அருளின் மாறுபட்ட வெளிப்பாடு

மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்; எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான் - 2 அரசர்கள் 13:20. ஆண்டவருக்கு உண்மையாக வாழ்ந்து இறந்துபோன புனிதர்களின் எலும்புத் துண்டுகள், அவர்கள் பயன்படுத்திய ஆடைகளின் துண்டுகள் இவற்றை புனித பண்டமாக கத்தோலிக்கர் நாம் வைத்திருப்பது வழக்கம். அந்த புனித பண்டங்கள் இருக்கும் இடங்களில் நிறைய அற்புதங்களும் நடந்திருப்பது உண்மை. அது பற்றி விவிலிய நிகழுவுகளோடு விளக்கம்.

இறைவாக்கினர் எலிசா இறந்தார். அவரை அடக்கம் செய்தனர். அப்பொழுது ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும் மோவாபியக் கொள்ளைக் கூட்டத்தினர் வந்து நாட்டைத் தாக்குவது வழக்கம். அந்த சமயத்தில் ஒருசமயம் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினர் வருவதை பார்த்ததும் மக்கள் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடிவிட்டனர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர்பெற்று எழுந்து நின்றான்.

திருத்தொண்டர் பவுல் உடலில் பட்ட கைக்குட்டைகளையும் துண்டுகளையும் கொண்டு வந்து நோயுற்றோர் மீது வைத்ததும் பிணிகள் அவர்களை விட்டு நீங்கியது; பொல்லாத ஆவிகளும் வெளியேறியது. எலிசா கூடவே இருந்த எலியா அவரிடம் உம்மை போன்று இருமடங்கு ஆற்றல் எனக்கு வேண்டும் என்று கேட்கிறார். எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார். அவர் எலியாவிடமிருந்து விழுந்த போர்வையை எடுத்துக் கொண்டு, திரும்பிச் சென்று யோர்தான் கரையில் நின்றார். பின்பு அவர், “எலியாவின் கடவுளாகிய ஆண்டவர் எங்கே இருக்கிறார்?” என்று சொல்லிக்கொண்டே எலியாவிடமிருந்து விழுந்த போர்வையினால் தண்ணீரை அடித்தார். அப்படி அடித்தவுடன் தண்ணீர் இரண்டாகப் பிரிய, எலிசா அக்கரைக்குச் சென்றார்.

எனவே புனிதர்களின் புனித பண்டங்கள் மூலமாக நம்மில் பலர் குணமடைகிறோம். பல அற்புதங்களும் நடக்கிறது. அவற்றை நம்பிக்கையோடு வைத்திருப்பது தவறு இல்லை.  ஆனால் அவற்றின் மூலமாக நமக்கு நன்மை நடக்க வேண்டுமானால் நாம் இறைவன் மீது அன்புள்ளவர்களாக தளராத நம்பிக்கையோடு வாழ வேண்டும். 

செபம்: ஆண்டவரே, உம்மையே நேசிக்கிறேன். உம்மையே ஆராதிக்கிறேன். என் பெயர் கொண்ட புனிதர், எனக்கு காவலாக இருக்கும் தூதர், நான் வணக்கம் செலுத்தும் அன்னை மரியாள், சகல புனிதர்கள் புனிதைகள் வாயிலாக நாங்கள் வேண்டும் மன்றாட்டுக்கள் எங்களுக்கு கிடைக்க செய்யும். இவர்களின் துணையோடு விண்ணக வாழ்வுக்கு எங்களை தகுதியுள்ளவர்கள் ஆக்க வரம்தாரும். ஆமென்.

Add new comment

13 + 6 =