Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வாழ்க இந்தியா! வளர்க பாரதம்!! | ஆ. முகமது முகைதீன், துபாய்
இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மேலும் அன்றைய நாளில் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூறும் வகையில் மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்,முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவார்கள்.
நமது தாய்நாடான இந்தியா சுதந்திரமடைந்து, சுமார் 73ஆண்டு கடந்து, நாம் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்களுமே! இருநூறு ஆண்டுகளாக, நமது நாட்டிலேயே நாம் அந்நிய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம்.
மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார்.“அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர்.
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, மறைந்த தேசத் தலைவர்களை போற்றி வணங்குவோம். சாதி, மதம், இனம் கடந்து இந்தியர் அனைவரும் கொண்டாடும் விழாவாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் சுதந்திரத்தை போற்றுவோம். நம் நாட்டிற்கு புகழ் சேர்த்திடும் பாரம்பரியம், பண்பாட்டை காத்து போற்றுவோம். தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!
முனைவர் கல்லிடைக்குறிச்சி, ஆ.முகமது முகைதீன், துபாய்
Add new comment