கொரோனாவுடன் நடந்திருப்பார் - எங்கள் கனவும் கற்பனையும்


Sahayam IAS

திரு. சகாயம்  ‘முதல்வர்’ பதவியில் அமர்ந்திருந்தால், கொரோனா காலத்தில் என்ன நடந்திருக்கும்? ஒரு கற்பனை. 

கற்பனை 1: ஐரோப்பாவில் வெளிநாடுகளில் கொரோனா தாக்கம் இருக்கும்போதே, இங்கிருக்கிற மருத்துவக் கட்டமைப்புக்கள், ஆயத்தப்பணிகளைத் தொடங்கியிருக்கும்.

பேரிடரை  எதிர்கொள்வதற்கான ‘மேலாண்மை’ தயார் நிலையில் இருந்திருக்கும்.

மக்களுக்கான தலைவர்கள், மக்கள் போராளிகள் அனைவரோடும் தொடக்கத்தில் ஆலோசனைக்கூட்டங்கள் நடந்திருக்கும்.

எதிர்க்கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்கிற விவாதம் எழுந்திருக்காது. ஏனென்றால், எதிர்க்கட்சிகளே இருந்திருக்காது.

தமிழக எல்லைகள் வழியாக நுழைகிறவர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்திருப்பார்கள். சோதனைகள் அப்போதே தொடங்கியிருக்கும். இவையனைத்தும் ஐரோப்பா நாடுகளில் கொரோனா பரவல் தாக்கல் அதிகமான காலத்திலேயே வந்திருக்கும்.

முடிவு: கொரோனா தமிழக எல்லைக்குள் நுழைந்திருக்காது.

கற்பனை 2:  ஒருவேளை, கொரோனா வைரஸ் தமிழகத்திற்குள் அத்தனை தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி நுழைகிறபோது, என்ன நடந்திருக்கும்?

மக்கள் ஏன் வெளியே வர நேரிடும் என்று யோசித்திருப்பார்? 90 விழுக்காடு ‘தேவை’ மட்டுமே.

முதல்நாள் மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றியிருப்பார். நோயின் கொடூரத்தை, பாமரரும் புரிந்து கொள்கிற வகையில் விளக்கியிருப்பார். நம்பிக்கையளித்திருப்பார். இணைந்து எதிர்கொள்ளும் துணிவை, முதல் நாளே மக்களுக்குள் விதைத்திருப்பார். ‘தேவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருநாளும் வீடு தேடி வரும்’ என்று உத்திரவாதம் அளித்திருப்பார். யாரும் கடைகளுக்குப் பொருட்கள் வாங்க முண்டியடிக்க வேண்டாம் என்று, ஒரே நாளில் ஒரு மணி நேரத்தில் அறிவித்திருந்தாலும், இத்தனை உத்தரவாதங்களையும் வழங்கியிருப்பார்.

நோயாளிகளுக்கு  மருந்துகள் வீடு தேடி வரும் ஏற்படுகளைச் செய்திருப்பார்.

முகக்கவசம், கைகளை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் தற்காப்புப் பொருட்கள் வீடு தேடி வந்திருக்கும்.

வீடு வீடாக சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வுகளைச் செய்திருப்பார்கள். மாதிரி எடுத்துச் சோதித்து ‘தொற்று இல்லை’ என்பதை, உறுதி செய்திருப்பார்கள். இருந்திருந்தால் தனிமைப்படுத்தியிருப்பார்கள்.

ஒவ்வொருநாளும் வீடுகளில் உள்ளவர்களுக்கு, உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்டிருக்கும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அது தனிமைச்சிறையாக இருந்திருக்காது. அவர்களுக்கான அத்தனை அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்திருக்கும். எத்தனை நாட்களும் இருக்க முடியும் என்கிற தரம், உருவாக்கப்பட்டிருந்திருக்கும்.

