பிறர் நலனில் இறைவனைக் காண்போம் | குழந்தைஇயேசு பாபு


13.07.2020

இன்றைய வாசகங்கள் (13.07.2020) - பொதுக்காலத்தின் 15ஆம் திங்கள் - முதல் வாசகம் எசா. 1:11-17; நற்செய்தி வாசகம் மத். 10:34-11:1

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு. (குறள் 211) 

"பிறருக்கு உதவுவது, அவ்வுதவியை பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று ; ஒரு உதவி செய்ததற்குத் திரும்பச் செய்து தான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?" என்று சாலமன் பாப்பையா இக்குறளுக்கு பொருள் கூறுகிறார். நம்முடைய அன்றாட வாழ்விலும் வள்ளுவர் சுட்டிக்காட்டுவது போல மழையைப் போல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறர் நலத்தோடு பிறருக்கு உதவி செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். நமது தமிழ் பண்பாட்டில் மிகச்சிறந்தது விருந்தோம்பல் பண்பு. இந்தப் பண்பு பிறர் நலத்தை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பிறர் நலமானது சுயநலமாக மாறிவிட்டது. நம்மோடு வாழக்கூடிய மனிதர்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டாமல் கடவுளை மட்டும் அன்பு செய்கிறேன் என்ற மனப்பாங்கு தவறாகும். இறையன்பும் பிறரன்பும் சுய அன்பும் ஒரே பாதையில் இணைந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாமல் கடவுளை மட்டும் அன்பு செய்வேன்; பிறரை அன்பு செய்ய தேவையில்லை என்றும் வாழும் பொழுது நாம் கடவுளின் பார்வையில் அருவருப்பானவர்களாக மாறுகிறோம். 

நாம் இறைவேண்டல் செய்வதைத் தாண்டி துன்பப்படும் மக்களுக்கு உதவுவது இன்னும் இறைவனோடு நம்மை ஒன்றிணைக்கச் செய்கிறது. எனவேதான் புனித அன்னை தெரசா "செபிக்கும் உதடுகளை விட, உதவும் கரங்களே சிறந்தது" எனக் கூறுகிறார். 

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரேல் மக்களுடைய வழிபாட்டு நிகழ்வுகளுக்கு இறைவனின் பதில் என்ன? என்பதைப்பற்றி வாசிக்கிறோம். இஸ்ரயேல் மக்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. தங்கள் வாழ்வில் எவ்வளவு குற்றங்கள் செய்தாலும் பாவம் போக்கும் பரிகாரப் பலியை செலுத்தினால் போதும் தங்கள் குற்றங்கள் மன்னிக்கப்படும் என்று நம்பினர். அவர்கள் எப்பொழுதெல்லாம் தங்கள் வாழ்விலே குற்ற உணர்ச்சியை உணர்ந்தார்களோ அப்பொழுது பாவம் போக்கும் பலியை செலுத்தினர். இப்படிப்பட்ட மனநிலையை இறைவன் அருவருப்பதாகக் கூறுகின்றார். "காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகிறது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அம்மாவாசை, ஒப்புரவு நாள், வழிப்பாட்டுக் கொண்டாட்டங்களை நான் சகிக்க மாட்டேன்." (எசா: 1:13) என கூறுகிறார்.

பலி செலுத்தினால் மட்டும் நாம் இறைவனின் மன்னிப்பைப் பெற முடியாது. மாறாக, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் நன்மைகள் பல செய்ய வேண்டும் எனவும் இறைவன் எதிர்பார்க்கிறார். நாம் பிறர் நலத்தோடு உதவி செய்வது, பலி செலுத்துவதற்கும் திருவிழா கொண்டாடுவதற்கும் சமம். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலே திருவிழாமற்றும் தேர் கொண்டாட்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஏழை எளிய மக்களுக்கு பிறர் நலத்தோடு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி உதவி முயற்சி செய்வோம். இத்தகைய மனநிலையை தான் எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிற நல்ல சிந்தனையோடு வாழ அழைக்கிறார். "இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் "(மத். 10:42)என்ற இயேசுவின் வார்த்தைகள் பிறர் நல சிந்தனையைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் நற்செய்தி பணிக்கு சான்று பகர கூடிய எல்லா இறை ஊழியர்களுக்கும் நம்மாலான உதவிகளை செய்ய முன்வருவோம். அதேபோல ஆண்டவரே கதி என நம்பிக்கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களுக்கும் பிறர்நலச் சிந்தனைகளோடு உதவிகளை செய்ய முன்வருவோம். 

இன்றைய காலகட்டத்தில் கரோனா தொற்று நோயின் காரணமாக பல்வேறு ஏழை எளிய மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும் இல்லாமல் இவ்வுலகில் எத்தனையோ மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களையெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாகக் கருதி உதவி செய்வோம். இவ்வாறு பிறர் நலச்சிந்தனையோடு உதவி செய்யும் பொழுது நாம் கடவுளுக்கு பலி செலுத்துகிறோம்.

திருவிழா கொண்டாடுகிறோம். இவ்வாறு செய்கின்ற பொழுது நிச்சயமாக கடவுள் தனது அருளையும் இரக்கத்தையும் ஆசீரையும் கைமாறாக கொடுப்பார். நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு பிறர் நலனில் அக்கறை கொள்வதில்தான் இருக்கிறது. இதைத்தான் நாம் முன்மாதிரி ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்தார். எனவே இன்றைய நாளில் பிறர் நலனில் அக்கறை கொண்டு பிறர் வாழ்வில் ஒளியேற்ற அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பான இறைவா! நாங்கள் எங்களுடைய வாழ்விலே சுயநலமிக்கவர்களாக வாழாமல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி பிறர்நலனோடு உதவி செய்ய தேவையான அருளைத் தாரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 0 =