Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
சிறியவற்றிலும் நன்மையா? | குழந்தைஇயேசு பாபு
பொதுக்காலத்தின் 16 ஆம் ஞாயிறு - இன்றைய வாசகங்கள் (19.07.2020) - I. சா.ஞா. 12:13,16-19; II. உரோ. 8:26-27; III. மத். 13:24-43
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி புனித மரியன்னை பேராலயத்தில் சிறையருட்பணிக்காக நிதி திரட்டுவதற்கு சிறையருட்பணி தன்னார்வத் தொண்டர்களோடு சென்றிருந்தேன். நிதி திரட்டுவதற்கு முந்தின வாரம் சிறையருட்பணியில் நாங்கள் செய்துவந்த நலத்திட்ட உதவிகளைப் பற்றி திருப்பலி முடிந்தவுடன் பங்கு பணியாளரின் அனுமதியோடு ஒலிபெருக்கியில் அறிவிப்பினை வழங்கினேன்.
அறிவிப்பு கொடுத்த அதற்கு அடுத்த வாரம் நாங்கள் ஆலயத்திற்கு வெளிப்புறம் நன்கொடை பெறுவதற்காக நின்றோம். தங்களால் இயன்றவரை மக்கள் பிறர்நலத்தோடு உதவி செய்தார்கள். அனைவரும் செய்த உதவிகளை விட ஒரு பத்து வயது சிறுமி செய்த உதவி என் உள்ளத்தை உருக வைத்தது. அறிவிப்பை கேட்ட 10 வயது சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த 350 ரூபாய் மதிப்பு மிக்க சில்லறைகளை நாங்கள் வைத்திருந்த வாளியில் போட்டாள். அப்பொழுது நான் அந்த சிறுமியிடம் "இவ்வளவு சில்லறை காசு உனக்கு எப்படி கிடைத்தது " என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுமி "கடந்த ஆண்டு சிறையருட்பணியைப் பற்றியும் இப்பணியின் வழியாக பயனடைந்து வரும் சிறைவாசிகளை பற்றியும் அவர்களின் குடும்பங்களைப் பற்றியும் அறிவிப்பில் ஒரு அருட்சகோதரர் எடுத்துரைத்தார். ஆனால் அறிவிப்பு கொடுத்த சமயத்தில் அவர்களுக்கு அந்த உதவி செய்ய என்னிடம் எதுவுமில்லை. எனவே அன்றிலிருந்து எனக்கு கிடைத்த சில்லறைகளை சேர்த்து வைத்தேன். இப்பணிக்கு கொடுப்பதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன். இப்பொழுது கொடுத்துவிட்டேன் "என்று கூறினார்.
இத்தகைய பதிலை அந்த 10 வயது சிறுமியிடம் கேட்டபொழுது நானும் என்னோடு நிதி திரட்டிய சிறையருட்பணித் தன்னார்வத் தொண்டர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்; வியப்புக்குள்ளானோம். பத்து வயது பிஞ்சு குழந்தைக்கு இருக்கும் உதவும் மனநிலை நம்மில் பலருக்கு இல்லை. கொடுத்து அளவில் சிறியதாக இருந்தாலும் கொடுக்க வேண்டும் நினைத்த மனம் பெரிது. பிறருக்கு நன்மை செய்து வாழவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுகின்றன. அது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.
