அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர் - விடுதலைப் பயணம் 17:11. இந்த நிகழ்ச்சியை கவனிங்க. இஸ்ரவேல் மக்களுக்கு வழி விடாது அமலேக்கியர் போர் செய்கிறார்கள். மோசே கடவுளை நோக்கி கைகளை உயர்த்தி ஜெபிகிறார். 

மோசே தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயிற்று. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டார்கள். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன.

யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார். வெற்றி கண்டனர். அவர்களுக்கு பாதையும் கிடைத்தது.

நாமும் நம் குடும்பங்களில் ஜெபிப்போம். ஒருவர் ஒருவரை ஜெபத்தில் தாங்குவோம். நம் கைகள் ஆண்டவரை நோக்கி இருந்தால் அவர் நம்மை கைவிடமாட்டார். சோர்வுரும் ஆன்மாக்களுக்கு ஜெபத்தில் வேண்டுவோம். 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

உரை: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

ஜெபம்: ஆண்டவரே இந்த அதிகாலையிலேயே உம்மை தேடுகிறோம். எங்கள் ஜெபங்கள் உம்மண்டைக்கு தூபம் போல் வருவதாக. ஆண்டவரே நாங்கள் உம்மை நோக்கி கூப்பிடும் நொடியில் எங்களுக்கு தயவு செய்வீராக. உம் பார்வையில் விலைமதிப்புள்ள நாங்கள் எப்போதும் உம்மை விட்டு விலகாதிருக்க அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 9 =