நானும் திருவெளிப்பாடும்

இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்! - திருவெளிப்பாடு 1:7. மேகக்கூட்டத்தின் மேலே ஆண்டவர் வருகை எப்படியிருக்கும்? என்று கற்பனை பண்ணிப்பார்ப்போம். இயேசு  வானத்திலிருந்து இறங்கி வருவார்.

அவர் வரும் போது எல்லாக் கண்களும் காணும்படி அது நிகழும். அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் அவருக்கு எதிர் கொண்டுபோக, மேகங்கள் மேல் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுவோம். அந்த வருகை மகிமையான வருகையாய் இருக்கும். அந்த மகிமையின் காட்சியைக் காண நாம் தயாரா? அல்லது புலம்புகிறவர்களோடே கூட இருந்து புலம்புவோமா?

இரண்டாம் வருகை திடீரெனவும் எதிர்பாராத நேரத்தில் நிகழுவதாக இருப்பதால், கடைசி நிமிடம் மனந்திரும்புவதற்க்கோ, வாக்குவாதம் செய்வதற்கோ நேரமிருக்காது. இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.எனவே நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும். நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.

அதாவது, நாம் வாழும்போது தேர்ந்தெடுக்கும் செயல்கள் தான் விண்ணக வாழ்வுக்கு  நம்மை கொண்டு போய் சேர்க்கும். அந்த வருகையில்  எல்லோரும் அதில் சேர ஆயத்தமாக வேண்டும். ஆகவே, இன்றே நமது பாவநிலையை உணர்ந்து, மனந்திரும்பி, இயேசுவை முழுமையாக அன்பு செய்வோம். 

செபம்: ஆண்டவரே, இயேசுவே, உம்மை  நம்புகிறவர்களாக,  உம் வார்த்தைகளை பின்பற்றி,  எங்களுடைய விண்ணக வாழ்வுக்கு ஆயத்தமானவர்களாக, தூய வாழ்வு வாழ துணைசெய்யும், அருள்தாரும். ஆமென்.

Add new comment

4 + 8 =