அளவு கடந்த அன்பா? | குழந்தைஇயேசு பாபு


Unconditional Love

 

இன்றைய வாசகங்கள் (27.07.2020) - பொதுக்காலத்தின் 17 ஆம் திங்கள் - I. எரே. 13:1-11; II. திபா. 32:18-19,20-21; III. மத். 13:31-35 

"கச்சை இடையோடு ஒட்டி இருப்பது போல , இஸ்ரயேல் யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன்." 

கடவுளின் அன்பு என்பது எல்லையில்லா அன்பு. அந்த அன்பை நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எத்தனை முறை கடவுளை விட்டு பிரிந்து சென்றாலும் அவரின் அன்பு நம்மை மன்னித்து அரவணைக்கக் கூடியதாகவும் மீட்பை வழங்கக் கூடியதாகவும் இருக்கின்றது. கடவுளை விட்டு நாம் பிரிந்து செல்லும் நேரமெல்லாம் அவருடைய அன்பு நம்மை ஈர்த்துக் கொண்டே தான் இருக்கின்றது. இதற்கு இன்றைய நாளின் முதல் வாசகம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. முதல் வாசகத்தில் கடவுள் இறைவனிடம் இஸ்ரயேல் மக்களிடம் தான் கொண்டிருந்த தன் அன்பை "ஒரு இடைக்கச்சை " என்ற எடுத்துக்காட்டு வழியாக விளக்குகிறார். 

"இடைக்கச்சை" என்ற சொல் என்பது நம் உடலோடு ஒட்டி போடக் கூடிய ஆடையை சுட்டிக்காட்டுகிறது. இன்றைய நடைமுறை வழக்கில் கூறினால் நம் உடலோடு ஒட்டி போடக்கூடிய உள்ளாடையை குறிக்கின்றது. கடவுள் தன் அன்பை இதற்கு ஒப்பிடுகிறார் என்றால் தான் தேர்ந்தெடுத்த மக்களை தன் மனதிற்கு எவ்வளவு நெருக்கமாய் வைத்து அன்பு செய்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது. கடவுள் கொண்டிருந்த அன்பை எடுத்தியம்ப நிச்சயம் வார்த்தைகள் போதாது. 

ஆனால் இஸ்ரயேல் மக்களோ கடவுளின் அன்பை மறந்து அவரை புறக்கணித்தனர். கடவுள் தனது மனக்குமுறலை எரேமியா இறைவாக்கினர் வழியாக தன் மக்களுக்கு எடுத்து கூற விழைகிறார். அன்று இஸ்ரேல் மற்றும் யூதா மக்களை அன்பு செய்த கடவுள் இன்று நம்மையும் அன்பு செய்கின்றார் அல்லவா? அதை நாம் உணர்கிறோமா? 

இதை நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கூறுவதைப் போல ஒரு சிறிய கடுகு விதை அளவிற்கு கடவுளின் அளப்பரிய அன்பை நம் மனதிற்குள் விதைத்தோமானால், அந்த அன்பு நம்மிலே வேரூன்றி வளர்ந்து பெரிய மரமாகி நம்மைக் காண்கின்ற, உறவாடுகின்ற, உழைக்கின்ற அனைவருக்கும் இளைப்பாறுதல் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நாம் கடவுளின் அன்பை முழுமையாக உணர்ந்து அவற்றை அனுபவித்து மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுது இறையாட்சியின் தூதுவர்களாக மாறுகிறோம். நைந்து போன இடைக்கச்சைப் போல நாம் இருந்தாலும் கடவுளிடம் திரும்பி வர முயற்சி செய்வோம். கடவுள் நம்மை அன்போடு அரவணைத்து உடுத்திக் கொள்ள தயாராக இருக்கின்றார். 

எனவே நாம் கடவுளின் அன்பை உணர்ந்து கொண்டவர்களாய் அதை நம்முடைய செயல்பாட்டின் வழியாக அந்த அன்பை பிறருக்கு கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம். எனக்கு தெரிந்த ஒரு அருள்தந்தை மக்கள் மனதிலே மிகவும் இடம்பிடித்தவராய் வாழ்ந்தார். அவர் எந்த பங்கிற்கு சென்றாலும் எத்தனை ஆண்டுகள் பணி செய்தாலும் அந்த பங்கை விட்டு மற்றொரு பங்கிற்கு செல்லும்பொழுது மக்கள் கண்ணீரோடு தான் அனுப்பி வைப்பர். அவர் மீது அளவு கடந்த அன்பை கொண்டிருப்பர். எப்படி இந்த அளவுக்கு அவரால் பணி செய்ய முடிகிறது என்று ஆய்வு செய்யும் பொழுது அவர் சிறிய சிறிய செயல்பாடுகளில் அன்பு உள்ளத்தோடு உதவி செய்தார்.

உணவு என்று கேட்டு வரும் ஏழைகளுக்கு ஒருபோதும் பணம் தராமல் மறுத்ததில்லை. தன்னைச் சுற்றியுள்ள ஏழைகளை தேடி சென்று உதவி செய்துள்ளார். மக்களின் மகிழ்வான நேரங்களிலும் துயரமான நேரங்களிலும் உடனிருப்பார். தன்னை பகைப்பவர்களை பொறுத்துக் கொள்வார். இதுபோன்ற சிறிய சிறிய செயல்பாடுகளில் உண்மை உள்ளவராக இருந்து எல்லோரையும் அன்பு செய்ததால் அவர் உயர்ந்த மனிதராக கருதப்பட்டார். இத்தகைய மனநிலையை கொண்டவர்கள் தான் இஸ்ரேல் மற்றும் யூதா மக்களை அன்புசெய்த யாவே இறைவனும் நம்மை மீட்க வந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும். 

நம்முடைய அன்றாட வாழ்விலே சிறிய சிறிய செயல்பாடுகளில் நன்மைகள் பல செய்து நம்மோடு வாழக்கூடிய மக்களுக்கு உதவி செய்யும் பொழுது நாமும் இறைவனின் மனநிலையை பெற்றுக் கொள்கிறோம். எனவே பிறரை இறைவனின் மனநிலையோடு அன்பு செய்ய அருளை வேண்டுவோம். 

இறைவேண்டல் 

அன்பே உருவான இறைவா நீர் என் மீது கொண்ட அளவு கடந்த அன்பை, கடுகளவேனும் உணர்ந்து சுவைக்க வரம் தாரும். அதன் வழியாக நாங்கள் உம் அன்பை பிறரோடு பகிரும் இறையாட்சியின் தூதுவர்களாக மாறும் அருளைத் தரும். ஆமென்.

திருத்தொண்டர் குழந்தைஇயேசு பாபு

சிவகங்கை மறைமாவட்டம்​

Add new comment

7 + 0 =