உடலா? ஆன்மாவா? | குழந்தைஇயேசு பாபு


11.07.2020 - Homily

இன்றைய வாசகங்கள் (11.07.2020) - பொதுக்காலத்தின் 14ஆம் சனி - முதல் வாசகம் எசாயா 6:1-8; நற்செய்தி வாசகம் மத். 10:24-33

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்" (202)

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமையை தீயினும் கொடியவனாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டுமென்று சாலமன் பாப்பையா இக்குறளுக்கு பொருள் கூறுகிறார். நம்முடைய அன்றாட வாழ்விலே நன்மை எனக்கருதி தீமையை செய்து கொண்டிருக்கிறோம். அதுவே பிறருக்கும் நமக்கும் தீமையாக முடிந்துவிடுகிறது. எனவே நம் வாழ்வு வளம் பெற தீமையை செய்ய அஞ்ச வேண்டும். நன்மையே நம் உயிர் மூச்சாகக் கொண்டு கடைபிடிக்க இன்று அழைக்கப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர்எசாயா இறைவனின் தூய்மையையும் மாட்சியையும் வல்லமையையும் காட்சியிலேயே கண்டு அனுபவிக்கிறார். இறைமாட்சியையும் பேராற்றலையும் கண்டபிறகு தம்முடைய தீமையானப் பாவ வாழ்வை நினைத்து தனது தகுதியின்மையை உணர்ந்தார். "தூய்மையற்ற உதடுகளை கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகளை கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே" (எசா. 6:5) என்று கூறி ஆண்டவருக்கு அஞ்சுகிறார். ஆண்டவரே எசாயாவின் தாழ்ச்சியையும் பாவங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும் கண்டு அவரை மன்னித்து இறைப்பணிக்கு அழைக்கின்றார். "இதோ! இந்நெருப்பு பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது ;உன் பாவம் மன்னிக்கப்பட்டது" ( எசா. 6:7) என்ற வார்த்தைகள் ஆண்டவரின் அன்பையும் பராமரிப்பையும் இரக்கத்தையும்எசாயா இறைவாக்கினருக்கு சுட்டிக்காட்டுகின்றது.

தூய்மையற்றவராக கருதப்பட்ட எசாயாஆண்டவருக்கு அஞ்சி அவரின் மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற்ற பிறகு இறைவாக்குப் பணிக்கு அழைக்கப்படுகிறார். "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" (எசா. 6:8) என்று கடவுள் கேட்டதற்கு எசாயா "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" (எசா. 6:8) என்று பதில் கூறினார். எசாயாவின் அழைத்தல் மற்ற இறைவாக்கினர்கள் போல் அல்லாமல்; சற்று மாறுபட்டதாக இருக்கிறது. மற்ற இறைவாக்கினர்கள் இறை அழைப்பைக் கேட்டவுடன் சற்று தயங்கி அதன்பின் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் எசாயா காட்சியில் அழைக்கப்பட்டாலும் கடவுளுக்கு அஞ்சி இறைவாக்கு பணி செய்ய முன்வந்தார். இப்படிப்பட்ட மன நிலையை நாமும் கொண்டிருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வுலகம் சார்ந்த தீமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இறையச்சத்தோடு இறைவனின் குரலுக்கு செவிமெடுக்க முயற்சி செய்வோம். 

இன்றைய நற்செய்தி வாசகமும் நாம் எதற்கு அஞ்ச வேண்டும் என்ற தெளிவைக் கொடுக்கின்றது ."ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் " (மத். 10:28) என்று நம் ஆண்டவர் இயேசு கூறுகிறார். இவ்வுலகம் சார்ந்த உடலுக்கு அஞ்சாமல்; நிறைவாழ்வை நோக்கி பயணிக்க இருக்கக்கூடிய ஆன்மாவிற்கு மட்டும் அஞ்ச அழைப்பு விடுக்கிறார். உடல் இம்மண்ணை சார்ந்தது; ஆன்மா விண்ணை சார்ந்தது. நாம் வாழுகின்ற இந்த உலகத்திலே இம்மண்ணை சார்ந்த மாயக் கவர்ச்சிகளுக்கும் ஆடம்பர வாழ்வுக்கும் தீய நாட்டங்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க அழைக்கப்படுகிறோம். கடவுளுக்கு மட்டும் அஞ்சி இவ்வுலகம் சார்ந்த தீயவற்றை வெறுக்கும் பொழுது நிச்சயமாக நம் ஆன்மாவை காத்துக்கொள்ள முடியும்.

கடவுளுக்கு மட்டும் அஞ்சியவர்கள் தங்கள் வாழ்வில் துன்பப்பட்டாலும் இறுதியில் தங்கள் இலக்கு நோக்கிய பாதையில் வெற்றி பெற்றார்கள். குறிப்பாக தாவீது படைகளின் ஆண்டவருக்கு மட்டும் அஞ்சி, உடல் வலிமை வாய்ந்த கோலியாத்துக்கு அஞ்சாமல் ஆண்டவரின் வலிமையைக் கொண்டு வெற்றி பெற்றார். 

புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாளும் இவ்வுலகம் சார்ந்த சட்டத்திற்கு அஞ்சாமல், கடவுளுக்கு மட்டும் அஞ்சினார். திருமணத்திற்கு முன்பாக கருவை தன் வயிற்றில் சுமந்தால் கல்லெறிந்து கொல்லப்படுவேன் என்ற யூதச்சட்டத்தை அறிந்தும், கடவுளுக்கு மட்டும் அஞ்சி "ஆம்" என்று ஒப்புக் கொண்டார். இறுதியில் மீட்பரின் தாயாக இவ்வுலகம் அறிய உயர்த்தப்பட்டார். தொடக்க காலத்தில் இயேசுவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்கள். இருந்தபோதிலும் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு இறையச்சத்தோடு சான்று பகர்ந்தனர். இவ்வுலகம் சார்ந்த அரசர்களையும் படைகளையும் யூதத் தலைவர்களையும் துணிச்சலோடு எதிர்த்தனர். இதனால் தங்கள் உடலை இழந்தாலும் ஆன்மாவை இழக்கவில்லை. 

ஆம் அன்புக்குரியவர்களே! அறிவியல் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் வளர்ச்சி பெற்ற நாம் நமது முக்கியத்துவம் ஆன்மாவுக்கா? உடலுக்கா?. இக்கேள்விகளுக்கு பதில் கூறுவது நமது வாழ்க்கையில் தான் இருக்கின்றது. உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம் என்றால் கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் கோலியாத்தைப் போல நிச்சயமாக சுவைக்க முடியாது. ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தோமென்றால் எசாயா இறைவாக்கினர், தாவீது, அன்னை மரியா, தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் போன்றவர்களைப் போல கடவுளின் மாட்சியையும் அன்பையும் இரக்கத்தையும் நிறைவாழ்வையும் சுவைக்க முடியும். நாம் கடவுளுக்கு அஞ்சி இவ்வுலகம் சார்ந்தவற்றைத் தாண்டி ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுக்க நம்மையே இறைவனிடம் ஒப்புக் கொடுப்போம். 

இறைவேண்டல்

"துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" (மாற். 6:5) என்று கூறி திடப்படுத்தி இயேசுவே! இன்று இவ்வுலகை வாட்டி வதைக்கும் கொரோனாமற்றும் தீய நாட்டங்கள் போன்றவற்றைக் கண்டு நாங்கள் அஞ்சாமல் இருக்க அருள்தாரும். மேலும் நாங்கள் மனத் துணிவோடு உமக்கு மட்டும் அஞ்சி ஆன்மாவை காத்து ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றுக் கொள்ள உமது ஆசியைத் தாரும். ஆமென்.

அருள்சகோதரர் குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 3 =