Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
துன்பத்தில் மாட்சியா!
பொதுக்காலத்தின் 22 ஆம் ஞாயிறு - I. எரே. 20:7-9; II. திபா. 63:1,2-3,4-5,7-8; III. உரோ. 1:1-2; ; IV. மத். 16:21-27
மனித வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் நிறைந்தது. ஒரு நாணயத்தில் எவ்வாறு இருபக்கம் இருக்கின்றதோ அதே போல தான் நம் வாழ்வில் இன்பமும் துன்பமும். பல நேரங்களில் இன்பம் வரும் பொழுது அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் துன்பம் வரும் பொழுது நாம் துவண்டு விடுகிறோம். சிறிய தோல்வி என்றாலும் தாங்கமுடியாத சூழல் இருக்கின்றது. இவ்வுலகில் பல்வேறு தற்கொலைகளும் பிரச்சனைகளும் வருவதற்கு காரணம் துன்பங்களை ஏற்கும் மனநிலையை நாம் வளர்க்காததேயாகும்.
துன்பங்கள் வழியாகத் தான் உண்மையான மாட்சி இருக்கின்றது என்பதை இன்றைய நற்செய்தி மூலமாக நம் ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்ட விரும்புகிறார். இயேசு இன்றைய நற்செய்தியில் "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தன் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்து விடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக் கொள்கின்ற எவரும் வாழ்வடைவார்" எனக் கூறியுள்ளார். கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது பல துன்பங்களை தாண்டிய பயணமாகும் . இன்றைய நாள் வழிபாட்டின் மூலம் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் துணிவு உள்ளவர்களாக வாழ்ந்து இயேசுவின் இறையாட்சி மதிப்பீட்டிற்கு சான்று பகர நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
சிவகங்கை மறைமாவட்டத்தின் பாதுகாவலராக இருக்கக்கூடிய புனித அருளானந்தர் சாட்சிய வாழ்வுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் கிறிஸ்துவின் மனநிலையில் உண்மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் சான்று பகரும் விதமாக தனது நற்செய்திப் பணியை செய்தார். கிறிஸ்துவ அறநெறி மதிப்பீடுகளை கற்பித்தார். மனித நேயத்தையும் மனித மாண்பையும் சுட்டிக்காட்டினார். எல்லோரும் இயேசு என்ற நற்செய்தியை அறிந்து அவரின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர அவர் தன்னையே அர்ப்பணித்தார்.
மறவர் நாட்டின் படைத்தளபதி தடிய தேவர் என்பவர் நோயினால் அவதிப்பட்டு வந்தார். பல முயற்சிகள் எடுத்தும் அவரால் குணம் பெற முடியவில்லை. இறுதியில் புனித அருளானந்தரின் கடவுளாகிய இயேசுவை அறிந்து அவர் குணப்படுத்துவார் என நம்பினார். இறுதியாக இயேசு புனித அருளானந்தர் வழியாக குணப்படுத்தினார். எனவே தடியத்தேவர் என்ற படைத் தளபதி இயேசுவைப் பின்பற்ற திருமுழுக்குப் பெற விரும்பினார். ஆனால் அவர் திருமுழுக்குப் பெற ஒரு தடை இருந்தது. இவர் ஐந்து மனைவிகளை கொண்டிருந்தார். எனவே திருமுழுக்கு பெற அருளானந்தரிடம் இவர் வந்த போது ஐந்து மனைவியரை கொண்டிருப்பது கிறிஸ்தவ முறையல்ல எனச் சுட்டிக்காட்டினார். இறுதியாக படைத்தளபதி மூத்த மனைவியை மட்டும் அழைத்துக்கொண்டு மற்ற மனைவியரை விட்டுவிட்டார். அதன்பிறகு திருமுழுக்கு என்னும் அருள் சாதனத்தை பெற்றார். இறுதியாக இந்த செயலுக்காக புனித அருளானந்தர் துன்புறுத்தப்பட்டார்.ஐந்தாவது மனைவி அப்பகுதியை ஆண்ட அரசரின் உறவினர். எனவே அரசர் தனது உறவினரின் வாழ்க்கையைப் பாழாக்கியதாகக் குற்றம்சாட்டி மரண தண்டனையை விதித்தார். மேலும் கிறிஸ்துவ மறையைப் பற்றி போதிக்க கூடாது என்றும் ஆணையிட்டார். ஆனால் புனித அருளானந்தர் மனத் துணிவோடு துன்பங்களை ஏற்றுக் கொண்டு இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்காக தனது உயிரையே இரத்தம் சிந்திக் கையளித்தார் .புனித அருளானந்தர் உலகப் பார்வையில் துன்பங்களை அனுபவிப்பது போல தெரிந்தாலும் அவர் உண்மையிலேயே இறை மாட்சியில் பங்கெடுத்தார்.