இன்றைய நற்செய்தியின் மையக்கருத்து விண்ணரசு (இறையாட்சி). இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. (உரோ. 14:17). இன்று நற்செய்திலேயே நம் தூய ஆவியால் நிறப்பப்பட்ட நம் ஆண்டவர் இயேசு இறையாட்சியைப் புரிந்துக் கொள்ள மிக எளிமையாக மூன்று வகையான உவமைகளைக் கூறியுள்ளார். இயேசு பெரும்பாலும் உவமைகள் வழியாக போதித்தத்தன் காரணம் பாமர மக்கள் முதல் படித்த மக்கள் வரை இறையாட்சி மதிப்பீடுகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
முதலாவதாக, நல்ல விதைக்கும் தீய விதைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. நல்ல விதைகள் விதைக்கப்பட்ட இடத்தில் களைகளை வளரச்செய்யும் தீய விதையும் அலகையின் சூழ்ச்சியால் விதைக்கப்படுகிறது. நல்லதும் தீயதும் ஒன்றாக தெரிவதுபோல் பயிரும் களையும் ஒரே மாதிரி இருந்தது. எனவே இரண்டையும் வளரவிட்டு அறுவடை செய்யப்படும் பொழுது களைகள் அறுக்கப்பட்டு தீயிலிட்டு எரிக்கப்படும் என்றும் விளைந்த கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நல்லோரும் தீயோரும் ஒரேமாதிரி வாழ்ந்தாலும் இறுதியில் கடவுள் நல்லோரையும் தீயோரையும் தனியாகப் பிரிப்பார் என்ற சிந்தனையை முதல் உவமைச் சுட்டிக்காட்டுகிறது.
இதன் இறையியல் பின்னணி என்னவென்றால் இறையாட்சியின் மதிப்பீடுகள் நமக்கு போதனைகளின் வழியாக விதைக்கப்படுகிறது. அவற்றை நாம் வாழ்வாக்க முயற்சி செய்யும்பொழுது, அலகையின் தீய விதையான அநீதிகளும் தீமைகளும் நம்மை இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவிடாமல் தடையாய் இருக்கிறது. அலகையின் வழிநடத்துதல் மகிழ்ச்சி நிறைந்ததாக தெரியும். ஆனால் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழும் பொழுது நமக்கு பல துன்பங்கள் வரும். மகிழ்ச்சி இல்லாத வாழ்வாகவும் சோதனையுள்ள வாழ்வாகவும் இருக்கும். ஆனால் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் இறையாட்சியின் மதிப்பீட்டுக்கு சான்று பகரும் பொழுது நிச்சயம் இறுதியில் இறைவன் நமக்கு வெற்றியை தருவார்.
அலகையின் வழிநடத்தலில் வாழும் பொழுது மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக தெரிந்தாலும், இறுதியில் நம் வாழ்வு கேள்விக்குறியாக மாறிவிடும். நாம் செய்த தீமையின் பொருட்டு பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும். களைகளுக்கு மத்தியிலும் நல்ல விதைகள் பலன் கொடுத்ததை போல நாமும் வாய்ப்புகளை பயன்படுத்தி அலகையின் திட்டத்திற்கு சாட்டை அடி கொடுப்போம். மனமாற கொடுக்கப்படுகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி மனம் மாறுவோம். இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி பிறருக்கு பலன் கொடுக்கும் கருவிகளாக உருமாறுவோம். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சக்கேயு. அவர் எவ்வளவுதான் பாவங்கள் செய்தாலும் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட பொழுது, அனைத்தையும் இழக்க தயாராக இருந்தார். உண்மை, நீதி, நேர்மை போன்ற இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்க முடிவு செய்தார். அதன் பயனாக இயேசு கொடுத்த மீட்பைச் சுவைத்தார்.
இரண்டாவது உவமையில் ஆண்டவர் இயேசு கடுகு விதையை இறையாட்சிக்கு ஒப்பிடுகிறார். இறையாட்சி என்னும் சிறிய விதை கடுகு விதைக்கு ஒப்பிடப்படுகிறது. கடுகு விதை அளவில் சிறிதாக இருந்தாலும் அது வளர்ந்த பிறகு மற்ற செடிகளை விட மிகப்பெரிய செடியாக மாறுகின்றது. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கும் அளவுக்கு பெரிதாக வளர்வதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. நம் ஆண்டவர் இயேசு தெரிந்தெடுத்த 12 சீடர்கள் ஒரு சிறிய திருஅவையாக இருந்தாலும், பின்பு இறையாட்சி மதிப்பீட்டின் தாக்கத்தின் காரணமாக மிகப்பெரிய திருஅவையாக உருமாறியது . எனவே இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கவும் அதைப் பிறரும் அறிந்து வாழ்வாக்கவும் நாம் எடுக்கக்கூடிய சிறிய சிறிய முயற்சிகள் மிகப் பெரிய வெற்றியை தரும்.
அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நமது நாட்டில் முதன் முதலாக நற்செய்தி அறிவித்த புனித தோமையார். அவர் விதைத்த இறையாட்சி என்னும் ஒரு சிறிய விதை இன்று இந்தியத் திருஅவையாக வளர்ந்துள்ளது. அதேபோல நமது அன்றாட வாழ்விலே நீதியையும் உண்மையையும் அன்பையும் வாழ்வாக்கிட, சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை முழுமையாக பயன்படுத்தி நாம் வாழும் சமூகத்தை இறையாட்சியின் சமூகமாக மாற்ற அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் பொழுது நாமும் இயேசுவைப் போல இவ்வுலகத்தில் இறையாட்சியை கட்டியெழுப்பும் இறைத்தந்தையின் கருவிகளாக உருமாற முடியும்.
மூன்றாவது உவமையில் புளிப்புமாவைப் பற்றி ஆண்டவர் இயேசு பேசியுள்ளார். புளிப்புமாவு எவ்வாறு பிசைந்து வைத்த மற்ற மாவை புளிப்புள்ளதாக மாற்றுகிறதோ, அதேபோல இறையாட்சி எனும் இயல்பை நாம் வாழ்ந்து நம் வாழ்வின் மூலம் பிறரையும் வாழவைக்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு கூறிய இந்த மூன்று உவமைகளும் இறையாட்சியின் ஆழமான பொருளை மிக எளிமையாக எடுத்துக்கூறி அதன்படி வாழ வழிகாட்டுகிறது.
எனவே இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கும் பொழுது, நம் வாழ்வு நன்மைகளை வழங்கக் கூடிய வாழ்வாக மாறிவிடுகிறது. இந்த மனநிலையில் வாழ்ந்தவர்கள் தான் இருபதாம் நூற்றாண்டில் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த புனித அன்னை தெரசா. அதேபோல நாம் வாழ்கிற இந்த நூற்றாண்டிலும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைய முதல் வாசகமும் இறைவனின் நன்மைத் தனத்தைப் பற்றி சுட்டிக்காட்டுகின்றது . இறைவன் நீதியுள்ளவராக இருந்தது போல் நாமும் நீதியுள்ளவர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு இந்த இரண்டாம் வாசகத்தில் வருவதுபோல தூய ஆவியாருடைய உடனிருப்பையும் வழிநடத்துதலையும் பெற்றுக்கொள்ள நாம் தூய ஆவியார் குடிகொள்ளும் ஆலயமாக நம் உடலையும் உள்ளத்தையும் மாற்றுவோம். தூய ஆவியாரின் துணையோடு நிச்சயமாக எத்தனை எதிர்ப்புகளும் இன்னல்களும் தடைகளும் வந்தாலும் திருத்தூதர் களைப்போல துணிச்சலோடு இறையாட்சியின் மதிப்பீடுகளை அறிவிக்க முடியும். இறைவன் நீதியுள்ளவராக இருந்ததுபோல நாமும் நீதியுள்ளவர்களாக உருமாற முடியும். எனவே இன்றைய நாளிலே இறையாட்சியின் மதிப்பீடுகளை மிகத் துணிச்சலோடு சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்தி தூய ஆவினுடைய வழிநடத்தலில் செய்ய இறையருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நீர் இவ்வுலகத்திற்கு கொண்டுவந்த இறையாட்சியை நாங்கள் வாழ்வாக்கி, பிறரும் வாழ்வாக்க தூண்டும் ஒரு கருவிகளாகப் பயன்பட தூய ஆவியின் ஆற்றலை தரும். ஆமென்.
அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment