இராவுணவும் கொரோனாவும்

இன்று இயேசுவின் இறுதி இரவுணவு விழா. வருட வருடமாக நாம் கொண்டாடும் விழா போன்று இல்லை. கொரோனாவின் தாக்கத்தால் நாம் முடங்கிக்கிடக்கின்றோம். இந்த வருடம் வித்யாசமாக இந்த விழாவைக் கொண்டாடுகிறோம். எனவே அதன் அர்த்தத்தையும் கொஞ்சம் வித்யாசமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இயேசுவின் இராவுணவில் முக்கியமான குறியீடு உணவு. இந்த விழாவை இயேசு தம் சீடரோடு பகிர்ந்துகொள்கிறார். இன்று கொரோனா தாக்கத்தில் உணவு சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. இந்த குறியீட்டின் அர்த்தம் நமக்கு சக்தியைக் கொடுக்கும், வாழ்வு தரும்.

அவர் ஏன் உணவைக் குறியீடாக விட்டுவிட்டுச் செல்லவேண்டும். அவர் வாழ்ந்த செமத்திய கலாச்சாரத்தில் எத்தனையோ குறியீடுகள் இருக்கின்றன. ஒளி, நீர், பாறை... ஆண்டவரே என் பாறை திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து அவர்கள் பாடுகின்றபோதெல்லாம் அவர் வலிமையானவர் என்றா நினைத்திருப்பார்கள்? இல்லை. பாறை என்பது உயிர் காப்பது. பாலஸ்தீன மக்கள் பயணத்தில் இருப்பவர்கள். அவர்கள் பயணிக்கின்றபோது புழுதிப்புயல் வருகின்றதை ஒட்டகம் தன்னுடைய மூக்கினை அசைத்துச் சொல்லிவிடும். உடனே அவர்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு மைல் தொலைவிலும் அவர்கள் நட்டியிருக்கும் பாறைகளுக்கு பின்னே சென்று அவற்றை அணைத்துக்கொள்வார்கள். அவர்கள் காப்பாற்றப்படுவார்கள். எனவே அவர்கள் பாடுகின்றபோது அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். ஆண்டவரே என் பாறை.

ஆனால் இயேசு அன்பின் சின்னமாக அப்பத்தை விட்டுச்செல்கிறார். ஏன் அப்பம். அப்பம் தன்னை இழந்து கொடுக்கிறது. எவ்வாறெனில் கோதுமை உடைக்கப்பட்டு,  அரைக்கப்பட்டு, பிசையப்பட்டு, வாட்டப்பட்டு பின் அப்பமாக மாறி, நமக்கு உணவாக, சக்தியாக மாறுகின்றது. இந்த அப்பமாகிய உணவே உங்களுக்கு சக்தியைத் தருகின்றது என்றால், நானே உங்களுக்கு உணவாக வந்தால் எவ்வளவு சக்தியை நீங்கள் பெறலாம். உணவு எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. அது ஆரோக்கியமாக இருக்கவேண்டும். இயேசு என்ற உணவு ஆரோக்கியமான உணவு நமக்கு மாபெரும் சக்தியைத் தருகின்றது.

இன்று நாம் இயற்கையாக இல்லை. நாம் செயற்கைக்கு சென்றுவிட்டோம். இயற்கை கொடுக்கும். கோதுமை மணி மண்ணில் மடிந்து பலன் அளிக்கும். மாமரம் காய்கள் காய்த்து கனிகள் கொடுக்கும். தனக்காக அல்ல, மனிதர்களுக்காகக் கொடுக்கும். யாருக்கும் கொடுக்கும் எந்த வேறுபாடுமின்றிக் கொடுக்கும். அது கொடுத்துக்கொண்டே இருக்கும்.

மனித வாழ்வு என்பது கொடுப்பது. தனக்காக வாழ்வது மனித வாழ்க்கையல்ல. பிறர் வாழ்வதற்காக நாம் சாகின்றபோதுதான் மகிழ்ச்சியும் நிறைவும் உண்டு. இதை சொல்வதற்கு இயேசு இரவுணவில் அமர்ந்து நமக்கு இந்த குறியீட்டைத் தருகிறார். நாம் மனிதராக வாழவேண்டும். நம்முடைய வாழ்க்கை செயற்கையாக இருக்கிறது. இன்று இயற்கையிலுள்ள நம் நிறமாகிய நாம் கருப்பு என்பதைச் சொல்வதற்கு தயங்குகிறோம். பாஸ்ட் புட் வாங்கி உண்கிறோம். இயற்கையை விட்டுச் சென்றுவிட்டோம். நாம் அவசர அவசரமாக ஓடித்திரிந்தோம். நம்முடைய கார்கள் பொருள்களுக்கு மதிப்பில்லை. அத்தியவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறோம். இன்று இயற்கையோடு இணைந்து குடும்பத்தில் இருக்கின்றோம்.

நாம் பாதங்களைக் கழுவமுடியாது. ஆனால் கைகளைக் கழுவுகிறோம். இது நம்முடைய வாழ்வை தூய்மைப்படுத்த வேண்டும். கைகழுவும் சடங்காக மாறவேண்டும். நம்முடைய இலாபநோக்கமான வாழ்வை மாற்றவேண்டும். ஒவ்வொரு குருவும் தொழில்நுட்பத்தைக் கற்று அதன் வழியாக மக்களைச் சென்றடையவேண்டும். 

இன்று கூலித்தொழிலாளிகள், சுத்தம் செய்பவர்கள், மருத்துவர்கள், பாதுகாபபுக் கொடுப்பவர்கள் அர்த்தமுள்ள இரவுணவில் பங்குகொள்கிறார்கள். தங்களைக் கொடுப்பதன் வழியாக இயற்கையான வாழ்வு, மனிதவாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்தவுணவு அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஒரு அப்பத்தைப் போல நாமும் நம்மைப் பிட்டுக் கொடுத்தால், இந்த இரவின் அருளை நாம் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு நம்முடைய வாழ்வை மாற்றுவோம். வாழ்வின் போக்கினையும் மாற்றுவோம்.

தொடர்பில் கொடுக்கப்பட்ட காணொளிக்காட்சியின் சுருக்கம்

Add new comment

2 + 3 =