Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
குருத்து ஞாயிறு 2020
குருத்து ஞாயிறு, இயேசுவின் குருதியின் ஞாயிறு. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை - எசாயா 50:6. இயேசுவின் பாடுகளின் துவக்கம் தான் இந்த குருத்து ஞாயிறு. நமக்காக பாடுகள், வேதனைகள், துன்பங்கள்பட, ஏன் சாவதற்கு இயேசு தயாராகிறார் என்பதை நினைவுபடுத்துகிறது இந்த நாள். திருவிழாவிற்கு பலியிட கொல்லப்படப்போகும் ஆடு எவ்வாறு மாலை மரியாதையுடன் மந்திரிக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறதோ, அப்படி மேள தாளத்துடன், ஓசான்னா பாடி அழைத்துச் செல்லப்படுகிறார் இயேசு.
எருசலேமில் பாடுகள் உண்டு என்பது அவருக்குத் தெரியும். கொன்றுவிடுவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். இன்று குருத்தோலை ஏந்தி ஓசான்னா பாடுபவர்கள் ஓரிரு நாட்களில் இவனை சிலுவையில் அறையும் என்று கத்துவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தும் துணிந்து செல்கிறார். இயேசுவின் துணிச்சலை பார்த்தீர்களா? அவரின் பாடுகள் நம்மீது அவர்கொண்ட பாசத்தின் வெளிப்பாடு. அவரின் பாடுகள் அவர்மீது திணிக்கபட்டது அல்ல. அவராக விரும்பி ஏற்றுக்கொண்டது. நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார் (யோவான் 10:11) என்று சொல்லி மனமுவந்து பாடுகளை, சாவைச் சந்தித்தவர் இயேசு.
தான் கொண்ட இலட்சியத்திற்காக, தான் மண்ணுக்கு வந்த நோக்கத்திற்காக, துன்பங்களைக் கண்டு பின்வாங்கவில்லை. ஓடி ஒளிந்து கொள்ளவில்லை எதிர்த்துப் பேசவில்லை, அழுது புலம்பவில்லை. இலட்சியத்தை நிறைவேற்ற, நாம் மீட்படைந்து விண்ணகம் சேர. யாராவது பாடுகள் படுவதற்கு, துன்பப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு ஆரவாரத்தோடு, மகிழ்ச்சியோடு பவனி செல்வார்களா? ஆனால் இயேசு சென்றாரே, அந்த துணிச்சல் நம்மிடம் இருக்கிறதா?
துன்ப துயரங்கள், பிரச்சனைகள் கண்டால் ஓடி ஒளிந்து கொள்கிறோமே. இயேசுவை விட்டு தூரம் போகிறோமே. துன்பங்களைத் தாங்க தூயவர் இயேசு துணிச்சலுடன் பயணிக்கிறார். அவருடன் நடக்க சிலுவையை சுமக்க நாம் தயாரா? சிந்திப்போம்.
ஜெபம்: அன்பு ஆண்டவரே, உம்மை துதிக்கிறோம். உம்மை அன்பு செய்கிறோம். உம்மை போன்று உண்மைக்கு சாட்சி பகர்ந்து வாழவும், எங்கள் குடும்பத்தில், வேலை ஸ்தலங்களில், நட்பு வட்டாரங்களில், இறை இல்லங்களில், பொது இடங்களில், உம்மை பிரதிபலித்து எங்கள் செயல்கள் மூலம் உமது நற்செய்தியை அறிவிக்க அருள்தாரும். ஆமென்.
Add new comment