திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 32 ஆவது திருத்தூது இப் பயணம் இன்று தொடங்குகிறது 


Chalice

இன்று மாலையில் தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளுக்கு, தனது 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று, #ApostolicJourney என்ற ஹாஸ்டாக்குடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இப்பயணத்திற்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“இன்று, 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவங்குகிறேன். தாய்லாந்து மற்றும், ஜப்பானிலுள்ள அன்பு நண்பர்களே, இந்நாள்கள், அருளிலும், மகிழ்விலும் நிறைந்திருக்கும் நாள்களாக அமைவதற்கு, நாம் சந்திப்பதற்குமுன், ஒன்றிணைந்து செபிப்போம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், தனது 32வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தையொட்டி, நவம்பர் 19, இச்செவ்வாய் காலையில், உரோம் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, இப்பயணத்திற்காக, அன்னை மரியாவிடம் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தாய்லாந்திற்கு திருத்தந்தை

நவம்பர் 19, இச்செவ்வாய் மாலை 6.20 மணிக்கு வத்திக்கானிலிருந்து, உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்குக் காரில் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவு 7 மணிக்கு, ஆல் இத்தாலியா A330 விமானத்தில் தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்குப் புறப்படுகிறார்.

11 மணி 30 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து பாங்காக் நகரை, நவம்பர் 20, இப்புதன் பகல் 12.30 மணிக்குச் சென்றடைவார். அப்போது இந்திய இலங்கை நேரம், இப்புதன் முற்பகல் 11 மணியாக இருக்கும். விமானநிலையத்தில் அரசு மரியாதையுடன்கூடிய வரவேற்பைப் பெற்று, பாங்காக் திருப்பீடத் தூதரகம் சென்று ஓய்வெடுப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாய்லாந்தில் திருத்தூதுப் பயண நிகழ்வுகள், நவம்பர் 21, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு ஆரம்பமாகும்.   

நவம்பர் 23, வருகிற வெள்ளி காலையில் தாய்லாந்து மக்களிடம் பிரியாவிடை பெற்று, ஜப்பான் செல்வார் திருத்தந்தை. அந்நாட்டில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, நவம்பர் 26ம் தேதி ஜப்பான் நேரம் முற்பகல் 11.35 மணிக்கு டோக்கியோவிலிருந்து உரோம் நகருக்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்று மாலை 5 மணியளவில், திருத்தந்தை உரோம் வந்துசேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: வத்திக்கான் நியூஸ் 

Add new comment

14 + 2 =