Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறை நம்பிக்கை |போஸ்கோ ஏசுராஜ்
இன்றைய வாசகங்கள் (03.08.2020) பொதுக்காலத்தின் 18 ஆம் திங்கள் I. எரே. 28:1-17; II. திபா. 119:29,43,79,80,95,102; III. மத். 14:22-36
இறை பராமரிப்பும் மனித நம்பிக்கையும.
இன்றைய முதல் வாசகம் இறைவனுடைய பராமரிப்பை தெளிவாக கூறுகின்றது. அன்று இஸ்ரயேல் மக்கள் இறைவனை விட்டு பிரிந்து பல குற்றங்களை செய்ததால், அந்த பாவத்தின் விளைவாக இஸ்ரயேல் மக்களுக்கு பேரழிவு நேர்ந்தது. இஸ்ரயேல் மக்கள் நாடு கடத்தப்பட்டனர், எருசலேம் நகரம் தரைமட்டமாக்கப்பட்டது. கோவில்கள் இடிக்கப்பட்டன. அனைத்து செல்வங்கள், இளைஞர்கள், மக்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டனர். இதனால் இஸ்ரயேல் மக்கள் மிகப்பெரிய பொருளாதாரம், கலாச்சாரம், பாரம்பரிய, சமய பேரழிவை சந்தித்தனர். இவை எதனால் என்று பார்க்கப்படும் பொழுது, இறைவனை பிரிந்து சென்றதால், இறைவன் மீது நம்பிக்கை இல்லாததால் வந்த விளைவு சாவு,மரணம் என்ற பேரழிவுகள்.
ஆனால் இறை பராமரிப்பு, இஸ்ரயேல் மக்களை இறைவாக்கினர் வழியாக மீட்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், இறைவன் மனிதன்மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார். அவர் அன்பு அவருடைய இரக்கத்தின் வழியாக வெளிப்படுகின்றது. அப்படிப்பட்ட கடவுளுக்கு நம்மால் என்ன செய்துவிட முடியும்,நாமும் இறைவன்மீது நம்பிக்கை வைப்போம்.
இன்றைய நற்செய்தியில் இருந்து ஒரு சிறிய செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இன்றைய நற்செய்தியில் பேதுருவின் 'அச்சம்' நமக்கு உணர்த்துவது துணிச்சல். இயேசுவின் அருகில் இருந்து அனைத்து புதுமைகளையும் கண்ட பேதுருவுக்கு அச்சமே மிச்சமாக இருக்கின்றது.
மனிதர்களாகிய நமக்கு பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றது.ஆனால் இன்றைய உலகில் பல பலவீனங்களை கொண்டுதான் பலர் மாமனிதர்களாக உருவெடுத்து இருக்கிறார்கள். அச்சம் அதிகமாக மாறும் பொழுது தான் பலவீனங்கள் அதிகமாக காட்சியளிக்கும், இப்படி அச்சத்தை அறுத்து துணிவோடு இயேசுவிடம் சென்ற பேதுருவை போன்று நாமும் முழுமையாக இயேசுவிடம் கையளிப்போம்,அப்படியெனில் இன்று நாமும் நம்முடைய வாழ்வில் துன்பங்கள்,துயரங்கள்,வேதனைகள்,அவமானங்கள், நெருக்கடிகள்,இன்னல்கள்,இடையூறுகள் வந்தாலும் துணிச்சலான நம்பிக்கை வேண்டும்.
நமது வாழ்வில் ஒன்று மட்டும் நினைவில் வைத்திருக்க வேண்டும் இறைவனுடைய ஆசீர்வாதமும்,அருளும் நம் அனைவருக்கும் நிறைவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. எப்படி என்று பார்க்கின்றபொழுது, இந்த உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் தங்களுக்கு துன்பம் மற்றும் துயரம் ஏற்படும்பொழுது,காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றார் போல தங்களை மாற்றிக்கொண்டு வாழ பழகிக் கொள்ளும்போது, அனைவருக்கும் மேலாக படைக்கப்பட்ட நாம் இறுதிவரை போராட வேண்டும். மனிதர்களாகிய நமக்கு தோல்வி ஏற்படும்போது, இறைவனின் மீது நம்பிக்கைக் கொண்டு வெற்றியை நோக்கி போராடுவோம்,நமக்கு சோதனைக்காலம் வரும் பொது இறைவன்மீது நம்பிக்கை கொண்டு சோதனையை சாதனையால் முறியடிப்போம்.
இறைவேண்டல்:
அன்பு இறைவா! நீர் நம்பிக்கைக்கு உரியவர், மனிதர்கள் பாவம் செய்து உம்மை விட்டு விலகி சென்றாலும் நீர் எப்பொழுதும் எங்களை அன்பு செய்கின்றீர். மனிதர்களாகிய நாங்கள் துணிவோடு போராடவும்,அச்சமின்றி இறைவனின் மீது நம்பிக்கை வைக்கவும், வாழ்வில் வருகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் வேண்டிய ஆற்றலையும்,சக்தியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.ஆமென்.
திருத்தொண்டர் போஸ்கோ ஏசுராஜ்
இத்தாலி
Add new comment