துன்பத்தின் வழியில்தான் இறை மாட்சியை காணமுடியும் என்பதை நம் முன்னோடியும் மீட்பருமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்வின் வழியாகவும் போதனைகளின் வழியாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். யூத சமூகத்தில் மிகவும் கேவலமான சின்னமாகக் கருதப்பட்ட சிலுவைச் சாவை மனுக்குலம் மீட்படைய அன்போடு ஏற்றுக் கொண்டு துன்பத்தை அனுபவித்தார். சிலுவையில் அறையப்படக் கொளுத்தும் வெயிலில் கல்வாரி மலையை நோக்கி சிலுவையை சுமந்து சென்றார். தன்னை துன்புறுத்தி சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னிக்கும்படி இறைத்தந்தையிடம் வேண்டினார்.
தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய இறப்பைப் பற்றி மூன்றுமுறை முன்னறிவித்தார். தன்னுடைய பாடுகளுக்கு முன்பாக கெஸ்தமணி தோட்டத்தில் தன்னுடைய பாடுகளை நினைத்து இரத்த வியர்வை சிந்தினார். கசையால் நம் பாவங்களுக்காக அடிபட்டார். இவையெல்லாம் எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் துன்பத்தின் வழியாகத்தான் இறைமாட்சி இருக்கின்றது என்ற கருத்தை சுட்டிக்காட்டுகின்றது. இயேசுவும் சிலுவை என்ற துன்பத்தின் வழியாகத்தான் மாட்சியுள்ள மீட்பை நமக்கு கொடுத்துள்ளார்.
இன்றைய முதல் வாசகத்தில் துன்புறும் இறைவாக்கினர் என்றழைக்கப்பட்ட எரேமியாவைப் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறைவாக்கினர் எரேமியா தனது இறைவாக்கு பணியில் பல துன்பங்களை அனுபவித்தார். இறைவனின் அழைப்பை உணர்ந்தவராக இருந்தாலும் துன்பங்களைக் கண்டு புலம்ப ஆரம்பிக்கிறார். கடவுளே தன்னை ஏமாற்றி அழைத்ததாக புலம்புகிறார். அந்தளவுக்கு துன்பங்களை அனுபவித்தார். இருந்தபோதிலும் கடவுள் தொடர்ந்து அவரை திடப்படுத்தி நல்ல ஒரு இறைவாகினராக வழிநடத்தினார் . துன்பங்களைக் கண்டு புலம்பினாலும் இறுதியில் இறைவனின் வார்த்தையை வல்லமையோடு இறைவாக்கினர் எரேமியா பறைசாற்றினார். துன்பங்களின் வழியாகத்தான் இறைமாட்சி இருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எது நல்லது, எது உகந்தது மற்றும் எது நிறைவானது என்பதை அறிய நாம் தூய உள்ளத்தோடு கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ அழைப்பு விடுக்கிறார்.மேலும் இந்த உலகப் போக்கின் படி ஒழுகாமல் இருக்க அழைப்பு விடுக்கிறார். நாம் நம்முடைய அன்றாட வாழ்விலே இவ்வுலகப் போக்கின் படி வாழும் பொழுது நமக்கு இன்பமாக தெரியும். ஆனால் அது குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரிய துன்பமாக மாறும். எனவே நாம் வாழும் இந்த உலகத்திலே இறைவனுக்கு உகந்த தூய வாழ்வு வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தூய்மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் சான்று