உரசிப்பார்க்கும் நிகழ்வுகள் 05.06.2020

1. எல் சாவதோர் நாட்டு ஆயர்கள் பாராட்டு: கொரோனா தொற்றுநோய் காலத்தில் இறைமக்கள் அனைவரும் தங்களின் அருகாமையை வெளிப்படுத்தும் வகையில் நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர் எல் சால்வதோர் நாட்டு கத்தோலிக்க ஆயர்கள். “மனித வாழ்வை விட வேறு எதுவும் முக்கியமல்ல” என்பது புனித ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் போதனையின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்திருக்கிறது  என்பதை தங்கள் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள் மனித வாழ்வை ஆதரிப்பது திருஅவையின் முக்கிய பணி என்றும் கூறியுள்ளனர். நோயாளிகளை பராமரிக்கும் மருத்துவ மற்றும் நலவாழ்வு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள எல் சால்வதோர் நாட்டு ஆயர்கள், கடும் வறுமையில் வாழ்வோர், வயது முதிர்ந்தோர் மற்றும் சிறார் மீது அக்கறை காட்டும் அனைவரையும் பாராட்டியுள்ளனர். 

2. இலவசமாக பார்வையிடும் அனுமதி:
கொரோனா தொற்றுநோய் நெருக்கடி காலத்தின்போது மக்களுக்காக சேவை புரிந்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் ஏனைய தன்னார்வ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அருங்காட்சியகம், அப்போஸ்தலிக்க அரண்மனை, திருத்தந்தையர்களின் கோடை  விடுமுறை இல்லம் ஆகியவை இம்மாதம் 1 ஆம் தேதி முதல்  திறக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் 8  முதல் 13 வரை இலவசமாக பார்வையிடும் அனுமதியை அவர்களுக்கு வழங்கியுள்ளது திருபீடம்.

3. திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்த ஆயர் கோமஸ்:
ஜூன் மாதம் மூன்றாம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னை தொலைபேசியில் அழைத்து ஆறுதலும் ஊக்கமும் தரும் வகையில் பேசினார் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் தலைவர் பேராயர் ஜோஸ் கோமஸ் அவர்கள் கூறினார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது அந்நாட்டு ஆயர்கள், மேய்ப்பர்களுக்கு உரிய அக்கறையுடன் செயல்பட்டு வருவதற்கும் அறிக்கைகள் வெளியிட்டு வருவதற்கும் திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்தார் என்றும் குறிப்பாக புனித பவுல் மற்றும் மினியாப்பொலிஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் பெர்னார்ட் அந்தோணி ஹெப்டா அவர்களுடன் திருத்தந்தை தன் அருகாமையை வெளிப்படுத்தினார் என்றும் பேராயர் கோமஸ் அவர்கள் ஏனைய ஆயர்களிடம் தொலைபேசி வழியே கூறினார். அமெரிக்க ஐக்கிய நாடு நெருக்கடியான ஒரு சூழலில் இருந்து வரும் வேளையில் தன் மறைக்கல்வி உரையில் தங்கள் நாட்டை குறித்து அக்கறையையும் இறை வேண்டுதல்களையும் வெளியிட்டதற்காக ஆயர்கள் சார்பில் பேராயர் கோமஸ் அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.

4. சவக்கிடங்கில் இருக்கும் தந்தையின் உடல்:
கேரள மாநிலத்தில், மாலங்கரா ஆர்தடாக்ஸ் சபையின் 77 வயதான பாதிரியார் தந்தை கே . ஜி. வர்கீஸ், ஜூன் 2 அன்று காலமானார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது கீழே  விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டார் என்பதும் தெரியவந்தது. இதனால் அவர் ஜூன் இரண்டாம் தேதி காலமானார். இவரது உடலை அடக்கம் செய்வதில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கொரோனா நோயினால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அரசு பல வழிமுறைகளை கூறியுள்ள நிலையில், இவரது பங்கு தலத்தில் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், பக்கத்துக்கு கிராமத்தில் அடக்கம் செய்யலாம் என்று யோசிக்கும் வேளையில், இதனால் கொரோனா நோய் தங்களை தாக்கிவிடும் என்ற அச்சத்தில் அந்த ஊர் மக்கள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், தந்தையின் உடல், சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக பிற தந்தையர்கள் தெரிவித்துள்ளனர்.

5. வாட்டி எடுக்கும் அமண்டா புயல்:
கொரோனா தொற்றுநோயின் பரவுதலை அடுத்து, மத்திய அமெரிக்காவின் ஏழ்மையான 3 நாடுகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜூன் 3 தேதி நிலவரப்படி, அமண்டா புயலால் குறைந்தது 28 பேர் இறந்ததாகவும், பலர் காணாமல் போய்யுள்ளதாகவும், ஆறுகள் நிரம்பி உள்ளதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நோயின் முடக்கத்தாலும், மழையினால் சாலைகள் பழுதாகியுள்ளதாலும், எந்த ஒரு மீட்பு பணிகளும் செய்முடியாத நிலை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

6. இது இந்திய கலாச்சாரம் இல்லை:
கேரளாவில் கர்பிணி யானை வெடிவைத்து கொல்லப்பட்ட நிகழ்வுக்கு பெரும் எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலு பெற்று வருகின்றன. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "கேரளாவில் மலபுரத்தில் வெடி வைத்து யானைக்கொல்லப்பட்டதை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கவனித்துள்ளது. இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கேரளாவில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றவாளிகள் விரைவில் கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். யானைக்கு உணவில் பட்டாசு வைத்து வெடித்து கொள்வது போன்று செய்வது இந்திய கலாச்சாரம் இல்லை" என பதிவிட்டிள்ளார்.

7. பூமியை நெருங்கும் விண்கற்கள்:
3 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் அதாவது, சுமார் 62 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் கடந்து  செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்று மற்றும் நாளை மட்டும் சுமார் 5 விண்கற்கள் பூமியை கடந்து செல்ல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

8. கனடாவில் பெண்ணுக்கு நடந்த கொடுமை:
கனடாவில் மதுபான விடுதி நடத்தி வரும் ரொரண்ரோவை சேர்ந்த கவின் மேக்மில்லன் மற்றும் என்சொ தேஜஸுஸ் கர்ரஸ்கோ ஆகிய இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் ஒருவரை பலவந்தப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்த வழக்கின்போது கூறிய நீதிபதி, "கவின் மற்றும் என்சொ ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கி எரியும் பொருளாகவே பார்த்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்துகளையும் கொடுத்து சீரழித்துள்ளனர்" என கூறியுள்ளார். 

9.  பிரான்ஸ் ஜனாதிபதி கடிதம்:
கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கிடைப்பதில் இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். மேலும், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில், அம்பான் புயலால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பான விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.   

10. அவசர நிலை அக்டோபர் வரை நீடிக்கலாம்:
பிரான்சில் ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை அவசரநிலை நீடிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது இது அக்டோபர் மாதம் வரை நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.  அப்படி அவசர நிலை நீட்டிக்கப்படும் பட்சத்தில், மக்கள் நலனுக்காக முடிவுகளை தொடர்ந்து எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

11. ஜாமீன் தொகை நிர்ணயிப்பு:
கறுப்பினத்தவரான ஜார்ஜ் கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் அதிகாரி டெரெக் சாவினுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று குற்றவாளியை விட, குற்றத்திற்கு துணை போனவர்களுக்கு அல்லது குற்றத்தை கண்டும் காணாமல் விட்டவர்களுக்கு அதிக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பார்கள். அவ்வகையில், டெரெக், ஜார்ஜ் இன் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தும்போது அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த மற்ற 3  போலீசாருக்கும் 40 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. இதுமட்டுமின்றி, இவர்களின் ஜாமீன் தொகை 1 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

12. கட்டுபாட்டிற்கான அபராதம் ரத்து:
சுவிட்சர்லாந்தில், கொரோனா பரவலை தடுக்க இரண்டு மீட்டர் இடைவெளி காப்பது அவசியம் என்று கூறியிருந்தனர். மீறினால் 100 பிராங்குகள் அபராதம் என்றும் கூறியிருந்தனர். கொரோனா நோயின் வீரியம் குறைந்து வருவதால்,அந்த அபராதம் விதித்தல் இப்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.  எனினும், பொது இடங்களில் 30  பேருக்கு மேல் கூடுவது ஆகிய விஷயங்களுக்கு இன்னும் அபராதம் விதிக்கப்படத்தான் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

13. 20000 டன் டீசல் கசிந்தது:
ரஷ்யாவில், சைபீரிய நகரில், ஒரு மின் நிலையத்தில் எரிபொருள் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் ஆர்க்டிக் வட்டத்திற்குள் ஒரு ஆற்றில் 20000 டன் டீசல் எண்ணெய் கசிந்ததை அடுத்து, அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். ஆற்றில் கசிந்துள்ள அந்த 20000 டன் டீசல் எண்ணெயானது தற்போது 350 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரவியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு புடின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மின் நிலையத்தின் மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14. 11 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்:
தற்பொழுது உலகளவில் மோட்டார் வாகனத் துறையில் தலைசிறந்த 11 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட தனிப்பட்ட முறையில் தமிழக  முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளவதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிப்பட்டுள்ளது.

15. செம்மொழி நிறுவனத்திற்கு முதல் இயக்குநர் நியமனம்:
செம்மொழி தமிழ் குறித்து ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக சென்னையில் 2008-ம் ஆண்டு மே 19-ம் தேதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் முதலமைச்சர்தான் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் ஆவார். இது கவுரவப் பதவியாகும். இந்த நிலையில் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர். சந்திரசேகரனை நியமித்து மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார்.

16. தமிழக அரசு  கோரிக்கை:
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட பின் ரயில்கள் இயங்க ஆரம்பித்த நிலையில், தமிழகத்திற்கு மேலும்  3  ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கோரியுள்ளது. தமிழகத்திற்கு, திருச்சி - செங்கல்பட்டு இடையே அரியலூர், விழுப்புரம் மற்றும் தஞ்சை, மாயவரம், விழுப்புரம் வழியாகவும் அரக்கோணம் - கோவை இடையே காட்பாடி, சேலம், வழியாக இன்டெர்சிட்டி ரயில் இயக்கவும், தமிழக அரசு  கோரிக்கை விடுத்துள்ளது.

17. போராட்டம் வாபஸ்:
தமிழகத்தில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் பிரிஸில்லா உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்கம் முன்வைத்தது. இது தொடர்பாக இன்று கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்திருந்தது இந்நிலையில், தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

18.  தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை:
கொரோனா நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனினும், அந்த சிகிச்சைகளுக்கு அரசு வழங்க வேண்டிய தொகுப்பு கட்டணங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, ஒரு சில நிபந்தனைகளுடன் கூடிய தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

Add new comment

16 + 1 =