Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவில் மகிழ்ச்சி - வார்த்தையின் வலிமை - 4 ஜீலை 2020
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடி அங்கும் இங்கும் அலைகின்றோம். எது உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கும் என ஆராய முயற்சி செய்கிறோம். மகிழ்ச்சியாக வாழ பிறரிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். இறுதியில் நாம் மகிழ்ச்சி கிடைக்காமல் மன உளைச்சலுக்கும் ஏமாற்றத்திற்கு உள்ளாகிறோம். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் அது பிறர் கையில் அல்ல; மாறாக நமது வாழ்விலும் நமது எண்ணத்திலும் தான் இருக்கின்றது. நம்முடைய எண்ணமும் வாழ்வும் கடவுளோடு இணைந்து இருக்கும் பொழுது நிறைவான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது.
யோவானின் சீடர்கள் தாங்களும் பரிசேயர்களும் நோன்பு இருக்க இயேசுவின் சீடர்கள் ஏன் நோன்பு இருக்க வில்லை என்ற வினாவானது இயேசுவிடம் கேட்கப்படுகிறது. ஏனெனில் யூத சமூகத்தைப் பொறுத்தவரையில் நோன்பிருத்தல் என்பது ஒரு முக்கியமான கடமையாக கருதப்பட்டது. எனவேதான் இத்தகைய கேள்வியை யோவானின் சீடர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் இயேசு தன்னை ஒரு மணமகனாக சித்தரித்து மணமகன் தங்களோடு இருக்கும்வரை நோன்பிருக்க தேவையில்லை என்று கூறுகிறார். மணமகன் இல்லாத காலம் வரும் அப்பொழுது நோன்பு இருப்பார்கள் என்றும் கூறுகிறார். இயேசு இன்றைய நாளிலே நோன்புக்கு எதிராகப் பேசவில்லை. மாறாக நோன்பு சடங்குகளை நிறைவேற்றும் கடமையாக பார்க்கப்படாமல் மனித வாழ்வுக்கு கட்டுப்பட்டது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
இயேசுவின் பதில் நோன்பு இருப்பதைவிட தன்னோடு ஒன்றித்து இருப்பது மேலானது என்பதை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. இயேசு நோன்புக்கு எதிரானவர் இல்லை. அது தேவையான நேரத்தில் நோன்பிருந்து தன்னை தயார்படுத்துவது அவசியம் என்பதை தனது வாழ்விலும் வாழ்ந்து காட்டி உள்ளார். அவர் தன்னுடைய இறையாட்சி பணியைத் தொடங்குவதற்கு முன்பாக நாற்பது நாட்கள் நோன்பிருந்து தன் தந்தையின் திருவுள்ளத்தில் தெளிவு பெற்றார். அதேபோல இறையாட்சி பணி செய்கின்ற பொழுது உணவு உண்ணக் கூட நேரமில்லாமல் பணி செய்திருக்கிறார்.
சீடர்களால் பேய் ஓட்ட முடியாத நேரத்தில் இயேசு பேயை ஓட்டுகிறார். அப்பொழுது சீடர்களுக்கு இத்தகைய பேய்களை நோன்பு மற்றும் இறைவேண்டல் வழியாக மட்டுமே ஓட்ட முடியும் என கூறியுள்ளார். இவற்றிலிருந்து இயேசு நோன்புக்கு எதிரானவர் இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதை வெற்று சடங்காகவும் கடமையாகவும் பார்க்காமல் தேவையான நேரத்தில் இயேசுவோடு இணைந்திருக்க செய்யும் பொழுது அது முழு அர்த்தத்தை பெறுகின்றது. கடமைக்காகவும் பிறர் பார்க்க வேண்டுமென்றும் செய்யும் பொழுது அது வெளி வேடமாக மாறுகிறது . இத்தகைய மனநிலையில் இருந்து மாறி இறைமகன் இயேசுவோடு இணைந்து இருக்கும் பொழுது நிறைவான மகிழ்ச்சியை காண முடியும். நாம் நோன்பிற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல; மாறாக நோன்பு தான் நமக்கு கட்டுப்பட்டது.
நம்முடைய அன்றாட வாழ்விலே நோன்பு இருப்பது தவறல்ல ;ஆனால் அது எத்தகைய மனநிலையோடு செய்கிறோம் என்பது முக்கியம். இந்த உலகத்தில் எத்தனையோ பேர் உண்ண உணவின்றி பசியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்மாலான உதவிகளை நோன்பிருந்து கொடுப்பதன் வழியாக இயேசுவோடு ஒன்றித்து இருக்க முடியும். அவ்வாறு ஒன்றித்து இருக்கும்பொழுது உண்மையான பேரின்பத்தை அனுபவிக்க முடியும். "செபிக்கும் உதடுகளை விட உதவும் கரங்களே மேலானது "என்று புனித அன்னை தெரசா கூறியுள்ளார்.
நோன்பிருந்து செபம் செய்வதை கடந்து பிறருக்கு உதவும் பொழுது நாம் இயேசுவோடு இணைக்கிறோம். ஏழையின் சிரிப்பில் தான் இறைவன் இருக்கின்றார். இறைவனின் இருப்பிடத்தில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கின்றது. எனவே இன்றைய நாள் நற்செய்தி நோன்பினை ஒரு கடமையாகச் செய்யாமல் இறை சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு உதவுவதன் வழியாக செய்ய அழைப்பு விடுக்கிறது . நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "பலியை அல்ல ;இரக்கத்தையே விரும்புகிறார் ". பலி செலுத்துவதற்கும் நோன்பு இருப்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதை தாண்டி பிறர் நல சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
ஆம்! அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! நோன்பு என்ற உன்னதமான பண்பின் வழியாக பிறர் வாழ்வில் ஒளி ஏற்றுவோம். அதன் வழியாக இறைமகன் இயேசுவோடு ஒன்றித்து இருப்போம். அப்பொழுது நிறைவான மகிழ்ச்சி எந்நாளும் நமக்கு உண்டு. இயேசுவில் இணைந்திருப்பது வழியாக நிறைவான மகிழ்ச்சியை பெறுவோம்.
இறைவேண்டல் :
அன்பான இறைவா எங்களுடைய வாழ்விலே வெறும் கடமைக்காகவும் பிறரை விமர்சனபடுத்தவும் நோன்பு இருக்காமல் அதன்வழியாக பிறர் வாழ்வுக்கு வளம் ஊட்டவும். உம்மில் இணைந்திருந்து நிறைவான மகிழ்ச்சியை அனுபவிக்கவும் அருள்தாரும்.
இன்றைய வாசகங்கள் (04.07.2020): முதல் வாசகம் : ஆமோஸ் :9: 11- 15, நற்செய்தி வாசகம் : மத் :9: 14-17
அருட்சகோ. குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment