குறைவுகளை நிறைவாக்காமல் விடுவாரா?

இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர் - யோவான் 2:11. இயேசு செய்த புதுமைகளுக்கு அளவேயில்லை.  

அவருடைய முதல் புதுமையை  திருமண வீட்டில் செய்கிறார். அந்த திருமண வீட்டுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் இரசம் தீர்ந்தபோது அன்னை மரியை தவிர வேறு யாரும் வந்து இயேசுகிட்ட இரசம் தீர்ந்தது பற்றி சொல்லவில்லை. ஆனாலும் அவர் அங்கு புதுமை செய்தார். ஏனெனில் முதாவது தன் தாயின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டார். 

அடுத்தது இயேசு இருக்கும் இடத்தில் குறைவு இருக்காது. அவர் நிறைவாக்குகிற இறைவன். அடுத்தது அவர்  குடும்ப ஆசீர்வாதத்தை, ஒற்றுமையை விரும்புகிறவர். இரச குறைவினால் சண்டை உருவாவதை அவர் விரும்பவில்லை. ஆகவே புதுமணத் தம்பதிகள் ஆரம்பித்த புது வாழ்க்கையிலுள்ள குறைவை நிறைவாக்கும்படி அவர் முதல் அற்புதத்தை அங்கே செய்தார்.

அவர் நிச்சயமாகவே நம் குடும்பங்களிலும் அற்புதத்தைச் செய்வார். நாம் அவரை நம் வீட்டுக்கு அழைப்போம். அவர் நம்மோடு இருந்தால், நாம் கேட்காமலே  நம்முடைய அனைத்து குறைகளையும் நிறைவாக்குவார். 

செபம்: ஆண்டவரே எங்களோடு வந்து தங்கும். எங்கள் வேண்டுதல்களை கேட்டருளும். எங்கள் குறைவுகளை நிறைவாக்கும். அம்மா மரியே, அடைக்கல தாயே, எங்களுக்காக உம் திருமகனிடம் பரிந்து பேசும். ஆமென்.

Add new comment

6 + 0 =