மனிதனை உயர்த்தும் கடவுள்

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது - மத்தேயு 5:13. ஆண்டவர் நாம் உலகுக்கு உப்பாயிருக்கிறோம் என்கிறார்.

உணவில் உப்பு இல்லை என்றால் உணவின் சுவையை குறைத்து விடும். மேலும் சில பொருட்கள் நெடுநாள் கெடாமல் இருக்க உப்பிட்டு பாதுகாப்பார்கள். ஒருமுறை மக்கள் எலிசாவை நோக்கி, “இந்நகர் நல்ல இடத்தில் அமைந்துள்ளது  ஆயினும், இங்கு நல்ல தண்ணீர் இல்லை, நிலமும் நற்பலன் தருவதில்லை” என்றனர். அதற்கு அவர் “ஒரு புதுக்கிண்ணத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டுக் கொண்டுவர சொல்லி  நீருற்றின் அருகே சென்று, நீரில் உப்பைக் கொட்டி, “இதோ! ஆண்டவர் கூறுகிறார்: இத் தண்ணீரை நான் நல்லதாக மாற்றியுள்ளேன். இனி மேல் சாவும் இராது; நிலமும் பயன் தரும்” என்றார். அதன்படியே தண்ணீர் வளம் பெற்றது. நிலமும் பயன் கொடுத்தது.

ஆண்டவர் அத்தகைய உப்புக்கு நம்மை ஒப்பிடுகிறார். உப்பு சாரமில்லாமல் போனால் பயனற்றதாகிவிடும். அது போல நாம் இருக்க கூடாது. பயன்தரும் உப்பை போன்று பிறரின் வாழ்வுக்கு சுவை கூட்டுபவர்களாக, பிறருடைய வாழ்வை வளமுள்ளதாக மாற்றுபவர்களாக பிறரை சந்தோசப்படுத்தும் வகையில் வாழ வேண்டும். நாம் இருகின்ற இடத்தில் நம்முடைய உடனிருத்தலால் பிறருக்கு நன்மை ஏற்பட வேண்டும். உப்பை போன்று தனித்தன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

செபம்: ஆண்டவரே, இறைவாக்கினர் எலிசேயு  வழியாகஉப்புக் கலந்த இத்தண்ணீர் தெளிக்கப்படும் இடமெல்லாம் எதிரியின் தாக்குதல் அனைத்தும் தோல்வியுறச் செய்தவரே, நாங்களும் உலகுக்கு உப்பாக இருந்து பிறருடைய வாழ்வில் நன்மை பயக்கவும், தீமைகளை அகற்றவும் எங்கள் வாழ்வு பொருளுள்ளதாக அமைய தூய ஆவியின் அருள் தாரும். தூய ஆவியார் எங்களில் எழுந்தருளி  எங்களை  இடையராது  பாதுகாக்க  வேண்டுமென்று  உம்மை  மன்றாடுகிறோம். ஆமென்.

Add new comment

6 + 0 =