Environmental


a post explains the need to save the mother earth

இப்போது இல்லையெனில் எப்போதும் முடியாது

கடந்த வாரம் தென்கொரியாவின் இஞ்சேன் நகரத்தில் 195 நாடுகளின் பிரதிநிதிகள்,50க்கும் காலநிலை விஞ்ஞானிகள் என எல்லோரும் சந்தித்து முக்கியமான ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த அறிக்கையை தயாரித்தது இயக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பில் இயங்கும் ஐ.பி.சி.சி அமைப்பு, தனிநபர்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ தயாரித்த அறிக்கை அல்ல.

உலகநாடுகள் எல்லோரும் இணைந்து தயாரித்த அறிக்கை, இந்தியா உட்பட 195 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்ட அறிவியல் ஆய்வு அறிக்கை. 6,000 ஆய்வு அறிக்கைகளை ஒருங்கிணைத்து அதில்வந்துள்ள முடிவுகளை வைத்தே இந்த அறிக்கை இப்போது வெளிவந்துள்ளது.

உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன என்கிறது ஐ.பி.சி.சி அறிவிப்பு. இந்த அறிக்கையை மானுடத்தின் இருத்தியலுக்கான அறைகூவலாக உலக நாடுகள் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும்,

"இப்போது இல்லையெனில் எப்போதும் முடியாது" என்று தெளிவாக தெரிவித்து பேரழிவிலிருந்து காப்பாற்ற எல்லோரும் இணைந்து பங்காற்ற வேண்டுமென்றும் காலநிலை விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மானுடத்தின் இருத்தியலே கேள்விக்கு உட்படுத்தப்படும் சமயத்தில் இதுதான் பிரதான பிரச்சனையாக பார்க்கவேண்டிய காலகட்டத்திற்கு மனித சமூகம் வந்துவிட்டது. சூழல் குறித்தும், காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பிரச்சனைகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துச்செல்வதில் எல்லோருக்கும் முக்கிய பங்குள்ளது, அதுவும் ஊடகங்களுக்கு பெரிய அளவில் பொறுப்பும் கடமையும் உள்ளது.

இதன் பொருட்டே இந்த வேண்டுகோள்:

1. அச்சு, காட்சி மற்றும் எந்த இணைய ஊடகமானாலும் சுற்றுச்சூழலுக்கு என தனி குழு அமைக்க முயற்சியுங்கள் . அது, சூழலில் ஆர்வமுள்ள பத்திரிக்கையாளர்களை ஒன்றாக இணைத்து "தனி பீட்" போல் செயல்பட்டால் நன்றாக இருக்கும். 

2. நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் இரண்டு செய்திகளாவது சூழல் சார்ந்த செய்திகளை வெளியிடுங்கள், அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்கள் எதுவாகிலும் சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுங்கள்.

3. சூழல் பிரச்னைகளின் தாக்கம் மக்களிடம் சென்று சேர்வதற்கு அதிக காலம் பிடிக்கும், அதனால் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருந்தால்தான் மக்களை சென்றடைய முடியும், அதனால் சூழல் சார்ந்த விஷயங்களை மக்களிடம் தொடர்ச்சியாக கொண்டு சேர்க்கவேண்டும். 

4. சூழல் சார்ந்த பிரச்சனைகளுக்கான விவாதங்களை தொடர்ந்து நடத்துங்கள்.

5. எந்த துறையை கவனிக்கக்கூடிய பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் எல்லோரையும் இணைத்து, சூழல் குறித்த தொடர் பயிற்சி வகுப்புகளை நடத்துங்கள். எந்த திட்டம், எந்த துறையின் கீழ் வந்தாலும் அதை சூழல் பார்வையில் பார்க்கும் வகையில், புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இந்த பயிற்சிகள் இருக்கட்டும்.

 

எல்லோரும், எங்கள் கோரிக்கைகளை உள்வாங்கிக்கொண்டு, இது குறித்து தொடர்செயல்பாடுகளை முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறோம். முக்கியமான வேண்டுகோளாக வைக்கிறோம். - பூவுலகின் நண்பர்கள்

Add new comment

2 + 1 =