இது மகிழ்ச்சிக்கு அடித்தளம்

நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதியவைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார் - எபிரேயர் 12:2. நாம் நமது வாழ்க்கையில், உண்மை, நேர்மை என வாழும் போது பல நேரங்களில் துன்பங்கள் அவமானங்கள் தோல்விகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.

என்னடா வாழ்க்கை செத்துடலாமா என்கிற அளவுக்கு மனம் சோர்வடையும். நாம் அப்படிப்பட்ட நேரங்களில் சோர்ந்து போக கூடாது. நம்பிக்கையின் இருப்பிடமான இயேசுவிடத்தில் கண்களை பதிய வைப்போம். இந்த உலக பாடுகள் மறு உலக மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம் என்பதை மனதில் வைப்போம். பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பார்ப்போம்.

அப்போது நாம் மனம் சோர்ந்து தளர்ந்து போகமாட்டோம் இரத்தம் சிந்தும் அளவுக்கு நமக்காக போராடிய , தன் இன்னுயிரை மன்னுயிர்க்காய் கொடுத்த மாபரனை நினைத்து பார்ப்போம். ஒரு பாவமும் அறியாத மரியன்னையின் வியாகுலங்களை எண்ணி பார்ப்போம். அன்னை நமக்கு எப்பொழுதும் பரிந்து பேசுவார். இயேசுவும் நம்முடனே இருந்து வழி நடத்துவார்.

செபம்: ஆண்டவரே, நாங்கள் நேர்மை உண்மை என்ற வழிகளில் செல்லும்போது ஏற்படும் சோதனைகள் வேதனைகள் அவமானங்கள் இவற்றை எதிர்கொண்டு சோர்ந்து போகாமல் உம் மீது மட்டுமே கண்களை பதிய வைக்கவும், இதற்கும் மேலே ஒரு நித்திய வாழ்வு உண்டு என்பதை கருத்தில் கொண்டு ஓடி செயிக்க வரம் தாரும். மாதாவே எங்களுக்காக திருமகனிடம் பரிந்து பேசுங்க. ஆமென்.

Add new comment

6 + 3 =