வெற்றிதரும் உபவாசம்

இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து ‘இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ’ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது”என்றார் - மத்தேயு 17:20-21. நாம் அலைகையின் வல்லமையை முறித்து கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டவர்கள்.  

நாம் சாத்தானை  மேற்கொள்ள வேண்டுமென்றால், செபமும், நோன்பும் மிகவும் அவசியம். இயேசு அதை சொன்னது மட்டுமல்ல, செயலிலும் காட்டினார். அவர் தன் பணிவாழ்வை தொடங்கும் முன்பு நாற்பது நாட்கள் இரவும் பகலும் நோன்பிருந்து வல்லமையை பெற்றுக் கொண்டார். எஸ்தருக்கு விரோதமாக ஆமான் எழும்பி யூதக் குலத்தை அழிக்க திட்டமிட்டிருந்தான். இதை எதிர்த்து எஸ்தர் இரவும் பகலும் மூன்று நாட்கள் உபவாசித்து செபித்தார். அதன் விளைவாக ஆமானின் சதிகள் முறியடிக்கப்பட்டு யூதர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். 

தானியேல் எப்பொழுதும் நோன்பிருந்து செபிக்கிறவராய் இருந்தார். அவரை சிங்கக்கெபியில் போட்டபோது அந்த சிங்கத்தின் வாய்கள் கட்டப்பட்டு உயிரோடு வெளியே வந்தார். நெகேமியா நோன்பிருந்து செபித்தபோது ஆண்டவருடைய கரங்கள் அவரோடு இருந்து இடிக்கப்பட்ட எருசலேம் வாசல்கள் மீண்டும் கட்டப்பட்டன.  

அந்தியோக்கிய திருச்சபையில் பர்னபா, சிமியோன், லூக்கியு, மனாயீன், சவுல் ஆகியோர் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்” என்று கூறினார். அவர்கள் நோன்பிலிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

செபம்: ஆண்டவரே, உம்மை இன்னும் அதிகமாக பற்றி கொள்ளும் மனதை எங்களுக்கு தாரும். இன்னும் அதிகமாக உம் பாதம் அமர்ந்து உம் வல்லமையை பெற்றுக்கொண்டு அலகையை மேற்கொள்ள வரம் தாரும். தூய ஆவியை எங்கள் மேல் பொழிந்தருளும்.  எங்களோடு தங்கி இரும்.  ஆமென்.

Add new comment

8 + 0 =