பகரும் பொழுது நம் வாழ்விலே பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும். ஆனால் நற்செய்தியின் பொருட்டு துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் பொழுது இறைமாட்சியை மண்ணுலகிலும் விண்ணுலகிலும் அனுபவிக்க முடியும். ஏனெனில் இந்த உலகம் வாழ்வு நிரந்தரமற்றது. இது விண்ணகத்தை நோக்கிய ஒரு பயணம். இந்தப் பயணம் பிறருக்கு பலன் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு பலன் கொடுக்கும் பொழுது இந்த உடலை பிறர் அழித்தாலும் நம் ஆன்மாவை அழிக்க முடியாது. ஆன்மாதான் விண்ணகத்தை நோக்கி கடவுளிடம் செல்லும். நாம் தூய்மையோடு இருக்க நாம் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எடுத்துரைக்கிறார்.
சிறைப் பணியின் பாதுகாவலரான புனித மாக்ஸிமிலியன் கோல்பே துன்பத்தில் இறைமாட்சி காணக்கூடிய புனிதர் ஆவார். இந்த புனிதர் ஒரு குருவானவர் ஆவார். நற்செய்திப் பணி செய்ததால் இவரை ஒரு நாட்டு அரசன் சிறையில் அடைத்தான். அப்போது தன்னோடு சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சிறைவாசி அழுது கொண்டிருந்தார். அவரிடம் "ஏன் அழுகிறீர்" என்று கேட்டார். அதற்கு அவர் "எனக்கு மரணத் தண்டனை கொடுத்துவிட்டார்கள். எனக்கு மனைவியரும் பிள்ளைகளும் இருக்கின்றனர்.அவர்களை நினைத்து நான் அழுது கொண்டிருக்கிறேன் "என்று கூறினார். இதைக்கேட்ட புனிதர் அரசரிடம் முறையிட்டு அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை தனக்கு கொடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டுகோள் விடுத்தார். அரசரும் அந்த நபரை விடுதலை செய்துவிட்டு இந்த புனிதருக்கு மரண தண்டனை விதித்தார். இறுதியில் தியாக உள்ளத்தோடு புனிதரும் பிறர் வாழ தன் உயிரை கையளித்தார்.
துன்பத்தின் வழியாகத் தான் இறைவனின் மாட்சியை முழுமையாக அனுபவிக்க முடியும். எனவேதான் இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்று கூறியுள்ளார். மேலும் இவ்வுலக வாழ்வு நிலையற்றது. எனவே உலகம் சார்ந்த பணம் பட்டம் பொருள் போன்றவற்றிற்கு ஆசைப்படாமல் ஆன்மாவை காத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு புனித வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார் இறைமகன் இயேசு. " மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்" என்று இயேசு கூறிய இறை வசனம் இவ்வுலகம் சார்ந்த இன்பங்களுக்கு ஆசைப்படாமல் இறையாட்சியின் மதிப்பீடுகளான உண்மை, நீதி, நேர்மை ,சமத்துவம், இறையன்பு மற்றும் பிறரன்பு போன்றவற்றை நம் வாழ்வாக்கி துன்பத்தின் வழி இறைமாட்சி காண அழைப்பு விடுக்கின்றார். புனித பிரான்சிஸ் சவேரியார் நம் இந்திய நாட்டின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார்.
