அன்பே உயிரின் ஊற்று! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (21.08.2020)பொதுக்காலத்தின் 20 ஆம் வெள்ளி- I:எசே: 37: 1-14;II: தி.பா: 107: 2-3, 4-5, 6-7, 8-9;III: 22: 34-40

அன்பே உயிரின் ஊற்று! 

ஒருமுறை ஒரு ஓட்டப்போட்டி நடைபெற்றது. அது மூளை வளர்ச்சி குன்றியோர்க்கான ஓட்டப்போட்டி. போட்டி தொடங்கியது.  போட்டியாளர்கள் ஓடத்தொடங்கினர்.பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி போட்டியாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தீடீரென ஒருபோட்டியாளர் கால் தடுக்கிக்கீழே விழுந்தார். அதைக்கண்ட மற்றொரு போட்டியாளர்  ஓடுவதை விட்டுவிட்டு கீழே விழுந்தவரை தூக்கிவிட்டார். இதைக்கண்ட மற்றெல்லா போட்டியாளர்களும் ஓடுவதை நிறுத்திவிட்டு விழுந்தவரின் அருகே சென்று அவரை உற்சாகப்படுத்தினர்.
பின்பு அனைவரும் கைகோர்த்தவர்களாய் ஓடி எல்லையை ஒன்றாய் கடந்தனர். பார்வையாளர்கள் அனைவரும் கண்ணீரோடு கரங்கள் தட்டி அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். இத்தகைய அன்பும் அக்கறையும் நம்மிடம் இல்லையே என்ற உறுத்தல் எல்லாருடைய மனதிலும் குடியேறியது!

இந்நிகழ்வு நம்மில் பலருக்கு மிகவும் பரீட்சையமான நிகழ்வாக இருக்கலாம்.அது கூறுகின்ற உண்மையை நாம் பல முறை சிந்தித்திருக்கலாம்.  ஆனால் வாழ்வாக்கியிருக்கின்றோமா?சிந்திப்போம்

இன்றைய வழிபாடு நம்மை அன்புள்ளவர்ளாக வாழ அழைக்கிறது. யாரையெல்லாம் நாம் அன்பு செய்ய வேண்டும்?
முதலில் ஒருவர் தன்னைத்தானே நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எவனொருவன் தன்னை அன்பு செய்கிறானோ, அவன் தன்னை மதிப்பான். தன் தேவைகளை நிறைவேற்றுவான்.தன்னை அறிவான். தன்னைத்தானே முழுமையாக ஏற்றுக்கொள்வான். தன்னைத்திருத்திக் கொள்வான். இது சுயஅன்பு. ஆனால் சுயநலமில்லா அன்பு. இத்தகைய அன்புதான் ஒருவரை பிறரன்புக்கு இட்டுச் செல்கிறது. பிறரை மதிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் அன்பு செய்யவும் தூண்டுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கவும் தூண்டுகிறது. இறுதியில் இறையன்பாகிறது. அன்பு நிறைவு பெறுகிறது. இதுதான் நாம் கடைபிடிக்க வேண்டிய முதன்மையான கட்டளை. 
இறையன்பையும் பிறரன்பையும் நம்மால் பிரிக்க இயலாது. அதனால் தான் இயேசு இறைவனை அன்பு செய்தற்கு இணையான கட்டளையாக பிறரன்புக்கட்டளையை கூறுகின்றார். இவை இரண்டிற்கும் அடிப்படை சுய அன்பு என்பதையே "தன்னைத்தான் நேசிப்பது போல அடுத்திருப்பவரையும் நேசிக்க வேண்டும்" என்ற வார்த்தை வழி நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் இறைவாக்குறைக்க உலர்ந்த எலும்புகள் உயிர்பெறுவதை நாம் பார்க்கிறோம். இறைவனிடமும் பிறரிடமும் அன்பின்றி உலர்ந்த எலும்புகளாய் உயிரற்று இருந்த இஸ்ரயேல் மக்களை தன் வார்த்தையால் உயிர்ப்பிக்கிறார் இறைவன். இறைவார்த்தை நமக்கு எடுத்துரைப்பதெல்லாம் அன்பே. அன்பில்லையேல் நாம் எல்லாரும் நடைபிணங்களே.
இறைவார்த்தையை அன்றாடம் வாசித்து தியானிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் அவ்வார்த்தையை செயலாக்காத நேரங்களிலெல்லாம் செத்தவர்களாகவே இருக்கின்றோம்.

அன்பே இறைவன்.  அன்புடையவர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்றுதிருத்தூதர் யோவான் தன் திருமடலில் கூறுகிறார். எனவே அன்பே உயிரளிக்கும் ஊற்று என்பதை உணர்ந்தவர்களாய் இறைவார்த்தை கூறும் அன்பை நம் வாழ்வாக்குவோம்.புதுப்பிறப்பு அடைவோம். பிறருக்கும் வாழ்வளிப்போம்.

இறைவேண்டல்

அன்பினால் எமக்கு உயிரளிக்கும் இறையவனே! 
பல சமயங்களில் உமது வார்த்தை எடுத்துக்கூறும் அன்பின் அழைப்பை உணராமல் உயிரற்றவர்களாகவே வாழ்ந்து மடிகின்றோம். எம்மை மன்னியும். உமது வார்த்தையால் எங்களுக்கு உயிர்தாரும்.சுயஅன்பு பிறரன்பு இறையன்பு இவற்றின் உண்மைப்பொருளை உணர்ந்து அன்புடையவர்களாய் வாழ்ந்து மற்றவரையும் வாழ்விக்க உமதன்பின் ஆவியாரை எமக்குள் ஊற்றும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 12 =