ஊருக்குச் செல்கிறவர்கள் செல்வதற்கு, இணையதளத்தின் வழியாக முன்பதிவு செய்ய, ஏற்பாடு செய்திருப்பார். ‘அத்தனை பேருக்கும், எத்தனை நாட்கள் ஆனாலும், பேருந்து ஏற்பாடு செய்யப்படும். அவர்களில் கடைசி நபரை ஊருக்கு அனுப்பி வைக்கிறவரை, அவர்கள் வீடுகளில் இருப்பதற்குத் தேவையான அத்தனை நாட்கள் செலவுகளுக்கும் அரசே பொறுப்பேற்கும்’ என அவர்களுக்கு நம்பிக்கையளித்திருப்பார்.

பொருட்களை இலவசமாகக் கொடுப்பது மக்களை ‘பிச்சையெடுக்க’ வைப்பதற்கு சமம் என்று நினைத்திருப்பார். மக்களுக்கு மாதம் 5,000 கொடுக்க முடிவு செய்திருப்பார். பணத்திற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்திருப்பார். அவர் யோசிப்பதற்கு முன்பாகவே, உலகத்தின் அத்தனை பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டு வாழ் தமிழர்கள், அரசின் வங்கிக்கணக்கை, கோடிகளால் நிறைத்திருப்பார்கள்.

தமிழகத்தின் நல்மனம் கொண்ட அத்தனை பெரும், சாதி, மத, இன, மொழி பேதமின்றி, பணக்காரர்களாக இருக்கிறவர்கள், உதவியிருப்பார்கள்.

மக்களுக்கு அரசு கொடுக்கும் நிவாரணத் தொகையிலிருந்து,  அவர்கள் பொருட்களை, அரசு நிர்ணயிக்கும் மலிவு விலைகளில் தங்கள் தெருக்களுக்கு தினமும் வரும் தன்னார்வலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருப்பார். அதையும் மீறி தேவை எழுந்தால், உடனடியாக, முதல்வர் அலுவலகத்தை, ஊடகம், முகநூல், மின்னஞ்சல் எப்படியாவது, எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருப்பார்.

அப்படி தேவையிலிருப்பவர்களைக் கண்டறியுமாறு, ஊடகங்களைக் கேட்டுக் கொண்டிருப்பார்.

சாத்தான்குளம் உயிரிழப்பு நடந்திருக்காது. இவ்வளவு நீண்ட நெடிய விவாதங்கள் தேவையிருந்திருக்காது.

திரு. தணிகாசலம் சிறையில் இருந்திருக்கமாட்டார். ஆராய்ச்சிக் கூடங்களில் அறிவியல் ரீதியாக அவருடைய மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கும். வெற்றி என்றால், செயல்படுத்தப்பட்டிருக்கும். தோல்வி என்றால், மீண்டும் ‘முயற்சி’ செய்ய ஊக்கம் தந்திருப்பார்.

தனியார் மருத்துவமனைகள் இருந்திருக்காது. அப்படி இருந்திருந்தாலும், அவைகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கும். மருத்துவம் இலவசம்.

முதியோர் அத்தனை பேரும் ஓய்வூதியத் தொகை பெற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். பிள்ளைகள் இல்லாத முதியவர்கள், அரசின் முதியோர் காப்பகங்களில் மகிழ்ச்சியோடு இருந்திருப்பார்கள்.

பல்வேறு சமயங்களின் மதகுருமார்கள்,  அரசு எடுக்கிற முயற்சிகள் வெற்றி பெற, அவர்களுக்காகக் பணியாற்றுகிறவர்களை இறைவனின் வல்லமை உடனிருந்து பாதுகாக்க வேண்டும் என்று, வேண்டிக்கொண்டிருந்திருப்பார்கள்.

மத வியாபாரிகளின் ‘வியாபாரம்’ படுத்திருக்கும். ஏனென்றால், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளானகல்வி, வேலை, ஓய்வூதியம் என்கிற அவர்களின் ‘வியாபார முதலீடு’இல்லாத நிலையை அத்தனையையும் அரசே நிறைவேற்றியிருக்கும். எனவே, அவர்களை நாடித் தேடி போக வேண்டிய நிலை இருந்திருக்காது.

அறிவு தான் உயர்வு என்கிற, பாகுபாடும், அதுவே ஒருவரின் ஊதியத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாகவும் இருந்த நிலை மாற்றப்பட்டிருந்திருக்கும்.  படித்தவர் அதிகமான சம்பளம் பெறும் நிலையும் உழைக்கிறவர்கள் வறுமையில் வாடுகிற நிலையும் இருந்திருக்காது. உழைக்கிறவர்களும், மேன்மையானவர்களாக இருந்திருப்பார்கள்.

‘வியாபார’ மருத்துவர்கள் குறைந்திருப்பார்கள், ஏனெனில், மருத்துவம் ‘சேவையாகி’ இருக்கும். பணம் பார்க்க நினைக்கிறவர்களுக்கு அதில் ஒன்றும் கிடைப்பதற்கு இல்லை, என்கிற நிலை உருவாகியிருக்கும். சேவை செய்கிறவர்களே மருத்துவர்களாக இருப்பார்கள். எனவே, மருத்துவப் படிப்பிற்கான, இட ஒதுக்கீடு பற்றிப் போராட்டங்களும், தேவையற்ற விவாதங்களும், நடத்த வேண்டிய தேவையும் இருந்திருக்காது.

‘யாரும் செய்ய மறுக்கிற வேலையைச் செய்கிறவர்களுக்கான கூலி’ படித்தவர்களை விட அதிகமாக இருக்கும். விவசாயின் மாத வருமானம், ஆட்சிப்பணியாளர்களை விட அதிகமாக இருக்கும். எனவே, சேவை உள்ளம் கொண்டவர்களே ஆட்சிப்பணியில் இருப்பார்கள். பணம் பார்க்க வருகிறவர்கள், தெருக்களைத் துப்புரவு செய்து கொண்டிருப்பார்கள். சாதி எங்கே போயிற்று? என்பதைத் தேட வேண்டியதிருந்திருக்கும்.

மதச்சண்டைகள் இருந்திருக்காது. எவர் தலைதூக்கினாலும், அடுத்த நிமிடம் அவர் சிறையில் இருந்திருப்பார். பிற மதங்களை மக்கள் மதிக்கும் மனநிலையில் இருப்பார்கள். பிற மதங்களை உயர்வாகப் பார்க்கும் தெளிவான பார்வையைப் பெற்றிருப்பார்கள்.  அவரை எந்த நேரமும் உதவிக்குத் தொடர்பு கொள்ளலாம் என்கிற நிலை வருகிறபோது, மற்றவர்களின் உதவியை நாட, மக்களுக்குத் தேவையிருக்காது. ஆதிக்கம் எழுகிறபோது, அரசே அதிகாரத்தைக் கொண்டு அடக்கிவிடும். எனவே, போராட்டங்களுக்கான தேவையிருக்காது.

ஒவ்வொருநாளும் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, மக்கள் அரைமணி நேரம் அவரவர் நம்பிக்கையின்படி, இறைவனிடம் வேண்டுதல் செய்து கொண்டிருப்பார்கள். 

சாதிக்கட்சிகளின் தலைவர்கள் விவசாயம் செய்து கொண்டிருந்திருப்பார்கள். மதச்சாயங்கள் பூசுகிறவர்கள் வீடுகளில் தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை நோய்த்தொற்றுத் தடுப்புக்காலத்தில், உதவும் கரங்களாகப் பயன்படுத்தியிருப்பார். ‘மக்கள் பாதை’ போன்ற தன்னார்வ இயக்கங்கள், பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும். பத்து வீடுகளுக்கு ஒரு நபர் பொறுப்பாக இருந்திருப்பார். அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்திற்கும் அவர் வழியாக கொண்டு செல்வதற்கு வழிவகுத்திருப்பார்.