அந்தளவுக்கு நற்செய்திப் பணியை சிறப்பாக ஆற்றினார். இவர் அழைப்பு பெறுவதற்கு முன்பாக இவ்வளவு சார்ந்த பட்டம் பதவி பொருளுக்கு ஆசைப்பட்டார். ஆனால் புனித இஞ்ஞாசியார் "ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" என்ற கேள்வியை கேட்டவுடன் ஆழ்ந்து சிந்தித்தார். இறுதியில் உலகம் சார்ந்ததுக் குப்பை எனக்கருதி நிலையான ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அனைத்தையும் துறந்து விட்டு இறைவனின் மாட்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இதனால் பல துன்பங்களை அவர் பட்டார். சவாலான பயணம் செய்து இந்திய நாட்டிற்கு வந்து பணி செய்தார். இறுதியில் துன்பத்தின் வழியாக இறை மாட்சியில் பங்கெடுத்தார். அவரின் தூய்மையான வாழ்வின் பொருட்டும் அர்ப்பணமுள்ள இறை பணியின் பொருட்டும் கடவுள் இன்றளவும் அவருடைய உடலை அழியாமல் காக்க வைத்திருக்கிறார். இதுதான் இறைமாட்சியின் வெளிப்பாடு.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் பெரும்பாலும் துன்பத்தை வேண்டாம் என்று நினைக்கிறோம். நாம் இறைவேண்டல் செய்கின்ற பொழுது துன்பம் வேண்டாம் என்று கேட்கக்கூடாது. இது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது. துன்பம் வரும் பொழுது நம்மையே கடவுள் ஒப்படைக்கும் பொழுது இஸ்ரயேல் மக்கள் எகிப்திலே அடிமைப்பட்டு துன்பப்பட்டு கொண்டிருந்த பொழுது அவர்களை மீட்டது போல நம்மையும் துன்பத்திலிருந்து கடவுள் மீட்பார். அப்பொழுது இறைமாட்சியை முழுவதுமாக அனுபவிக்க முடியும். மேலும் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை புனித அல்போன்சாவை போலகேட்க முயற்சி செய்யவேண்டும். அப்பொழுது இறைவன் தாமே துன்பத்தின் வழியாக இறைமாட்சி காண நம்மை வழிநடத்துவார். துன்பமாகிய புனிதவெள்ளி இல்லை என்றால் இன்பமாகிய உயிர்ப்பு ஞாயிறு கிடையாது.
எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு துன்பங்களையும் மகிழ்வோடு ஏற்று எதிர்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். இதுதான் இயேசுவின் மனநிலை. துன்பங்கள் எவ்வளவு பட்டாலும் இம்மண்ணுலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் மீட்புப் பெற போகின்றார்கள் என்ற மகிழ்ச்சியோடு கொடூரமான துன்பத்தை ஏற்றுக் கொண்டார். இறுதியில் உயிர்ப்பின் வழியாக இறைமாட்சியை உலக மக்கள் எல்லோருக்கும் கொடுத்து மீட்புப் பெற வழிகாட்டினார். மறைச்சாட்சியாக இரத்தம் சிந்திய நமது திருஅவையின் புனிதர்கள் அனைவருமே துன்பத்தை இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்காக ஏற்றுக்கொண்டவர்கள். இறுதியில் துன்பத்தின் வழியாக இறைமாட்சியை அனுபவித்தார்கள். துன்பத்தின் வழியாக இறைமாட்சியை அனுபவிக்கும் மனநிலையை கேட்டு இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்விலே ஏராளமான துன்பங்களை அனுபவிக்கிறோம். ஆனால் அந்தத் துன்பங்களை ஒரு சுமையாக நாங்கள் பார்க்கிறோம். இந்தத் துன்பங்கள் அனைத்தும் இறைமாட்சியை காண வழிகாட்டுகிறது என்பதை மறந்து துன்பப்பட்டு வருகிறோம். எனவே துன்பங்கள் வழியாக சான்று பகர்ந்து இறைமாட்சிக்கு சான்று பகர தேவையான அருளைத் தரும். ஆமென்.
திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment