந்த விவசாயியால் எப்படி வருடக் கணக்கில் பொறுமையாக காத்திருக்க முடிந்தது என்றால் 5 வருடங்கள் காத்திருந்தாலும் பலன் அதை விட அதிகம் கிடைக்கும் என்ற தகவல் அவருக்கு தெரிந்திருந்தது.
அதுபோல்தான், நீங்கள் விரும்பும் மாற்றங்கள் தரும் பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால், Active patience என்று சொல்லப்படும் அதற்கான ground work ஐ ஆரம்பித்து விட்டு, தேவையான கால கட்டம் வரை பொறுமையாக இருக்கும் போது அந்த பொறுமை அதன் வெற்றிக்கான மூலதனமாக அமைகிறது.
தவிர, தனக்கு என்ன வேண்டும் என தன்னுடைய இலக்கு அறிந்த ஒருவரால் பொறுமையோடும் விடாமுயற்சியோடும் எதையும் சாதிக்க முடியும்.
ஷான்டீகோவை சேர்ந்த அந்த இளம் பெண் ‘ஃப்லோரென்ஸ் சாத்விக்’கிற்கு நீச்சல் என்றாலே அத்தனை மகிழ்ச்சி. கைகளும் கால்களும் அனாயசமாக தண்ணிரை விலக்கி செல்ல எந்த தூரத்தையும் சில மணிகளில் கடந்து வெற்றிக் கோட்டை எட்டி விடும் அசாதரணாமான திறமை வாய்ந்த பெண் அவர்.
ஆறு வயதில் நீந்தத் தொடங்கி பல சாதனைகளை அதில் புரிந்த அவள் அன்றும் தன் 34வது வயதில் சாதாரணமாகத் தான் அந்த நீச்சல் சவாலை எதிர் கொண்டாள். கலிஃபோர்னியாவின் நீர்ப்பரப்பில் 21மைல் நீந்திக் கடக்கப் போகும் முதல் பெண்மணியாக நீந்தத் தொடங்கினாள். ஏதோ மின்சார படகு நீரைக் கடந்து போவது போல் அவள் சரசரவென் நீந்தி பல மைல்களைக் கடந்து கொண்டிருக்க இதோ வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டோம் என அவள் மனம் சொல்ல உடல் இளைப்பாறத் துடிக்க, கடுமையான பனிமூட்டத்தால் அவளால் அவள் சேர வேண்டிய கரைப் பரப்பை பார்க்க முடியவில்லை. இன்னும் தான் எவ்வளவு தூரம் கடக்க வேண்டி இருக்கும் எனத் தெரியாததால் அவள் மனமும் உடலும் சோர்ந்து பொறுமை இழந்து விட அவள் தனக்கு சப்போர்ட்டாக தன்னைத் தொடந்து வரும் படகிடம் தன்னால் இனியும் நீந்திக் கடக்க முடியாது என வெற்றிக் கோட்டை எட்ட முடியாதவளாய் சரனடைகிறாள். படகில் ஏறினால் அடுத்த நொடியில் கரை வந்து நிற்கிறது. அப்போது தான் அவளுக்கு புரிகிறது, அவள் கடக்க வேண்டி இருந்த தூரம் சில மீட்டர்கள் தான் மிச்சம் இருந்துள்ளது என்பது. உண்மையில் தான் எங்கிருக்கிருக்கிறோம் தான் இன்னும் எத்தனை தூரம் போராட வேண்டி இருக்கும் எனும் வரையறை தெரியாததாலே ஒவ்வொருவரையும் பொறுமையை இழந்து மனம் தன் முயற்சிகளைக் கைவிட செய்கிறது.
அதே பெண் இரண்டே மாதத்தில், மீண்டும் அதே சவாலை எதிர்கொள்கிறார். இந்த முறையும் அந்த பெண்ணிற்கு கிளைமெட் சதி செய்வது போல் அடர்ந்த பனி மூட்டத்தோடே இருக்கிறது. எங்கே கரை இருக்கிறது என்று இப்போதும் கண்ணால் பார்க்க முடியவில்லை. ஒரு முறை பெற்ற தோல்வி தந்த பாடமும் நிச்சயம் கரை மிக அருகில் தானிருக்க வேண்டுமென்ற நேர்மறை சிந்தனையும் அவளை இந்த முறை வெற்றிக் கரையைத் தொட்டு அந்த நீர்ப்பரப்பை மிக குறைந்த மணித் துளிகளில் நீந்திக் கடந்த முதல் பெண்மணியாக வரலாற்று சாதனை புரிய வைக்கிறது.
சூழல்கள் எவ்வளவு மேகமூட்டமாக தெளிவில்லாமல் இருந்தாலும் உங்கள் இலக்கில் நீங்கள் தெளிவாக இருந்தால், இதோ வெற்றிக் கோட்டை அடைந்து விடுவேன் எனும் நேர்மறை எண்ணத்தோடு இருந்தால் பொறுமையும் விடாமுயற்சியுடன் வெற்றியை நிச்சயம் உங்களால் அடைய முடியும்.
Dr. ஃபஜிலா ஆசாத்
Watch "Dr. Fajila Azad" on YouTube
Add new comment