ஊர்கள் தோறும் ‘108 அவசர வாகனத்தின் ஒலி’ தவிர வேறு ஒரு சத்தமும் வந்திருக்காது. அந்த ஒலி வருகிறபோதெல்லாம், மக்கள் அவர்களுக்காக வேண்டிக் கொண்டிருந்திருப்பார்கள்.

தினமும் மக்களுக்குத் தொலைக்காட்சி வழியாக உரையாற்றியிருப்பார். நடவடிக்கைகள் பற்றி விளக்கியிருப்பார். மக்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் என்று,  நம்பிக்கையளித்திருப்பார்.

திருடர் பயம் இருந்திருக்காது. ஏனென்றால், அத்தனை பேரின் தேவைகளும் அரசால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

மின்சாரம் கட்டணம் கட்டத் தேவையிருந்திருக்காது. அரசு ரத்து செய்திருக்கும். மாதத்தவணைகள், வீட்டு வாடகை, வட்டி எதுவும் கட்ட வேண்டிய தேவையிருந்திருக்காது.

‘டாஸ்மாக்’ என்கிற அரசு நிறுவனமே இல்லாதபோது, அதைப்பற்றி நாம் பேசத்தேவையிருந்திருக்காது. காவல்துறை அத்துமீறினால், தனி மனிதனே ஆதாரங்களுடன் புகார் கொடுக்கிறபோது, அடுத்த நிமிடம் அவர்கள் பதவியிழப்புப் பெற்றிருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் குடும்பத்தில் ஒரு தலைமுறைக்கு அரசு வேலையை யாரும் பெறவே முடியாது.

ஒட்டுமொத்த காவல்துறையும் மக்களின் நண்பனாக மாற்றப்பட்டிருக்கும். மாறவில்லையென்றால், வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டிருப்பார்கள். இடங்களுக்கு அல்ல.

‘இறப்பு’கண்டிப்பாக இருந்திருக்கும், ஆனால், தேவையற்ற இறப்புக்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். அறிவியல் வளர்ச்சியின் துணைகொண்டு, கடைசி எல்லை வரை மருத்துவர்கள் போராடியிருப்பார்கள். மனித சக்தியால் தவிர்க்க முடியாத இறப்புக்களே இறப்புக்களாக இருந்திருக்கும். சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்திருக்கும். ஆனால், அந்த இறப்புக்களும், அமைச்சர்களாகவோ, சட்டமன்ற உறுப்பினர்களாகவோ இருந்திருப்பார்கள்.

கொரோனா நோய்த்தொற்று தடுக்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளைப் போல நாமும் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பியிருப்போம். தான் மட்டுமே எல்லாவற்றையும் செய்தேன், தன்னுடைய கட்சி மட்டுமே இவ்வளவு செய்தது என்று, வெற்று விளம்பரம் தேடிக்கொண்டிருக்கமாட்டார். தன்னுடைய வழக்கமான அலுவல் பணிகளுக்குத் திரும்பியிருப்பார்.

கற்பனை: 3 மற்றவர்களுக்குத் தமிழகம் எப்படி இருந்திருக்கும்?

கேரளா, தென் கொரியா போல, உலக அளவில் தமிழகம், நோய்த்தடுப்பு மேலாண்மையில், கவனம் பெற்றிருக்கும். உலக ஊடகங்கள், தமிழகத்தின் புகழை, அகில உலகிற்கும் கொண்டு சென்றிருக்கும்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள், ‘தயவு செய்து’ எங்களை தமிழ்நாட்டை விட்டு, வட நாட்டிற்கு அனுப்பிவிடாதீர்கள்’ என்று அதிகாரிகளிடம் கெஞ்சியிருப்பார்கள்.

‘டிரம்பை’ அந்த நாட்டு ஊடகங்கள் ‘தமிழகத்தோடு’ ஒப்பிட்டு, இன்னும் கிழித்துத் தொங்கவிட்டிருப்பார்கள்.

