கடுகளவு நம்பிக்கையா! | திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு


இன்றைய வாசகங்கள் (08.08.2020) - பொதுக்காலத்தின் 18 ஆம் சனி  - I. அப: 1: 12 - 2: 4; II.திபா 9: 7-8. 9-10. 11-12; III. மத்:  17: 14-20;

"கடுகளவு நம்பிக்கையா! "

அறிவியல் கண்டுபிடிப்புகளில் எண்ணற்ற கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின்  தாயார்  நம்பிக்கை வாழ்வுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் ஆவார். எடிசன்  பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது இவருக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் "இவனுக்கு கல்வியே வராது என்று முட்டாள்" என்ற பட்டத்தைச் சூட்டினர். ஆனால்  இறைநம்பிக்கை மிகுந்த இவரின் தாயார் கடவுள் மீதும்  தன்மீதும் நம்பிக்கை கொண்டார்கள் . தன் மகனைப் பெரிய ஒரு அறிவியல் அறிஞராக மாற்றமுடியும் என்ற தன்னம்பிக்கையில் இறைவனின் துணை கொண்டு முயற்சி செய்தார். இறுதியில் தன் மகன் மிகச்சிறந்த அறிவியல் விஞ்ஞானியாக மாறினார்.  நம்முடைய அன்றாட வாழ்விலும் இறைநம்பிக்கை மிகுந்தவர்களாகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் வாழும் பொழுது நிச்சயம் நம் வாழ்விலேயே வெற்றியை காண முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை இறைநம்பிக்கை மிகுந்தவர்களாகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் வாழ அழைப்பு விடுக்கின்றது. இன்றைய நற்செய்தியில் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவரைச் சீடர்களின் நம்பிக்கை குறைவால்  குணப்படுத்த முடியவில்லை. இயேசு சீடர்களுக்கு பேய்களை ஒட்டவும், நோய்களை குணமாக்கவும் வல்ல செயல்கள் இறைவனின் பெயரால் அதிகாரம் அளித்திருந்தும், அவர்கள் இறைநம்பிக்கையில் குறைவாக இருந்தார்கள்.  இயேசுவின் வல்ல செயல்களை கண்ணால் கண்டும், இயேசுவின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். மேலும் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால் வல்ல செயல்களை செய்யும் பொழுது இறைநம்பிக்கை மிகுந்தவராகவும் தன்னம்பிக்கை மிகுந்தவராகவும் இருந்தார். இப்படிப்பட்ட மனநிலையில் சீடர்கள் இல்லை என்பதை அவர்களின் நம்பிக்கையற்றத் தன்மை சுட்டிக்காட்டுகிறது. இயேசு அவர்களை நம்பிக்கை நிறைந்த வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார். எனவே தான்  "இயேசு சீடர்களை நோக்கி, 'உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து,

'இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ' எனக் கூறினால் அது பெயர்ந்து போகும்' என்றார்'' (மத்தேயு 17:20).   இயேசுவின் இந்த வார்த்தைகள்  நம்மை நம்பிக்கை உள்ள மக்களாக வாழ அழைப்பு விடுக்கின்றது.

 நம்பிக்கை இருந்தால் மட்டுமே நம் வாழ்வில் அற்புதங்களையும் அதிசயங்களையும் காண முடியும் என்ற ஆழமான சிந்தனை இன்றைய நற்செய்தியானது சுட்டிக்காட்டுகின்றது. மேலும் இயேசு நம்பிக்கை வாழ்வை ஆழமாக கொண்டிருக்க வேண்டும் என்ற சிந்தனையையும் வலியுறுத்துகின்றார்.   கடவுளின் வல்ல செயல்களை நம்முடைய நம்பிக்கை வாழ்வின் வழியாக  நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்க கடுகளவாவது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். சீடர்களிடம் கடுகளவு கூட நம்பிக்கை இல்லாததை கண்டு சற்று வியப்புறுக்கிறார். மலையைப்  பார்த்து பெயர்ந்து போய் கடலில் விழு என்று சொல்லி விழ வைக்கும் அளவுக்கு நம்முடைய நம்பிக்கை ஆழமுள்ளதாக  இருக்க வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.

எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே இயேசுவைப் போல இறைநம்பிக்கை மிகுந்தவர்களாகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் வாழ்ந்து பல வல்ல செயல்களையும் அருளையும் நம் வாழ்வில் சுவைக்க முயற்சி செய்வோம்.

கொரோனா என்ற  தீநுண்மியால் நாம் வருந்தினாலும் கடவுள் நமக்கு ஆரோக்கியமான வாழ்வை கொடுப்பார் என்று கடுகளவு ஆழமாக நம்பிக்கை கொள்ளும் பொழுது, நிச்சயம் இந்த கொரோனா என்ற  தீநுண்மி இம்மண்ணில் இருந்து ஒழியும். இறைநம்பிக்கையின் வழியாகவும் தன்னம்பிக்கையின் வழியாகவும்  நம் வாழ்வில் வல்ல வல்ல செயல்களை அனுபவிக்கதேவையான அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் :

தாயும் தந்தையுமான இறைவா!  நாங்கள்   கொரோனா என்ற  தீநுண்மியின் காரணமாக பல துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். இருந்தபோதிலும் நாங்கள் நம்பிக்கைகள் தளர்வுறாமல் இறைநம்பிக்கையிலும் தன்னம்பிக்கையிலும் சிறந்து விளங்கி உமது வல்ல செயல்களையும் அருளையும் அனுபவிக்க தேவையான இரக்கத்தை பொழிந்தருளும். ஆமென்.

 

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு, சிலாமேகநாடு பங்கு, சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 11 =