அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார் - யாக்கோபு 4:10. ஆண்டவர் முன் நாம் நம்மை தாழ்த்தி பணிய வேண்டும். அவர் முன் நாம் ஒன்றுமில்லை. வெறும் களிமண். களிமண்ணால் உருவாக்கி அதன் மீது தம் மூச்சுக்காற்றை ஊதியுள்ளார். இருமாப்பு கொள்ள நாம் யார்? நம்முடைய ஞானம், அறிவு, பட்டம், பதவி, அழகு, சொத்து, சொந்தம், சகலமும் அவரால் நமக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது. இலவசமாக பெற்ற இவற்றில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? 

ஆண்டவரின் உடன்படிக்கை பேழையை தாவீதின் நகருக்கு  எடுத்து வரும் போது தாவீது அரசர் தானொரு அரசன் என பெருமை பாராட்டாமல் தன்னை தாழ்த்தி அதன் முன் நடனமாடி மகிழ்ந்தான். ஆண்டவர் அவரை உயர்த்தினார். நம்மை ஆண்டவர் முன்னிலையில் தாழ்த்துவோம். பணிவோம்.  பிறரை மதிப்போம். அவர் சகலமும் செய்ய வல்லவர். நாம் அவருக்கு பணிந்து அவருடைய குரலுக்கு செவி கொடுத்தால் அவர் நம்மை வான் மட்டும் உயர்த்துவார். உலக வாழ்வில் நல்ல ஒரு உயர்வை தருவார். மறுவாழ்வில் வான் வீடு வரை நம்மை தூக்குவார்.

சிந்தனை : நாம் இருமாப்போடு வணங்கா கழுத்துள்ளவர்களாக வாழ்கிறோமா?. எல்லாவற்றிலும் இறை சித்தத்திற்கு பணிகிறோமா?

செபம்: ஆண்டவரே நாங்கள் எங்களுடைய உண்மை நிலையை அறிந்து பிறரை நேசித்து உமக்கு பணிந்து வாழும் நல்ல மனதை எங்களுக்கு தாரும். ஆமென்.

Add new comment

3 + 10 =