ஐந்து திருத்தந்தையர்களுக்கு பணியாற்றிய கர்தினால் பவுலோ சார்தி இறப்பிற்கு திருத்தந்தை இரங்கல் செய்தி அனுப்பினார் 


The Arlington Catholic Herald

ஜூலை 13, கடந்த சனிக்கிழமையன்று, தன் 84வது வயதில் இறையடி சேர்ந்த இத்தாலியக் கர்தினால் பவுலோ சார்தி (Paolo Sardi) அவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

இறையியல் வல்லுனராகவும், குருத்துவ உணர்வுடனும் செயல்பட்ட கர்தினால் சார்தி அவர்கள், தன் அறிவு மற்றும் ஞானத்தின் துணைகொண்டு, திருத்தந்தையர்கள் புனித ஆறாம் பவுல், முதலாம் ஜான் பால், புனித இரண்டாம் ஜான் பால், 16 ஆம் பெனடிக்ட் ஆகியோரின் படிப்பினைகளில் சிறப்புப் பங்களிப்பு வழங்கியுள்ளதை, தன் செய்தியில் பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்திற்கு ஆற்றிய பணி வழியாக அவர் வழங்கிய சாட்சியத்திற்கு நன்றி கூறும் அதேவேளை, அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிப்பதாகவும், கர்தினால் சார்தி அவர்களின் மரணம் குறித்து அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

1934 ஆம் ஆண்டு வட இத்தாலியின் ரிக்கால்தோனே (Ricaldone) எனுமிடத்தில் பிறந்த கர்தினால் சார்தி அவர்கள், இம்மாதம் 13 ஆம் தேதி, சனிக்கிழமையன்று இறையடி சேர்ந்ததைத் தொடர்ந்து, திருஅவையில், கர்தினால்களின் எண்ணிக்கை 219 ஆகக் குறைந்துள்ளது. இதில் 120 பேர், திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும்  தகுதியுடைய, 80 வயதிற்குட்பட்டவர்கள்.

கர்தினால் சார்தி அவர்களின் அடக்கச் சடங்குத் திருப்பலி, இத்திங்கள் காலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் இடம்பெற்றது.

(நன்றி: வத்திக்கான் நியூஸ்) 

Add new comment

12 + 1 =