‘நமோ’ மக்களிடம் தொலைக்காட்சிகளில் பேசுவதையேத் தவிர்த்திருப்பார்.

கொரோனா பரவலுக்கு, அரசு காரணமா? மக்களின் தவறா? என்று ஊடகங்கள் விவாதங்கள் நடத்தத் தேவையே இருந்திருக்காது. மாறாக, தேசிய விவாதங்களில், தமிழகத்தால் செய்ய முடியுமென்றால், ஏன் மற்ற மாநிலங்களில் செயல்படுத்த முடியவில்லை? என்கிற கேள்விகள் அதிகரித்திருக்கும்.

வெறும் அறிக்கைகளைக் கொண்டு பீலா விடுவது இருந்திருக்காது. மருத்துவச் சோதனைக் கருவிகள் வாங்குவதில் ஊழல் பற்றிய குற்றச்சாட்டு எழுந்திருக்காது. கொரோனா நோய்த்தடுப்புக்கு ‘உப்பு, புளி, மிளகு’ போட்டுக் குடிக்கச் சொல்லும் ‘மங்குனி’ தந்திரங்கள், தேவைப்பட்டிருக்காது.

தமிழகத்தில் அவருடைய ஆட்சியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கிற ஆராய்ச்சிக்கூடங்களில், மருத்துவ ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும், தமிழ் நாட்டின் ‘இளைய தலைமுறை’ மருத்துவர்கள் நோய்த்தொற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது.

இளைய தலைமுறைப் பொறியாளர்கள்,தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, கருவிகளைக் கண்டுபிடித்து, தூய்மைப்பணியாளர்களால் இந்த நெருக்கடி காலங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

தேர்வுக்கான தேவையே இருந்திருக்காது. அறிவு வளர்ச்சிக்குத்தான் கல்வி என்பதால், இம்மண்ணில் பிறக்கிற அனைவருக்குமே ‘வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், அதனைப் பற்றிய கேள்வியே எழுந்திருக்காது.

ஆனால்,

ஒரே ஒரு குடும்பம் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கும்...

வேறு யார்? அவருடைய குடும்பம் தான்...

அவருடைய மனைவி 5,000 ரூபாய்க்குள் கொரோனா காலத்தில் குடும்பம் நடத்த வேண்டியிருந்திருக்கும்.

மக்களுக்குக் கொடுக்கப்படும் காய்கறிகளே அவருடைய வீட்டிற்கும் வந்திருக்கும்.

அவர் வீட்டுப் பக்கம் மூன்று மாதத்திற்கு வந்திருக்கவும் மாட்டார்.

அலைபேசி அடித்தாலும் எடுத்திருக்கவும் மாட்டார்.

கற்பனை: 4 கொரோனா காலம் முடிந்தவுடன் என்ன செய்திருப்பார்?

இனி இப்படி ஒரு காலம் வராது என்பதற்கு என்ன நிச்சயம்? என்று யோசித்திருப்பார்.

பேரிடர் காலங்களுக்கென்று, ஒவ்வொருவரின் கணக்கிலும், அவர்களின் உழைப்பிலிருந்து சிறிய தொகையை,அரசே சோ்த்து வைக்கும் திட்டமியற்றியிருப்பார்.

எல்லாப் பள்ளிகளிலும், புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அவரவர் வீடுகளிலுமிருந்து படிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தியிருப்பார். அவ்வப்போது அதனைச் செயல்படுத்தி, பயிற்சியளித்திருப்பார்.

வீடுகளிலிருந்து பணியாற்றக்கூடிய வகையில், வாய்ப்பு இருந்தால், பணியாற்ற தொழில் நிறுவனங்களுக்கு முயற்சிகள் எடுக்க ஊக்கப்படுத்தியிருப்பார்.

கொரோனா காலத்தில் சேவையாற்றிய அத்தனை பேருக்கும், பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தியிருப்பார்.

- ரோஜர்

 

Add new comment

3 + 11 =